காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

Leave a comment

1 Comment

  1. Palanichamy Perumal's avatar

    This is really a wonderful web site which I came accross accidentaly. My sincere thanks to all the contributers to this site………….Palanichamy

Leave a comment