
WRITTEN BY S NAGARAJAN
Date: 25 March 2016
Post No. 2660
Time uploaded in London :– 6-21 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
விவேகானந்த அமுதம்
எங்கும் நிறைகின்ற பொருளே!
ச.நாகராஜன்

கிழவியின் வலி!
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் மீது வீழ்ந்த அடி எல்லோர் மீதும் பட்ட ‘பிட்டுக்கு மண் சுமந்த கதையை’ நாம் அறிவோம்.
எங்கும் இருப்பதை உணர்த்துபவன் இறைவன் மட்டுமல்ல. அந்த அனுபவத்தை தீர்க்கமாக உணர்ந்து அவனுடன் ஒன்றி விட்ட அடியார்களும் எங்கும் இருப்பதையும் எங்கும் நடப்பதையும் அறிய வல்லவர்கள்.
ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத சம்பவங்களைக் காண்போம்.
மேலை நாட்டில் ஓய்வின்றி உழைத்ததால் ஸ்வாமிஜியின் உடல் நலம் குன்றி இருந்தது. அவர் தாயகம் திரும்பியவுடன் அவர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் வ்ற்புறுத்தினர். அதை ஏற்று ஸ்வாமிஜி டார்ஜிலிங் சென்றார்.
அங்கு ஒரு நாள் காலை நடைப்பயிற்சியின் போது ஒரு வயதான கிழவி தன்னால் சுமக்க முடியாத சுமையைச் சுமந்து செல்வதைக் கண்டு வேதனையுற்றார்.
அவருடன் கூடச் சென்றவர்கள் ஸ்வாமிஜி படும் துன்பத்தைக் கண்டு அவர்களும் வேதனைப்பட்டனர்.
திடீரென்று எதன் மீதோ தடுக்கி அந்தக் கிழவி கீழே விழுந்தாள். அவளது விலா எலும்புகளில் சரியான அடி. அவள் வலி தாங்காமல் அலறினாள்.
அதே சமயம் ஸ்வாமிஜியும் அலறினார். “என்னால் நடக்க முடியாது. பயங்கரமான வலி” – என்றார் அவர்.
கூட இருந்த சீடர்கள், “எந்த இடத்தில் வலிக்கிறது, ஸ்வாமிஜி?” என்று கேட்டனர்.
கிழவிக்கு அடிபட்ட அதே இடத்தை – விலா எலும்புகளைக்- காண்பித்த ஸ்வாமிஜி, “இங்கே தான்” என்றவர், அந்தக் கிழவிக்கு எப்படிப்பட்ட அடி தெரியுமா?” என்றார்.
அனைவரையும் தானாகவே பாவித்த ஸ்வாமிஜியின் இந்த வாழ்க்கைச் சம்பவம் அவர் எப்படிப்பட்ட இரக்க சுபாவம் உள்ளவர், யார் எங்கு துயருற்றாலும் உடனே அவர் மனம் என்ன பாடுபடும் என்பதைக் காட்டும் சம்பவம்!
ஸ்வாமிஜி தனியே இருக்கும் போது மனித குலம் படும் துன்பத்தக் கண்டு அழுவார். அப்படி ஒரு இரக்க மனோபாவம் அவருக்கு.
பிஜிக்கு அருகே வெடித்த எரிமலை!
பேலூர் மடத்தில் ஸ்வாமிஜி தங்கி இருந்த போது அவருக்கு அடுத்த அறையில் ஸ்வாமி விஞ்ஞானானந்தா தங்கியிருந்தார்.
ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தன் அறையிலிருந்து வெளியே வந்த அவர் ஸ்வாமிஜி அமைதியின்றி தவித்தவாறே நடப்பதைக் கண்டார். ஆச்சரியப்பட்ட அவர் ஸ்வாமிஜியிடம், “ என்ன ஸ்வாமிஜி, தூங்கவில்லையா? தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.
“நன்றாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு அதிர்ச்சி. உடனே எழுந்து விட்டேன். நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு பெரிய விபத்து நேர்ந்திருக்கிறது. அதில் ஏராளமானோர் உயிரை இழந்திருக்க வேண்டும்”. என்றார் ஸ்வாமிஜி.
ஸ்வாமி விஞ்ஞானானந்தா இதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இங்கே ஒரு சிறிய அறையில் படுத்திருப்பவருக்கு உலகில் நடக்கும் பெரிய விபத்து எப்படித் தெரிய முடியும்?
மறுநாள் பேப்பர் வந்த போது தான் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பிஜிக்கு அருகில் ஒரு எரிமலை வெடித்து ஏராளமானோர் அதில் உயிரை இழந்திருந்தனர். ஸ்வாமிஜி எந்த நேரத்தில் விபத்து நேர்ந்ததாக உணர்ந்தாரோ சரியாக அதே நேரத்தில் அந்த எரிமலை வெடித்த விபத்து நேர்ந்திருந்தது!
ஸ்வாமிஜி எங்கும் நிறைகின்ற பொருளை உணர்ந்தவர். அதனால் அவரும் கூட எங்கும் நிறைகின்ற பொருளாக ஆனவர்!
********
You must be logged in to post a comment.