
காம்ப்டி பழங்குடி மக்கள்
Research Article Written by London swaminathan
Date: 10 July 2016
Post No. 2958
Time uploaded in London :– 9-09 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(காம்ப்டி இனமக்கள் பர்மாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் வாழ்கின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் புத்திசாலிகள் இவர்கள்தான். மிகவும் உழைப்பாளிகள்; எப்பொழுதும் துணிமணிகளை நெய்து சாயமேற்றி, பூவேலைப்பாடு செய்வர்.)
நான் ஆங்கிலத்தில் எழுதிவரும் பழங்குடி மக்கள் பற்றிய கட்டுரைகளை தமிழிலும் வெளியிடும்படி பலர் எழுதினர். ஆகையால் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் சாராம்சத்தை, பகுதி பகுதியாக தமிழிலும் வெளியிடுகிறேன்.
இந்தியாவை ஆக்ரமிக்கவந்த வெளிநாட்டினர், இந்திய மக்களை ஆரியர்கள், திராவிடர்கள் என்று பிரித்து கட்டுரைகளை எழுதினர். மலைகளில் வாழும் பழங்குடி மக்களைப் பார்த்தபோது இந்த வாதம் சரிப்பட்டு வரவில்லை. உடனே கொஞ்சம் மாற்றி ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று பிதற்றினர். அப்படியும் வாதம், உளுத்த வாதமாக இருந்தவுடன் ஆரியர், திராவிடர், முண்டா, மங்கோலியர், பூர்வ குடியினர் என்று பிரித்தனர். அப்படியும் அவர்கள் வாதம் உளறல் என்று பலர் கண்டு பிடித்தனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஜாரவாஸ், இலங்கையிலுள்ள வெட்டா முதலிய இனங்களைப் பார்த்தவுடன் நீக்ரோ இன மக்கள் என்ற ஒன்றையும் சேர்த்தனர்!!
வியப்பிலும் வியப்பு என்ன என்றால், அதிசயத்திலும் அதிசயம் என்னவென்றால், சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இனம் பற்றியோ ஆரிய, திராவிடர் இனவாதம் பற்றியோ ஒன்றுமே இல்லை. உலகிலுள்ள எல்லா இலக்கியங்களையும் விடப் பழமையானது சம்ஸ்கிருத-தமிழ் இலக்கியம்; அளவிலும் மஹத்தானது. அதில் ஒரு வரி கூட இல்லை! அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன் சொன்னதற்கு நேர் மாறாக வேறு, நமது இலக்கியங்கள் செப்புகின்றன.
காமாலைக் கண் படைத்த, கோணல் புத்தியுடைய, பிரித்தாளும் சூழ்ச்சியில் நரிகளையும் மிஞ்சும் வெள்ளைக்காரன் கூ,ட உபநிஷத்துகளில் பழமையானது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (பெருங் காட்டு உபநிஷத்) என்றும் அது புத்தருக்கெல்லாம் மிகவும் முன்னதாக, கிரேக்கர்கள் எல்லாம் இலக்கியம் படைப்பதற்கு முன்னதாக எழுந்தது என்றும் எழுதிவைத்தான். அதிலேயே தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூவரும் தவம் செய்து ஒரே கடவுளிடம் சென்று உபதேசம் கேட்டபோது வானம் “த, த, த” என்று ஒலி செய்தது. உடனே மூவரும் அதற்கு வெவ்வேறு பொருள் கண்டனர் என்று எழுதியுள்ளது.
(த, த, த கதையை முன்னரே எழுதியுள்ளேன்). இதிஹாசம், புராணம் முழுதும், அசுரர், தேவர் எல்லோரும் ஒரே கடவுளைக் கும்பிட்டு வரங்கள் பெற்றதும் நூற்றுக்கணக்கான கதைகளில் வருகிறது. அது மட்டுமல்ல. அவர்கள் ஒருதாய் வயிற்றுப் புதல்வர்கள், குணத்தினால் மட்டும் வேறுபட்டவர்கள் என்றும் நமது இலக்கியங்கள் பகர்கின்றன.
இந்துக்கள் எல்லாரையும் தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், நாகர், கின்னரர் முதலிய 18 குழுக்களாகப் பிரித்தனர்
பழங்குடி மக்களைப் பார்க்கும் போதும், அவர்கள் பற்றிப் படிக்கும்போதும் நம் மனதில் எழும் கேள்விகள்:–
இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? ஏன் இப்படி “நாகரீகமற்ற” வாழ்க்கை வாழ்கின்றனர்? என்ற கேள்விகள் தோன்றும்.
வெள்ளைக்காரன் பின்னிவிட்ட, ஜோடனை செய்த கதைகளில் வருவது போல இவர்கள் சிந்து சமவெளியில்ருந்து ஆரியர்களால் விரட்டப்பட்டவர்களாக இருந்தால், இவர்கள் பல மொழிகளைப் பேசுவது எப்படி? உருவத்தில் பலவண்ணம் இருப்பது எங்கனம்? பல நூறுவிதமான நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது எப்படி? ஒருவரை ஒருவர் கல்யாணம்கூடச் செய்யாமல் தனித்து வாழ்வது ஏன்? நீலகிரி, கேரள மலைப்பகுதிகளில் அருகருகே பல வகையான பழங்குடிகள் இருப்பது எப்படி முடியும்?

