
Written BY S NAGARAJAN
Date: 9 May 2016
Post No. 2794
Time uploaded in London :– 5-52 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய நான்காவது கட்டுரை இது).
Third Part was posted on 28th April 2016.
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -4
ச.நாகராஜன்
ஸு யுன்னின் பயணம் தொடர்ந்தது. டா-டாங் என்ற இடத்தில் உள்ள டி-கேங் என்ற துறைமுகத்தை அவர் அடைந்து ஆற்றின் கரையோரமாக நடக்கலானார். ஆற்றைக் கடக்க அவர் விரும்பினார். ஆனால் ஆற்றின் நீர் மட்டமோ உயர்ந்து கொண்டே இருந்தது. படகோட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் ஆறு நாணயங்கள் கேட்டான். ஆனால் ஸு யுன்னிடமோ ஒரு நாணயம் கூட இல்லை.
அவரை ஏற்றாமல் படகு நகர்ந்தது. கரையோரமாக நடக்க ஆரம்பித்த அவர் தண்ணீரில் அகஸ்மாத்தாக காலை வைக்கவே நீர் பிரவாகம் அவரை உள்ளே இழுத்தது.
நீரில் சிக்குண்ட அவர் ஒரு பகல் ஒரு இரவு மிதந்து கொண்டே பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.காய் –ஷி துறையை நோக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவரது காவி உடையைக் கண்ட ஒரு மீனவன் அவரைத் தன் வலையை வீசி இழுத்தான். அவரது காவி உடையைப் பார்த்ததால் பாவோ ஜி ஆலயத்தில் இருந்த ஒரு துறவியை அவன் அழைத்தான். அந்த துறவி ஏற்கனவே ஸு யுன்னைப் பார்த்திருந்ததால் நன்கு அடையாளம் தெரிந்து கொண்டார்.
ஒரு சமயம் இருவரும் ஜின் – ஷான் மடாலயத்தில் சேர்ந்து தங்கி இருந்தனர். ஸு யுன்னின் நிலையைக் கண்ட அவர், “ஆஹா! இவர் மாஸ்டர் டீ – குங் அல்லவா” என்று வியந்து கூவினார். ஸு யுன்னின் மடாலயப் பெயர் டீ – குங்! அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றனர். தொடர்ந்து நீரில் இருந்ததால் அவரது மூக்கிலிருந்து ரத்தம்; வாயிலிருந்து ரத்தம் அந்தரங்க உறுப்பு, ஆசனவாய் என்று அனைத்து துவாரங்கள் வழியாகவும் ரத்தம்!
பாவோ ஜி ஆலயத்தில் சில நாட்கள் ஸு யுன் தங்கினார். பின்னர் காவோ-மின் மடாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைக் கண்ட மடாலய நிர்வாகி அவர் வெளுத்து இளைத்து இருப்பதைக் கண்டு உடல் நலம் சரியில்லையா என்று வினவ ஸு யுன் ஆம் என்றார். தான் நீரில் விழுந்ததை அவர் சொல்லவில்லை.
அங்கு நடக்கவிருக்கும் தியான வகுப்பை கவனித்துக் கொள்ளும் வேலையைத் தர முன் வந்தார் அந்த நிர்வாகி. ஆனால் ஸு யுன் அதை தாழ்மையாக மறுத்தார். ஒரு மடாலயத்தில் ஒரு பெரும் பணியைத் தரும் போது மறுப்பதென்பது பெரிய குற்றமாகப் பொதுவாகக் கருதப்படும்.
ஆகவே அவரைத் தடி கொண்டு அனைவரும் தாக்கினர். ஸு யுன்னோ அத்தனை அடிகளையும் பொறுமையுடன் ஏற்றார்! அவர் உடல்நிலை இன்னும் மோசமானது. சிறுநீருடன் விந்து வெளியேறும் மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டது.
ஆனால் ஸு யுன்னோ மிக உற்சாகமாக தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார்.
உடல் உணர்வே அவருக்குப் போய் விட்டது. இருபது நாட்கள் கழிந்தன. அவர் உடல் நிலை சீரானது.
அப்போது காய் ஷி துறையிலிருந்து வந்த துறவி ஒருவர் ஸு யுன்னைக் கண்டு அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அவர் நீரில் விழுந்ததைப் பற்றியும் கூறினார்.

இப்போது ஸு யுன்னின் உடலோ தக தகவென ஜொலித்தது.
இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் தங்களை மன்னிக்குமாறு கூறி அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாமெனக் கூறினர்.
ஒரு நாள் தியானம் முடிந்த போது மிகவும் பிரகாச்மான ஒளி ஒன்றை அவர் கண்டார். பகல் நேரத்து சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம்!
ஸு யுன் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! சுவர்களை ஊடுருவி அவரது பார்வை விரிந்தது. சுவர்களுக்கு அப்பால் உள்ள அனைத்தும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஊதுபத்தியை ஏத்தும் துறவி, கழிவறையில் அமர்ந்திருந்த துறவி, தூரத்தில் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த படகுகள் – அனைத்துக் காட்சிகளையும் அருகிலிருந்து பார்ப்பது போல அவரால் பார்க்க முடிந்தது.
அவரது நடையோ பறப்பது போல அமைந்தது.
இது ஒரு தற்காலிக நிலை என்பதை ஸு யுன் உணர்ந்தார்,
ஒரு நாள் அவரது உதவியாளர் அவருக்கு தேநீர் கோப்பையைத் தந்தார். அகஸ்மாத்தாக தேநீர் அவரது தலையில் கொட்ட கோப்பையை ஸு யுன் கீழே தவற விட்டார்.
தடால் என ஒரு சத்தம்!
அவருக்கு திடீரென மனத்தின் மூலம் – வேர் பற்றிய ஞானம் உதித்தது!
ஆஹா! எந்த பெரும் நிலையை அடைய வேண்டித் தவம் இருந்தாரோ அந்த நிலை அவரை வந்து அடைந்து விட்டது.
ஒரு கணத்தில் அவருக்கு வீட்டிலிருந்து கிளம்பி அன்று வரை நடந்த காட்சிகள் மனதில் ஓடின!
அவருக்கு ஒரு ‘கதா’ உதித்தது. அவர் பாடினார் இப்படி:
“ஒரு கோப்பை தரையில் விழுந்தது!
அது விழுந்த சத்தமும் தெளிவாகக் கேட்டது!
வெளி (Space) பொடிப்பொடியானது!
பைத்தியக்கார மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றது!
கை பிடித்திருந்ததை விட்டு விட கோப்பை விழுந்து நொறுங்கியது!
குடும்பம் உடையும் போதோ ஒருவர் இறக்கும் போதோ பேசுவது கடினம்!
வசந்த காலம் மலர்ந்த மலர்களின் வாசத்துடன் வருகிறது!
மலைகள்,ஆறுகள், பெரிய பூமி அனைத்துமே ததாகதர் தவிர வேறொன்றில்லை!!”
பூரண ஞானம் பொலிந்த துறவியாகி விட்டார் ஸு யுன்!
********** தொடரும்
You must be logged in to post a comment.