
Article Written S NAGARAJAN
Date: 14 July 2016
Post No. 2969
Time uploaded in London :– 6-20 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இந்தக் கட்டுரையப் படிப்பதற்கு முன்னர் இதற்கு முந்தைய கட்டுரையான ‘கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!’ என்பதைப் படிக்கவும்.
கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!
ச,நாகராஜன்
சித்திரகுப்தன் கணக்கு சற்று வேறு விதமாக வேலை செய்யும் ஒன்று.
அங்கு ஒரு செயல் எந்த நோக்கத்தில் (Motive) செய்யப்படுகிறது, அதில் உணர்ச்சிபூர்வமான அளவு எப்படி இருக்கிறது (Degree of emotional involvement) என்பதை வைத்தே நீதி வழங்கப்படுகிறது.
இக உலகத்தில் ஒரு ஏழை நல்ல காரியம் ஒன்றிற்கு ஒரு ரூபாயை தான் கடினமாக உழைத்த பணத்திலிருந்து மனமுவந்து கொடுக்கிறார்.
இன்னொரு பெரும் பணக்காரரோ லட்சம் ரூபாய் கொடுத்து அப்படிக் கொடுத்ததை நன்கு விளம்பரம் செய்யச் சொல்கிறார், தானும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
உலக நியதிப்படி அவர் பெரும் புகழை அடைகிறார். புண்ணியவான், தர்மஸ்தர் என்ற பெயர் அவருக்கு தரப்படுகிறது – பணத்தின் அளவை வைத்து! பணத்தின் மகிமையே மகிமை!
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் ஏழையின் மனோபாவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அங்கு அவன் தந்த ஒரு ரூபாய் பொருட்படுத்தப்படுவதில்லை. பணக்காரனின் விளம்பர மனப்பான்மையே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவனது லட்ச ரூபாய் பணம் அல்ல!
நாகரிகம் அதிகம் இல்லாத மலைப் பிரதேசங்களில் மக்கள் ஒரு தானியத்தைக் கொடுத்து இன்னொரு தேவையான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். சற்று நாகரிகம் உள்ள நகரங்களில் பணத்தைக் கொடுத்துப் பெயரும் புகழும் பெறுகின்றனர். தேவையானதை வாங்குகின்றனர். விளம்பரத்துக்கு உதவும் நல்ல பட்டங்கள், மற்றும் விருதுகளைக் கூட அவர்கள் “வாங்குகின்றனர்”.
ஆனால் இந்த கரன்ஸியெல்லாம் சித்திரகுப்தன் கணக்கில் இல்லை. அங்கு இந்த கரன்ஸி செல்லுபடியாகாது.
ஒருவனின் அடிப்படை நோக்கம். அதில் அவனது ஈடுபாடு (தன்னலமற்றதா அல்லது உள்நோக்கம் ஒன்றுடன் செயல்படுத்தப் படுகிறதா) என்பதே அங்குள்ள கரன்ஸியாகும்.
கீதையைப் பற்றிய அடிப்படையான சந்தேகம் ஒன்று அனைவருக்கும் எழும்.
அர்ஜுனன் ஆயிரக்கணக்கான பேர்களை பாரத யுத்தத்தில் கொல்கிறான். அதற்கு அவனை கண்ணபிரான் ஊக்குவிக்கிறான்.
அதே போல துரியோதனனும் பல்லாயிரக்கணக்கான பேர்களை அழிக்கிறான். அவனுடன் பெரிய வீரர்கள் போர் புரிகின்றனர். அவனுக்கு உதவுகின்றனர்.
அர்ஜுனன் சொர்க்கத்திற்குச் செல்ல அவனை எதிர்த்தோர் நரகத்திற்குச் செல்கின்றனர்.
ஏன் இப்படி? செயல் ஒன்று தான் (கொலை செய்வது) என்றாலும் அடிப்படை நோக்கம் என்ன?
அர்ஜுனன தர்மத்தைக் காக்கப் போரிடுகிறான். துரியன் அதர்மத்துடன் செயல் படுகிறான்.
ஆகவே அழிந்து படுகிறான்.
சுலபமான கணக்கு. தர்மத்தைக் காக்க கண்ணன் அவதாரம் எடுக்கிறான். அதர்மத்தை அழிக்கிறான்.
ஆக சித்திரகுப்தனின் கணக்கும் அதில் அவன் எந்த கரன்ஸிக்கு மதிப்புக் கொடுக்கிறான் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
சித்திர குப்தனின் கணக்கு தெய்வீகக் கணக்கு!

அதை ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யர் அற்புதமாக மேற்கண்ட விதமாக விளக்குகிறார்.
சூட்சுமமான தர்மத்தை நமது அற நூல்கள் நுட்பமாக விளக்குகின்றன.
அதைப் பயிலுவதும் போற்றுவதும், அதன் படி நடப்பதும் நமது கடமை!
***********
You must be logged in to post a comment.