
Article Written S NAGARAJAN
Date: 10 July 2016
Post No. 2957
Time uploaded in London :– 5-29 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 8-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்!
ச.நாகராஜன்
“விண்வெளியில் 1071 சாடலைட்டுகள் சுற்றி வருகின்றன” –
– யுனிவர்ஸ் டுடே பத்திரிகை 24-10-2013இல் வெளியிட்ட செய்தி
ஆட்டம் போடும் சீனாவின் விண்வெளி ஆசைக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் விட்டது. நமது எல்லைப் புறத்தில் படையை அனுப்பி நம்மை சீண்டுவது போதாது என்று விண்வெளியையே ஆக்கிரமிக்க நினைக்கும் அதன் விண்கலம் ஒன்று தள்ளாட்டம் போடுகிறது! ஹெவன்லி பாலஸ் என்று சீனா அழைக்கும் அந்த ‘சுவர்க்க அரண்மனை’ எந்த நாட்டில் எப்போது விழுந்து எத்தனை பேரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறதோ என்ற கவ்லை உலக மக்களுக்கு இப்போது தோன்றி இருக்கிறது!
ஏழாயிரத்திமுன்னூறு கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தின் பெயர் டியாங்காங் 1 (Tiangong – 1). டியாங்காங் என்றால் சீன மொழியில் சுவர்க்க அரண்மனை என்று பொருள்!
சீனா இப்படி தன் விண்கலம் தள்ளாட்டம் போடுவதை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை; உலகிற்கு அறிவிக்கத் தயாராகவும் இல்லை.
தாமஸ் டோர்மேன் என்பவர் வானில் பறக்கும் அனைத்து விண்கலங்களையும் டெலஸ்கோப், பைனாகுலர், வீடியோ மற்றும் இதர காமராக்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து குறிப்புகளை எடுத்து வரும் நிபுணர்.
“நான் கணிப்பது சரியென்றால் சீனா கடைசி நிமிடம் வரை காத்திருந்து வேறு வழி இல்லை என்ற நிலையில் உலகிற்கு இதை அறிவிக்கும்“என்று கூறுகிறார் அவர்.
தனது ஸ்பேஸ் ஸ்டேஷன் தள்ளாடித் தரையில் விழுவதை சீனா ஒப்புக் கொள்ளும் வரை உலகம் கவலைப்படாமல் காத்திருக்குமா? விண்கலம் வெடித்து துண்டு துண்டாகிச் சிதறி பல்வேறு இடங்களில் பூமி மீது மோதினால் என்ன ஆகும்? அதுவும் நெருக்கமாக ஜனத்தொகை உள்ள பெரிய நகரங்களில் அது விழுந்து விட்டால்…! நினைக்கவே பயமாய் இருக்கிறது என்கிறனர் விஞ்ஞானிகள்.
ஆனால் பொதுவாக விண்கலம் கடலிலோ அல்லது ஜனசந்தடி அற்ற இடங்களிலோ தான் இறங்கும்படி செய்வது வழக்கம் என்பதால் பயப்படாமல் இருக்கலாம்.
ஆனாலும் பழுதுபட்ட விண்கலம் எப்படி இயங்கி விழுமோ என்பதால் இதை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி இருக்கும் என்கின்றனர் அவர்கள்.
சீனா வெளிஉலகிற்கு இந்த விண்கலத்தின் உண்மை நிலையை இதுவரை தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் அது விண்கலத்தைத் தன் கட்டுப்பாட்டின் மூலமாகத் தரை இறக்க முடியும் என்று இன்னமும் நம்பி வருவது தான்!
2020இல் சீனா மிகப் பெரிய விண்வெளி நிலையம் அமைக்க எண்ணியுள்ளது. அதற்கான முன்னோடி விண்வெளி நிலையம் இது. ஒரு விண்கலத்தை இன்னொரு விண்கலத்தோடு பொருத்தும் முறைகளில் வெற்றி கொள்வதற்காக இது விண்வெளியில் ஏவப்பட்டது. 2011இல் ஷென்ஷோ 8 மற்றும் 2012இல் ஷென்ஷோ 9, 2013 இல் ஷென்ஷோ 10 ஆகிய கலங்களில் இந்த ‘டாக்கிங்’ (docking) பயிற்சிகளை அது செய்து முடித்தது. கடைசியாக ஷென்ஷோ 10 என்ற விண்கலம் 2013இல் பூமியில் இறங்கியது.
அத்துடன் இந்த சுவர்க்க அரண்மனையின் வேலை முடிந்தது போலத் தான்.
பூமியில் உள்ள தாது வளங்களைக் கண்டு பிடித்தல், காட்டு வளத்தைப் பற்றி அறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இது ஏராளமான அறிவியல் தகவல்களைத் திரட்டியுள்ள்து.

