
Written by S NAGARAJAN
Date: 5 September 2016
Time uploaded in London: 5-05 AM
Post No.3123
Pictures are taken from various sources; thanks.
ச.நாகராஜன்

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!
மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.
ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!
தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்
ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.
இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.
இப்போது விநாயக சதுர்த்தி வருவதை முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.
ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!
ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.
சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.
புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!
ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!
திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.
தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!
நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!
பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!
அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!
தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!
*********
You must be logged in to post a comment.