சிவனடியார்கள் பாடிய முதலைப் பாடல்கள் – 1 (Post No. 2475)

sankara croc

Picture: Adi Shankara and Crocodile

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 10 January 2016

 

Post No. 2475

 

Time uploaded in London :–  7- 15 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 1

ச.நாகராஜன்

 crocodile-4

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..

 

ஒரு குளம். அதிலே ஒன்பது துறைகள். ஒரு முழக் குளம் அதன் அகலமோ அரை முழம் தான். அதற்குள் ஐந்து முதலைகள்.அவைகள் உங்களை, என்னையும் தான், படாத பாடு படுத்துகின்றன.

 

தப்ப வேண்டுமே, வழி என்ன?

 

என்ன, புதிர் ஏதாவது போடப்படுகிறதா?

விடுங்கள், அப்பரே, “நான் பிதற்றுகின்றேன் என்று சொல்கின்ற பாடலுக்கு நேரடியாகப் போவோம்.

திரு ஏகம்பத்தில் பாடிய ‘நம்பனை எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):

 

 

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்       

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து  பெருமுழைவாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே

 

 

ஒரு முழம் நீளமும் அரை முழம் அகலமும் கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்ம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக!

 

 

அப்பரா பிதற்றுகிறார். அவர் அருளாளர். அவர் நமக்கு வழிகாட்டப் பிதற்றுகிறார். ‘

 

‘ஏகம்பம் மேவினாரைக் கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே’ என்ற இரகசியத்தை ஐந்தாம் பாட்டில் அறிவித்து நமக்கு உய்யும் வழியைக் காட்டுகிறார்.

ஐந்து  முதலைகள் பிடித்ததை விடாது. அதைப் பிடித்து அகற்ற சிவபிரான் அருள் அல்லவா, வேண்டும். அதைத் தான் சுட்டிக் காட்டுகிறார் அருளாளர்.

 

 

திருமூலர் காட்டும் குளமும் வலை வீசும் சிவனும்

 

இதே கருத்தைத் திருமூலரும் சொல்கிறார்:

திருமந்திரம் பாடல் எண் 2031 (ஐந்திந்திரயம் அடக்கு முறைமை)

 

குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்

வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

 

திருமூலர் பாடலின் பொருள்: நமது உடல் ஒரு முழம் (தலை

முதல் கழுத்தின் கீழ் இதயம் வரை) அகலம் அரை முழம். காதுக்குக் காது உள்ள அகலம். இந்தக் குளத்தில் ஐந்து மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. இந்த ஐந்து பொறிகளை வலை வீசிப் பிடிக்க பரவன் (மீனவன்) ஒருவனின் அருளினால் மட்டுமே முடியும். அந்த சிவபிரானின் அருள் கிடைத்தால் துன்பமே இல்லை!

 

மனித முயற்சியால் ஐம்புலன்கள் அடக்குதல் கடினம். ஆனால் அதே முயற்சியால் சிவனை நினைந்து பணிந்தால் அவன் அருள் கிடைக்கும். அப்போது ஐந்து பொறிகளும் அடங்கும்.

croc2

மணிவாசகர் காட்டும் முதலை

 

 

அப்பரைப் போலவே மாணிக்கவாசகரும் முதலை பயத்தைக் கொண்டவர் தான்! ஆனால் இது வேறு விதமான முதலை.

பாடலைப் பார்ப்போம்:

 

முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி   விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கூன் மிடைந்த சிதலைச் செய் காயம் போறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கை பங்காவென் சிவகதியே

(நீத்தல் விண்ணப்பம் பாடல் 41)

 

மகளிரின் காம நீரில் மூழ்கி நடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே என இறைஞ்சுகிறார் மணிவாசகர்.

 

முதலைச் செவ்வாய்ச்சியர் – முதலை போலக் கொண்டதை விடாது பற்றி நிற்கும் மகளிர்

 

வெந்நீர் – சுடுகின்ற காம நீர் (இளமைக்காலத்தில் அது விருப்பமாக இருந்தது. இப்போது வெறுப்பாக இருக்கிறது)

வெம்+நீர் = வெந்நீர் என்பதை விருப்பம் மற்றும் கொடுமை ஆகிய இரு அர்த்தங்களில் நோக்க வேண்டும்.

கடிப்ப என்ற வார்த்தைக்கும் இரு பொருள் உண்டு. ஒன்று மணப்ப என்ற பொருளைத் தரும் இன்னொரு பொருள் வெறுக்க என்பதாகும்.

 

விதலை – நடுக்கம்; விடக்கு ஊன் – தசைத் திரள் சிதலை – நோய் திதலை – தேமல்

 

மங்கையர் மயக்கிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்டருள். ஆட்கொண்டு விடாமல் விடுதல் முறையோ முறையோ என வேண்டுகிறார் மணிவாசகர்.

 

இப்படிப் பல முதலைப் பாடல்கள் உண்டு பன்னிரு திருமுறைகளில்.

 

Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

 

இரண்டைப் பார்த்தோம்; இன்னும் இரண்டை அடுத்துப் பார்ப்போம்!

*******

Leave a comment

Leave a comment