சுலிகாடா பழங்குடி மக்கள்
இது சுலிகாடா பெண்ணின் படம். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் ஆக்ரோஷமான இனம் இது . அவர்கள் திபெத் மக்களுடன் வணிகம் செய்வர். தலை முடியை கிராப் செய்வதால் சுலிகாடா என்று பெயர். இவ்விஷயத்தில் அருகிலுள்ள மிஷ்மி, அபார் இன மக்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். ஆண்களும், பெண்களும் முடி அலங்காரம் செய்வது குறிப்பிடத்தக்கது.
மொழிகளில் ஏன் ஒற்றுமை இல்லை? சிந்து சமவெளியில் நாகரீகமாக வாழ்ந்தவர்கள், அதை மறந்து களிமண் குடிசைகளில் வாழ்வது எப்படி? அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?
அவர்கள் கடவுள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்களாக இருப்பது எப்படி? இந்துமத நம்பிக்கைகள் பல அவர்கள் பழக்க வழக்கங்களில் இருப்பது ஏன்? அவர்கள் ஒரே கடவுளைக் கும்பிடாமல் பல கடவுள்களைக் கும்பிடுவது ஏன்? ஒவ்வொருவரும் தங்கள் குடி எப்படித் தோன்றியது என்பதில் பல நூறுவிதமாகச் சொல்லுவது ஏன்?
வெவ்வேறு மூதாதையர்கள், சின்னங்கள், திருமண முறைகள், இறந்தோரை அப்புறப்படுத்தும் முறைகள், சில விஷயாங்கள் குறித்த பயங்கள், விநோத நம்பிக்கைகள் இருப்பது ஏன்?
“சிந்து சமவெளி திராவிட மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள்” ஆகியவற்றுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாதது ஏன்? (சிந்துவெளியில் திராவிட மண்டை ஓடுகள் எதுவும் கிடைக்கவில்லை)
சிந்து சம்வெளியில் ஆரிய மண்டை ஓடுகள் மட்டும் கிடைப்பது ஏன்? (இப்போது அப்பகுதிகளில் வாழும் பஞ்சாபியர், சிந்து இன மக்கள் போன்ற எலும்புக்கூடுகளே கிடைத்திருக்கின்றன)
உண்மை என்ன வென்றால்………….
பழங்குடி மக்கள் எப்பொழுதுமே இந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், அதற்கு முந்தைய வேத, இதிஹாச காலத்திலும் அவர்கள் இருந்துள்ளனர். இன்று நகர நாகரீகம் நிலவும்போது எப்படி அவர்கள் மலைகளில் தனிப்பட்ட வாழ்வு வாழ்கின்றனரோ அதுபோல அப்போதும் அவர்கள் வாழ்ந்தனர்.
நான் எழுதிய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்ட் இன மக்கள் காண்டவ வன மக்கள் என்றும் அவர்களுக்கும் அர்ஜுன-கிருஷ்ணன் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் தென் அமெரிக்க நாடுகளில் குடியேறி மாயா, அஸ்டெக் நாகரீகங்களைத் தாபித்தது பற்றியும் எழுதியுள்ளேன்.

திகரு/ தைன்பழங்குடி மக்கள்
பிம்பேட்கா குகைப்பகுதிகளில் உள்ள ஓவியங்கள், மத்தியப் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. அதாவது வேத கால, சிந்து சமவெளிகாலத்திலும் அதற்கு முன்னரும் கூட அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
நான் பிலோ இருதயநாத் முதலிய எழுத்தாளர்கள் தினமணிச் சுடர், மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளில் எழுதிய விஷயங்களை 45 ஆண்டுகளாகப் படித்தும் சேகரித்தும் வருகிறேன். அண்மையில் “இந்திய மக்கள்” என்ற தலைப்பில் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய புத்தகத்தைப் படித்தேன். அதிலுள்ள 30 பழைய படங்களும் வருணனைகளும் இக்கட்டுரைத் தொடரை எழுதத் தூண்டின. நான் வெளியிடும் விஷயங்களைப் படித்தபின்னர் நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.
முதல் கட்டுரையில் வடகிழக்கு இந்திய பழங்குடி மக்களின் படங்கள் உள்ளன. இதில் காம்டி இன மக்கள் தங்கள் தலைமுடியை அலங்கரிக்கும் பாணியிலிருந்தே திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றனர். வடகிழக்கில் மட்டும் ஒரே ஒரு குடியில் இந்த வழக்கம் உளது. இது வேறு எங்கும் காண முடியாத புதுமை. இப்பொழுது இந்துக்கள் காலில் மெட்டி, கழுத்தில் தாலி, தலைமயிர் வகிட்டில் குங்குமம், மடிசாரைப் புடவை முதலியவற்றின் மூலம் திருமணம் ஆனவர் என்பதைக் காட்டுகின்றனர்.
இப்படி நகை, உடை, முடி அலங்காரம், நம்பிக்கைகள் முதலியவற்றில் வியப்பான வித்தியாசங்களைக் காட்டுகிறேன்.
பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வாழும் திகரு, தைன் மக்கள் மிகவும் சாதுவான மக்கள். வெள்ளி நகைகளை அணிவர்.

திகரு/ தைன்பழங்குடி மக்கள்
இந்த இன மக்களிடையே ஏன் இவ்வளவு வேறுபாடு? சிந்தியுங்கள்.
–அடுத்த கட்டுரையில் மேலும் சில இனங்களைக் காண்போம்
You must be logged in to post a comment.