
WRITTEN BY S NAGARAJAN, BANGALORE
Date: 4 January 2016
Post No. 2457
Time uploaded in London :– 5-40 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

இராமாயண வழிகாட்டி
இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு
ச.நாகராஜன்
மஹாகவி கம்பனின் திறமை
மஹாகவிகளின் மனம் ஒரு பெரும் சாகரம் போன்றது. அகன்றது. ஆழ்ந்தது. பல்வேறு நற்பொருள்களைக் கொண்டுள்ள பாற்கடல் போன்றது. அங்கு நாம் விரும்பித் தேடினால் கற்பக மரம் கிடைக்கும் காமதேனு கிடைக்கும்!
மஹாகவி கம்பனின் இராம காதை பாற்கடல் போல அமைந்த சுவை சாகரம்!
சுந்தர காண்டத்தில் ஒரு பாடல்.(நிந்தனைப் படலம் 50ஆம் பாடல்)
மனிசனால் அழிவா?
இராவணன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். இதனால் வெகுண்ட சீதை, “உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. அழியப் போகிறாய்” என்று கூறுகிறாள்.
கேவலமான ஒரு “மனிசனால்” தனக்குச் சாவு என்பதை நினைத்தாலே இராவணனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.
ஆனால் இங்கு சீதை ‘இராவணஜித்’தைப் பற்றிச் சொல்கிறாள்.
இராவணஜித் என்றால் இராவணனை வென்றவன் என்பது பொருள்.
இராவணனை வெல்ல இருப்பவன் இராமன் ஆயிற்றே. அப்படியானால் இராவணஜித் யார்?
மானுயர் இவர் என மனங் கொண்டாயோ எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்
தானொரு மனிதனாற் தளார்ந்துளா எனில்
தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்
பாடலின் பொருள்: இந்த இராமனை மனிதன் என்று அலட்சியமாக நினைத்தாய் எனில் (ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்!)
காட்டில் உயர்ந்து தோன்றுகின்ற மலைகளை நிகர்த்த கார்த்த வீர்யாஜுனன் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வலிமை ஒருங்கினான். அல்லவா? அந்த பரசுராமனின் வலிமையையும் ஒடுக்கிய தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித்துப் பார்!
இங்கு கார்த்த வீர்யார்ஜுனனைப் பற்றியும் பலராமனைப்பற்றியும் சீதை குறிப்பிடுவதை கவிஞருக்கே உரிய தனித் தன்மை மூலம் ஒரு இரகசியக் குறிப்பை அறிவிப்பதில் கம்பன் தன் திறமையைக் காட்டுகிறான்.
கார்த்தவீர்யார்ஜுனனே இராவணஜித்
முன்னொரு காலத்தில் நடந்த விஷயம்!
அனைவரையும் வெல்ல வேண்டும் என்ற வெறியில் திக்விஜயம் செய்த இராவணன் மாகிஷ்மதி நகருக்கு வந்தான். அதை ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்ட மாவீரன்.
அந்த நகரத்தில் உள்ளோர்,” எங்கள் மன்னர் தமக்குரிய பெண்களுடன் நீர் விளையாட நர்மதை நதிக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினர்.
உடனே இராவணன் நர்மதை நதிக்கு வந்தான். அதில் நீராடி மணலால் சிவலிங்கம் அமைத்துச் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.
நர்மதியின் மேற்குக் கரையில் இருந்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு தனது நீர் விளையாடலுக்கு நர்மதை நதி போதுமானதாக இல்லை. ஆகவே ஐநூறு கைகளினால் ஓடுகின்ற நீரைத் தடுத்து அணை கட்டி மீதி இருக்கும் ஐநூறு கைகளைக் கொண்டு பல வித விளையாட்டுக்களைச் செய்து மகிழ ஆரம்பித்தான்.
எதிர்த்து ஓடி வரும் நீரானது இராவணன் பக்கம் வரவே தனது மணலால் ஆன சிவலிங்கம் அழிந்து விடுமே என்று ஆவேசப்பட்ட இராவணன் கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.
அவனோ இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே.
தன் இருபது கரங்களினால் இராவணனைப் பற்றித் தூக்கினான். இதர 980 கைகளினால் அவனைத் துன்புறுத்தியவாறே மாகிஷமதி நகர் சென்று அங்கு இராவணனைச் சிறையில் அடைத்தான்.
நடந்ததை அறிந்த விபீஷணன் ஓடோடிச் சென்று பாட்டனாராகிய புலஸ்தியரிடம் நடந்ததைச் சொன்னான்.
உடனே புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்தார். மத்யஸ்த பேச்சு துவங்கியது.
உனக்கு “இராவணஜித்” என்ற பட்டப்பெயரைத் தருகிறேன். அவனை விட்டு விடு என்றார்.
திக்விஜயம் செய்ய வந்தவனையே வெல்லும் பட்டம் தனக்குக் கிடைக்க இராவணனை சிறையிலிருந்து விடுவித்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

இராவணஜித்தை வென்ற பரசுராமன்
அப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஒரு சமயம் ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் சென்று அங்கு விருந்துண்டு மகிழ்ந்தான். அங்கிருந்த பல வளங்களுக்கும் காரணம் அவரிடமிருந்த ஓமதேனு என்பதை அறிந்த அவன் அதைக் கவர்ந்து சென்றான்.
இதை அறிந்த ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் வெகுண்டெழுந்தார்.
அவனுடன் போர் செய்யப் புறப்பட்டார். கார்த்த வீர்யனின் பதினோரு அக்ஷௌகினி சேனையை அழித்தொழித்து அவனது ஆயிரம் தலைகளையும் தோள்களையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வெற்றி கொண்டார்.
சீதை இந்த வரலாறை இலேசாக ஞாபகப்படுத்தினாள் இராவணனுக்கு.
பரசுராமனை வென்ற இராமபிரான்
“உன்னை வென்றவனை- இராவணஜித்தை – கார்த்தவீரியனை வென்றானே பரசுராமன், அவனையும் வென்ற மாவிரன் இராமன்.
உன்னை வென்றவனை வென்றவனை வென்றவன் அவன்” – இது தான் சீதை சொன்ன சேதி!
அழகுற நான்கே அடிகளில் கம்பன் மாபெரும் வரலாற்றைச் சொல்லி தன் நயத்தையும் தான் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட நாயகன் நயத்தையும் காட்டுகிறான்.
கம்பன் போல் ஒரு கவிஞன் இனிப் பிறப்பானா!
*******
You must be logged in to post a comment.