அவன் யார் தெரியுமா? – பகுதி 2

ranganthananda

Article Written S NAGARAJAN
Date: 16 July 2016
Post No. 2975
Time uploaded in London :– 6-10 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அவன் யார்? – 2
ச.நாகராஜன்

மைசூர் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கோபால் மஹராஜிற்கு சங்கரன் தன் விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதினான். பதில் சாதகமாக வந்தது. ஆனால் திருச்சூரிலிருந்து மைசூருக்கு வர பணம் இருக்கிறதா என்ற கேள்வியும் கடிதத்தில் இருந்தது.

சங்கரனிட்ம் இருந்ததோ மூன்று ரூபாய்கள் தான். அவன் காதில் போட்டிருந்த கடுக்கனை விற்க முனைந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகைக் கடைகளுக்கு விடுமுறை. ஒருவர் அவனுக்கு அதற்காக இர்ண்டு ரூபாய் தர முன்வந்தார்.

திருச்சூருக்கு அலுவல் நிமித்தமாக வந்த கோபால் மஹராஜ் தன் சார்பாக மூன்று ரூபாய்  கொடுத்தார். ஆக மொத்தம் இப்போது ஏழு ரூபாய் சேர்ந்து விட்டது. ஆனால் இந்தத் தொகை மைசூருக்குச் செல்லப் போதவே போதாது.
சங்கரன் திருச்சூர் பள்ளியில் இருந்த ராமகிருஷ்ண சந்நிதியில் மனமுவந்து பிரார்த்தனை செய்தான். அதற்குப் பலன் இருந்தது.

அன்று இரவே கோபால்  மஹராஜுடன்  மைசூருக்குச் செல்லும் இரயிலில் அவனும் சென்றான்.

நீண்ட நெடும் தவ வாழ்க்கை தொடங்கியது.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி சங்கரனுக்கு மந்திர தீட்சை அளிக்கப்பட்டது.

அதை அளித்தவர் மஹாபுருஷ் மஹராஜ்.
அவர் கேட்டார்: “நீ ராமகிருஷ்ணரை வழிபடுகிறாயா?’
பதில் : “இல்லை. ஆனால் அவர் படம் என்னிடம் இருக்கிறது. அதற்கு நமஸ்காரம் செய்வேன்”
“அது போதும்.”

பின்னர் மந்திர தீட்சை அளித்த குரு, “குரு தட்சிணையாக ஏதாவது  கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஒன்றும் கொண்டு வரவில்லை”

ஒரு சட்டை, ஒரு வேஷ்டி, ஒரு துண்டு இவ்வளவு தான் வீட்டிலிருந்து சங்கரன் எடுத்து வந்தவை.
இப்போது குரு பக்கதிலிருந்த மூன்று மாம்பழங்களை எடுத்துச் சங்கரனிடம் தந்தார்.

“இதை எனக்குக் குரு தட்சிணையாகத் தா”
சங்கரன் அப்படியே செய்தான்.
“நீ போய் கோபாலுக்கு சேவை செய்”
இது தான் குரு கொடுத்த உத்தரவு.

கோபால் மஹராஜ் பின்னால் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரானந்தாஜி ஆகப் புகழ் பெற்றார். அவர் பிரான்ஸில் ஒரு புதிய கிளையைத் தொடங்க ஒன்பது வருடங்கள் கழித்து இந்தியாவை விட்டுப் பயணமானார்.
அது வரை அவருக்குச் சேவை செய்வதில் சங்கரனின் காலம் கழிந்தது.
1933ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பேலூர் மடத்தில் மஹாபுருஷ மஹராஜ சந்நியாச தீட்சை செய்து வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்தார்.
சங்கரனும் அதில் ஒருவர்.

அவருக்கு ரங்கநாதானந்தா என்ற பெயர் அளிக்கப்பட்டது.
அடுத்த பல ஆண்டுகளில் உலகெங்கும் ஸ்வாமி ரங்கநாதானந்தாவின் பேச்சைக் கேட்க உலகமே திரண்டது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி போர்டு டிரஸ்டிகளின் கூட்டம் நடந்தது. அதில் ஒரு மனதாக ஸ்வாமி ரங்கநாதானந்தாவை அடுத்த தலைவராக ராமகிருஷ்ண மடம் தேர்ந்தெடுத்தது.
அப்போது அவர் நர்ஸிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உபதலைவர்களில் ஒருவர் இந்தச் செய்தியை அவரிடம் தெரிவிக்க விரைந்தார்.

செய்தியைக் கேட்ட ரங்கநாதானந்தா, ‘என்ன  மைசூரில் சமையல்காரனாக இருந்தவன் மடத்தின் தலைவரா?: என்று கூறினார்.
எப்படிப்பட்ட எளிமை!

ராமகிருஷ்ண மடத்தின் 13வது தலைவராக அவர் ஆனார்.

உலக நாடுகள் பலவற்றின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் அவரைத் தரிசிக்க வந்திருக்கின்றனர். அவர் பேச்சைக் கேட்க உலகத் தலைவர்கள் காத்திருப்பது வழக்கம்!.

50க்கும் மேற்பட்ட அருமையான நூல்களை அவர் வழங்கியுள்ளார்.
600 ஆடியோ டேப்புகளும், 50 வீடியோ டேப்புகளும் அவரது கீதை, உபநிடதம் மற்றும் வேதாந்தக் கருத்துக்களை அள்ளித் தரும் பொக்கிஷங்களாக உள்ளன.

96 வருடம் 4 மாதம் 11 நாட்கள் வாழ்ந்த அவர் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் : “என்னைத் தூக்கு நான் உடகார விரும்புகிறேன். என்னைத் தூக்கி விடு” (Lift me up; I want to sit up; Lift me up)

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அவர் ராமகிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்.

மகத்தான வாழ்க்கை வாழ்ந்த அவரது சரித்திரம் அற்புதமானது.

ராமகிருஷ்ணரின் புகழை உலகெங்கும் பரப்பிய மகானுக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது உரைகளைப் படித்த்ப் புத்துணர்வு பெறுவோம்.

***********

.

 

 

 

Leave a comment

Leave a comment