
WRITTEN BY S NAGARAJAN
Date: 15 April 2016
Post No. 2725
Time uploaded in London :– 9-38 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
வேத வழி
இதற்கு முந்தைய மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் நான்காவது கட்டுரை இது!
பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -4
(யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா)
ச.நாகராஜன்

யோகம் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதை எட்டிய பெரியவர் யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா.
1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.
யோகா முறையை அதன் அற்புத பலன்களை நிரூபித்து எங்கும் பரப்பிய இவரது வாழ்க்கை முழுவதும் அதிசயமான சுவையான சம்பவங்கள் நிறைந்த ஒன்றாகும்.
மைசூர் மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் (1884-1840) தன் தாயாரின் 60வது பிறந்த தினத்தைக் கொண்டாட காசி சென்றார். அங்கு யோகி கிருஷ்ணமாசார்யாவின் பெருமையைக் கேட்டறிந்து அவரைச் சந்தித்தார். தம்முடன் மைசூர் வருமாறு அவரை அழைத்தார். அதை ஏற்ற கிருஷ்ணமாசார்யா மைசூருக்குக் குடியேறினார். மைசூர் அரண்மனையில் யோகம் கற்பிக்க ஆரம்பித்தார்.
யோகத்தின் அபூர்வ ஆற்றல்களைப் பரப்பும் விதமாக தானே ப்ல நேர்முக செய்முறை விளக்கங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் செய்து காண்பித்தார்.
தனது நாடித்துடிப்பை அவர் நிறுத்திக் காட்டினார். உலகமே அதிசயித்தது.
வெறும் கையினால் ஓடுகின்ற காரை நிறுத்திக் காட்டினார். தனது பற்களால் கனமான பொருள்களைத் தூக்கிக் காட்டினார்.
மைசூர் மஹாராஜாவின் மறைவுக்குப் பின்னர் சென்னையில் குடியேறிய அவர் அங்கு யோகா பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார்.
ஆயுர்வேதத்திலும் மிகுந்த பயிற்சி உடையவராதலால் பல நோய்களைக் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றலும் அவருக்கு இருந்தது.
யோக மகரந்தம், யோக ரகஸ்யம் உள்ளிட்ட பல் நூலகளை அவர் இயற்றியுள்ளார்.
1935ஆம் ஆண்டில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தெரீஸ் ப்ராஸ் என்ற கார்டியாலஜிஸ்ட் (There Brosse) முன்னர் அவன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டினார். தனது கருவி மூலம் அவரது இதயத்துடிப்பைக் கண்காணித்த ப்ராஸ் அது ஜீரோவைக் காட்டவே திகைத்துப் போனார். மருத்துவ ரீதியாக யோகி கிருஷ்ணமாசார்யா‘இறந்து விட்டதாகவே’கூற வேண்டும் என்றார் அவ்ர். பல வினாடிகள் இந்த நிலை நீடித்தது. பின்னர் இயல்பான நிலைக்கு அவர் வர இதயத்துடிப்பு வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது!
1961ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இப்படி இதயத்துடிப்பை நிறுத்துவோரை ஆராய வந்த ஒரு குழுவினர் முன்னும் அவர் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். உலகமே யோகத்தின் அற்புத ஆற்றலைக் கண்டு வியந்தது!
96ஆம் வயதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் மறுத்து விட்டார். படுக்கையில் இருந்தவாறே பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை குணப்படுத்திக் கொண்ட அவர் நூறாண்டு நிறை வாழ்வை வாழ்ந்தார்.
அவருக்கு யோகாவில் பல சிஷ்யர்கள் உருவாயினர். அவர்கள் அவர் காட்டிய வழியில் யோக முறையைப் பரப்பும் நற்பணியை மேற்கொண்டனர்.
நவீன அறிவியல் யுகத்தில் யோகாவின் ஆற்றலையும் பெருமையையும் உலகிற்குக் காண்பித்த அவர், யோகா நெறியின் படி வாழ்ந்தால் நூறு என்ற பூரண வயதை எட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

வேத வழியில் வாழ்ந்த பெரியோர்களின் பட்டியலில் யோகி கிருஷ்ணமாசார்யாவுக்குத் தனியிடம் உண்டு.
***** (அடுத்த கட்டுரையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும்)
You must be logged in to post a comment.