
Written by S NAGARAJAN
Date: 21 December 2015
Post No. 2410
Time uploaded in London :– காலை 5-56
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
அறிவியல் துளிகள் தொடரில் 11,டிசம்பர்,2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளியான கட்டுரை
மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!
ச.நாகராஜன்
“அவர் (டாக்டர் ஸ்டீவன்ஸன்) ஒன்று மாபெரும் தவறை இழைத்திருக்க வேண்டும். அல்லது இருபதாம் நூற்றாண்டின் கலிலியோ என்ற (மாபெரும் புகழுடன்) அறியப்பட வேண்டும்”
– டாக்டர் ஹரால்ட்
லியஃப் (டாக்டர்ஸ்டீவன்ஸனின் மறுபிறப்பு ஆராய்ச்சி பற்றி ஜர்னல் ஆஃப் நெர்வஸ் அண்ட் மென்டல் டிஸீஸ் பத்திரிகையில் எழுதியது)

உலகிலுள்ள மறுபிறப்பைப் பற்றி அறிவியல் ரீதியாக அணுவளவும் பிசகாது ஆய்வு நடத்தி உலகைப் பிரமிக்க வைத்தவர் டாக்டர் ஐயான் ஸ்டீவன்ஸன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் 3000 குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளுக்கே முன்பிறப்பு பற்றிய பல தகவல்கள் துல்லியமாகத் தெரிகின்றன என்று இவர் கண்டு பிடித்தார். மிகச் சிறு வயதில் அப்போது பிறந்திருக்கும் குடும்பத்தினரின் பழக்க வழக்கங்கள், நடத்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடக்கும் குழந்தைகள் இவரது கவனத்தை கவர்ந்தன. உலகமெங்கும் சுற்றினார். அப்படி முன்பிறவி பற்றிக் கூறும் தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்.
தனது ஆய்வில் இவர் சேர்த்த இன்னொரு முக்கிய அம்சம் உடல் அடையாளங்கள் குறித்தது. இப்பிறவியில் உடலில் காணப்படும் வடுக்கள், தழும்புகள் முற்பிறவி வாழ்க்கையுடன் ஒத்திருப்பது இவரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த அங்க அடையாளங்கள் முற்பிறவியின் “கதைகளைத்’ தெரிவிக்கும் ஒரு அம்சம் என்பதையும் இவர் கண்டுபிடித்தார்.
ஹிப்நாஸிஸ் அல்லாத அறிவியல் ரீதியிலான ஒரு அணுகுமுறையை இவர் மேற்கொண்டதால் இவரை யாரும் ஏளனம் செய்யவோ அல்லது மறுத்துப் பேசவோ முடியவில்லை.
தனது அறை ஒன்றில் விசேஷ பேழை ஒன்றை இவர் பூட்டி வைத்துள்ளார். அதை எப்படித் திறப்பது என்ற இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தனது மறுபிறப்பில் அல்லது இன்னும் ஏதாவது ஒரு வகையில் அந்தப் பேழையை நிச்சயம் தன்னால் திறக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இப்போது இறந்து விட்ட அவர் எப்படி அந்தப் பேழையை எப்போது திறக்கப் போகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நாள் என்று வருமோ!
20 Cases suggestive of reincarnation என்ற அவரது புத்தகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.
அவர் தரும் சில சுவையான முற்பிறவி சம்பவங்களில் முக்கியமான ஒன்றான ‘ஸ்வீட் ஸ்வர்ணலதா’ கேஸைப் பார்ப்போம்:-

