
COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 8 January 2016
Post No. 2470
Time uploaded in London :– காலை 8-04
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
அசுரர் குல மன்னன் ஹிரண்யகசிபு மூவுலகமும் நடுநடுங்க ஆட்சி செய்தான். ஈரேழு லோகங்களையும் வெல்ல ஆசை கொண்டான். நேரம் கிடைத்த போதெல்லாம் தேவர்களைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். இவ்வளவு பலம் எப்படி வந்தது? கடும் தவத்தினால் பெற்ற பலம் இது. ஆகையால் தேவர்கள் ஏது செய்வதென்று அறியாது திகைத்தனர். தேவ லோகத்தையும், விஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தையும் வசப்படுத்த எண்ணினான்.
ஹிரண்யகசிபு, ஒரு நாள் வைகுண்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கவே, விஷ்ணு உள்பட எல்லா தேவர்களும் ஓடி ஒளிந்தனர். அவன், எப்படியாவது விஷ்ணுவைப் பிடித்து தனது சக்தியைக் காட்டவேண்டுமென்று தேடோ தேடென்று தேடினான். பூலோகம், புவர் லோகம் சுவர்லோகம் – எங்கு தேடினும் விஷ்ணுவைக் காணவில்லை. அவனுக்கு ஒரு புறம் ஏமாற்றம்- மறுபுறம் பெருமிதம்; விஷ்ணுவையே ஓடி ஒளிய வைத்துவிட்ட இறுமாப்பு.

விஷ்ணு ஓடி, ஒளிந்த செய்தி ஈரேழு 14 லோகங்களிலும் காட்டுத் தீ போல பரவியது. நாரதர் காதிலும் விழுந்தது. ‘வெறும் வாயையே மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல’ ஆயிற்று. அட, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது’. விடக்கூடாது என்று விஷ்ணுவின் இருப்பிடத்தை அறிந்து அங்கே சென்றார். இந்த தடவை, விஷ்ணுவின் குடுமி, தன் கையில் சிக்குவது உறுதி என்ற இறுமாப்புடன நாரதர் சென்றார்.
முதலில் உரிய வணக்கங்களைச் செலுத்திவிட்டு, கிண்டல் தொனியில், “ஐயா,பெரியவரே! ஹிரண்யகசிபு படையெடுத்து வந்தபோது, தேவலோகமே, காலியாமே! நீரும் ஓடிப் போய் ஒளிந்தீராமே! ஹிரண்யகசிபு கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் ஒளிந்து கொண்டுவிட்டு இப்போது நடமாடுகிறீரே! என்ன விஷயம்? எங்கு ஒளிந்தீர்? என்று நக்கல் செய்தார்.
நாரதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, விஷ்ணு சொன்னார்: “ஐயா, மஹா பக்தர் நாரதரே! நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஹிரண்யகசிபுக்கு வெகு அருகில்தான் இருந்தேன். அவனுக்குத் தெரியவில்லை!
நாரதர்: என்ன? அவனருகில் இருந்தால், எப்படி ஐயா, உம்மைக் கண்டுபிடிக்காமல் போனான்?
விஷ்ணு: நான் அவனது இதயத்தில் உட்கார்ந்திருந்தேன். எல்லோர் இதய கமலத்திலும் நான் வீற்றிருப்பதை நீர் அறிவீரே! இதில் என்ன வியப்பு? ஹிரண்யகசிபு, அகந்தையே வடிவெடுத்தவன். அவனது தலைக் கனத்தால், அவன் என்றும் குனிந்ததும் இல்லை; பணிந்ததுமில்லை. ஆகவே அவனால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் குனிந்து என்னைத் தேயிருந்தால்கூட கண்டுபிடித்திருக்கலாம். அடக்கமும் பணிவும் இருந்திருந்தால் அவனுள்ளேயே நான் இருப்பதை அறிந்திருப்பான் – என்றார்.
நாளை காலை பத்திரிக்கைகளுக்குச் சூடான செய்தி தரலாம் என்று ஆர்வத்துடன் போன நாரதருக்கு விஷ்ணுவின் பதில் நல்ல பாடமாக அமைந்தது.
இந்தக் கதையின் நீதி என்ன வென்று இக்கதையை விளம்பிய ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாஸ் சொல்கிறார்:- அகந்தையை விட்டால் இதய கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனை உணரலாம், காணலாம்.
–சுபம்–
You must be logged in to post a comment.