ஒரு விண்கலம் நிலை கெட்டுத் தடுமாறி பூமி மீது மோத வந்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் ஏற்கனவே ஒரு முறை பார்த்து விட்டது.
1979ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலகமே பயத்துடனும் வியப்புடனும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். அமெரிக்கா விண்ணில் ஏவிய ஸ்கைலாப் பழுதான நிலையில் பூமியை நோக்கி விரைந்து கீழே வந்து கொண்டிருந்தது. அதன் எடையோ 77 டன்கள். பதறிப் போன அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் பூஸ்டர் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஸ்கைலாப்பை கடலில் விழுமாறு செய்தனர். பெரும்பாலான துண்டுகள் கடலில் விழுந்தாலும் சில துண்டுகள் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் விழுந்தன. நல்ல வேளையாக, அது விழுந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லை.
ஸ்கைலாப் விழப் போவதை அறிந்தவுடன் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகள் பரபரப்படைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.
அமெரிக்க பத்திரிகைகள் ஸ்கைலாப் இன்ஷூரன்ஸ் திட்டம் என்ற தமாஷ் திட்டங்களை அறிவித்தன. ‘சான்ஃபிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர்’ என்ற பத்திரிகை ஒரு படி மேலே போய்,. யார் ஒருவர் ஸ்கைலாபின் ஒரு சிறிய துண்டையாவது எடுத்து 72 மணி நேரத்திற்குள் முதலில் தங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்களோ அவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது. நிச்சயம் ஸ்கைலாப் அமெரிக்காவில் விழாது என்ற கணிப்பில் அது இப்படி அறிவிப்பைச் செய்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் பதினேழே வயதான இளைஞன் ஸ்டான் தார்ண்டன் இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட பெரும் அதிர்ஷ்டசாலியாக இருந்தான். ஸ்கைலாப் அவன் இருந்த பகுதியில் விழவே ஒரு சிறிய துண்டை எடுத்துக் கொண்டு உடனடியாக ஒரு விமானத்தைப் பிடித்து குறித்த கால கெடுவான் 72 மணி நேரத்திற்குள் பத்திரிகை அலுவலகத்தில் கொண்டு வந்து அதைக் காண்பித்தான்.
அனைவரும் அதிசயித்துப் போனார்கள். பத்திரிகை நிறுவனமும் நல்ல மனதுட்ன் பத்தாயிரம் டாலரை அவனுக்கு வழங்கிக் கௌரவித்து தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டது.
ஆனால் சீன சுவர்க்க அரண்மனையைப் பொறுத்த வ்ரை இதெல்லாம் நடை பெறாது என்பதை அனைவரும் அறிவர். அது
எங்கு எப்போது விழும் என்பது சஸ்பென்ஸ் தான்!
இந்த சஸ்பென்ஸ் விரைவில் நீங்கும். அது வரை பொறுத்திருப்போம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1989ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மேதை சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman) (தோற்றம் : 7-5-1939)
அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். அவரது தாய் ஒரு பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். தந்தையோ ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். இருவரும் சந்தித்து மணம் முடித்துக் கொண்டனர்.
மளிகைக் கடையில் தந்தை வேலை பார்ப்பதையும் தாய் பஞ்சாலையில் வேலை பார்ப்பதையும் கூர்மையாகக் கவனித்து வந்த அவர், கடின உழைப்பு சிறு சிறு கூறுகளாக இருந்தாலும் வெற்றியைத் தரும் என்று உணர்ந்தார். தன் வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தால் அனைவரையும் ஊக்குவிக்கும் ஏராளமான பொன்மொழிகளை அவர் வழங்கியுள்ளார்.
“1939ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் நான் ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தேன். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கிராஜுவேட் மாணவனாக இருந்தேன். 18 மாத காலம் ஒரு லாபரட்டரியில் வேலை செய்ய மாட்டாமோ என்று ஏங்கி இருந்தேன். வாய்ப்பு வந்தது. முன்னேறினேன்” என்று உருக்கமாகத் தான் முன்னேறிய விதத்தைப் பற்றி அவர் கூறுவதுண்டு. டி என் ஏ என்ற மரபணு போல ஆர் என் ஏ (ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்பதும் முக்கியமான ஒன்று. ஆர் என் ஏயில் ஊக்குவிக்கும் குணாதிசயங்களை அவர் கண்டு பிடித்து அதற்காக நோபல் பரிசை வென்றார். கடின உழைப்பு வெற்றியைத் தரும் என்பதற்கான உதாரணம் சிட்னி ஆல்ட்மேன்!
********
You must be logged in to post a comment.