ஸ்வர்ணலதாவிற்கு மூன்று வயது ஆகும் போது அவள் தனது முன்பிறவி பற்றிய 50 நுணுக்கமான தகவல்களைத் தந்தாள். அத்தனையையும் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்தார்.
ஸ்வர்ணலதா மிஸ்ரா 1948இல் இந்தியாவில், மத்யப்ரதேசத்தில் பிறந்த குழந்தை. ஒரு நாள் தந்தையுடன் கத்னி என்ற இடத்தின் அருகில் பயணப்பட்ட குழந்தை திடீரென்று டிரைவரை ஒரு சாலையைக் காட்டித் திரும்பச் சொல்லி “தனது வீட்டிற்குப்” போக வேண்டும் என்றாள். அங்கு நல்ல டீ கிடைக்கும் என்றாள் அவள்!
பின்னர் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் அவள் கூறலானாள். அவள் முந்தைய ஜென்மத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் தான். பெயர் பியா பாதக். பாதக்கிற்கு இரண்டு மகன்கள்.
ஜுர்குடியா என்ற இடத்தில் இருந்த தனது வீடு பற்றிய சிறு சிறு விவரங்களையும் கூட விடாமல் அவள் சொன்னாள். வீட்டின் முன்னால் ஒரு ரயில் லைன். பின்னால் பெண்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அவள் குறிப்பிட்டாள். தனது காரைப் பற்றிய விவரத்தையும் கூட அவள் குறிப்பிட்டாள். (ஐம்பதுகளில் கார் என்பதே அரிது)
தொண்டையில் வலி வந்ததால் ஜபல்பூரில் டாக்டர் எஸ்.சி. பாப்ரட்டிடம் சிகிச்சை பெற்றும் பலனின்றி (1939ஆம் ஆண்டு) இறந்ததாக அவள் சொன்னாள்.
1959ஆம் ஆண்டு பியாவின் கணவன், இரு மகன்கள், சகோதரர் ஆகியோர் முன்னறிவிப்பின்றி ஸ்வர்ணலதாவைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சகோதரனை அன்புடன் ‘பாபு’ என்று பெயர் சொல்லி அழைத்தாள் ஸ்வர்ணா! தனது கணவனான சிந்தாமனி பாண்டே அருகில் வந்த போது, ஸ்வர்ணலதா வெட்கத்துடன் அவரைப் பார்த்தாள்! தனது மகன்களையும் அவள் அடையாளம் கூறினாள். அவர்கள், தாங்கள் அவளுடைய மகன்கள் இல்லை என்று கூறிய போதிலும் கூட, அவள் அதனால் ஏமாறவில்லை. உள்ளது உள்ளபடி அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்தாள்!
பின்னர் 1200 ரூபாயை மறைத்து வைத்திருந்ததைத் தன் ‘கணவரிடம்’ சொல்ல, பாண்டே அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பிரமிப்புடன் ஒப்புக் கொண்டார்.
பின்னர் பியாவை அவளது முன் ஜென்ம வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான் இறந்த பிறகு செய்யப்பட்ட அனைத்து மாறுதல்களையும் சொன்னதோடு அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவரையும் அடையாளம் கண்டு சொன்னாள்.

சரி, வளர வளர இந்த முன் ஜென்ம ஞாபகங்கள் ஸ்வர்ணலதாவைப் பாதித்ததா?
தாவரப் படிப்பில் ((Botany) மேற்படிப்பை முடித்த ஸ்வர்ணா தனது வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்றாலும் பழைய கத்னியை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன, அந்த பணக்கார வாழ்க்கை போல வருமா, என்ன என்றாள். ஆனாலும் கூட இப்போதைய மிஸ்ரா குடும்பத்தினரிடம் அவள் அன்பு குறையவில்லை! அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த ஸ்வர்ணலதா இந்த ஜென்மத்தில் தகுந்த மணவாழ்க்கையை மேற்கொண்டாள்!
அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் வரும் திருப்பங்கள், ஹிட்ச்காக் படங்களின் சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் விஞ்சிய உண்மைச் சம்பவங்களை ஐயான் ஸ்டீவன்ஸன் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்க்கும்.
ஸ்டீவன்ஸனின் ஆய்வுகள் முன் பிறவி பற்றி நமக்கு நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தும்; ஏற்கனவே இருந்தால் அது வலுப்படும்!
ஸ்டீவன்ஸன் காட்டிய வழியில் இன்றும் பல விஞ்ஞானிகள் இந்த மறுபிறவி மாயத்தை ஆராய்ந்து வருகின்றனர்!
அறிவியல் அறிஞர் வாழ்வில்
பிரிட்டனின் புகழ் பெற்ற ராஜதந்திரி, (முதல் உலக) போர்க்கால பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ((Lloyd George 1863-1945) அவரை புது இடங்களை ஆராயும் சாகஸக்காரரான ராபர்ட் ஃபால்ஸன் ஸ்காட் (Robert Falson Scott) என்பவர் சந்தித்து தனது துருவ ஆராய்ச்சிப் பயணம் பற்றி சொல்லி அந்தப் பயணத்திற்கு ஏராளமாக செலவாகும், அதற்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். உடனே லாயிட் ஜார்ஜ் பிரபலமான ஒரு பணக்காரரிடம் தன் பெயரைச் சொல்லி உதவி பெறுமாறு சொன்னார். அந்த நபர் அரசியலில் செல்வாக்கு உள்ளவரும் கூட.
சிறிது நாள் கழித்து ஜார்ஜை சந்தித்த ஸ்காட் நன்றி தெரிவித்தார். ‘எப்படி அவரிடம் பணம் வாங்கினாய்?’ என்று கேட்டார் ஜார்ஜ்.
“உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆயிரம் பவுண்டுகளை உடனே தந்தார். உங்களையும் நான் துருவத்திற்கு அழைத்துச் சென்றால் இருபதினாயிரம் பவுண்டுகள் தருவதாக வாக்களித்தார். அத்தோடு உங்களை துருவத்திலேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்தால் நிச்சயம் பத்து லட்சம் பவுண்டுகள் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்!” என்றார் ஸ்காட்!
அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!!
***********
You must be logged in to post a comment.