
Compiled BY S NAGARAJAN
Date: 21 April 2016
Post No. 2743
Time uploaded in London :– 9-15 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தமிழ் என்னும் விந்தை
கவிதைச் சித்தன் கும்மாளம்!
புலவர் குடந்தை வேலன்
ச.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)
கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.
‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.
இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.
நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.
கவிதைச் சித்தன் கும்மாளம்!
எழுதியவர் குடந்தை வேலன்
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த
அண்டப் பெருவெளியும் – மிகக்
கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்
குடுக்கையில் நின்றாடும்
வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு
வீணர்களே வாரும் – இந்த
மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்
மந்திரத்தில் பாரும்
சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்
சட்டென ஓங்குது பார் – எழில்
சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்
சிலிர்ப்பு கிளம்புது பார்
ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே
அடக்கி மடக்கிடுவோம் –கர்ம
சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்
சிந்தில் ஒடுக்கிடுவோம்
வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த
மண்ணைச் சுருட்டிடுவோம் பர
மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே
மூப்பில் ஆழ்த்திடுவோம்

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை
ஞான நடம் புரி கொள்வோம் –அந்த
அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்
அற்புதம் அற்புதமோ
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா –யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்
ஞானம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)
என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.
இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.
அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!
*****
You must be logged in to post a comment.