
Written by S. NAGARAJAN
Date: 8 October 2016
Time uploaded in London: 5-37 AM
Post No.3229
Pictures are taken from various sources; thanks
நடைச்சித்திரம்
‘மணி’யான உபந்யாசம்
ச.நாகராஜன்

ஹனுமார் கோவில்.
கூட்டம் பரவாயில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். பொதுஜன அபிப்ராயம் எப்படி உருவாகப் போகிறதோ என்று உபந்யாசத்தை ஏற்பாடு செய்த ஹரிஹரனுக்குக் கவலை. சாஸ்திரிகளுக்கும் தான்! சாஸ்திரிகள் யார் என்கிறீர்களா?
சுப்புணி சாஸ்திரிகள் ராமாயண உபந்யாசம் செய்கிறார். அவருக்குத் தான் ரொம்பக் கவலை. இந்த உப்ந்யாசத்திலாவது ஏதேனும் “கொஞ்சம்” வந்தால் மாதச் செலவை ஈடு கட்டி விடலாம்.
இராமனே துணை!
இன்று முக்கியமான கட்டம். திரிஜடைக்கு சுப ஸ்வப்னம். அதனால் சீதா பிராட்டிக்கும் சுப சகுனம்!
கதையை ஆரம்பிக்கலானார்.
“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின் மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”
திடீரென்று ஒரு சலசலப்பு கூட்டத்தில். தள்ளுங்கோ தள்ளுங்கோ என்று கட்டைக் குரலில் ஹரிஹரன் கத்திக் கொண்டே முன்னே வர பின்னால் ஒருவர் – அவரைப் பார்த்தால் பெரிய மனுஷராய்த்தான் இருக்க வேண்டும். சாஸ்திரிகளுக்கு ஒருவரின் தோரணையைப் பார்த்தால் தெரியாதா என்ன?
சற்று நிறுத்தினார்.
ஹரிஹரன் வந்தவரை முன்னால் சௌகரியமாக் அமர வைத்தார்.
சாஸ்திரிகளிடம் வந்தார். “இவர் தான் ஊர் பெரிய மனுஷர். இந்த கோவிலையே கட்டியவர். பேர் மணி. மணியானவர்.” மீண்டும் ஹரிஹரன் அழுத்திச் சொன்னார். “MONEY ஆனவர். இவர் வந்தாலே எனக்கு சம்பாவனையைப் பற்றிய கவலை தீர்ந்தது”
சாஸ்திரிகளுக்கு விஷயம் புரிந்து விட்டது.
MONEY ஆனவரா?
வாங்கோ வாங்கோ என்று இரு கரம் கூப்பி அவரை வரவேற்றார்.
மணியானவருக்கு இந்த உபசாரத்தால் உச்சி குளிர்ந்தது. அனைவரின் பார்வையும் அவர் பக்கம்.
எல்லோரும் எப்படி மதிக்கிறார்கள்!
சாஸ்திரிகள் மீண்டும் ஆரம்பித்தார்.
“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின் மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”
ஊர்ப் பெரியவர் ஹரிஹரனை ஏதோ சைகை காட்டி அழைத்தார்.
அவரும் அவர் அருகே ஓடி வந்தார். தன் இடுப்புத் துண்டை வாயினால் பொத்தி அதன் மீது கையை வைத்துக் கொண்டு உன்னிப்பாகக் கேட்டார்.
என்ன நடக்கிறது.?
சாஸ்திரிகள் ஒரு நிமிடம் நிறுத்தினார்.
அடுத்த கணம் ஹரிஹரன் மேடை முன்னால் வந்து சாஸ்திரிகளிடம் ஒரே ஒரு நிமிஷம் என்றார்.
பின்னர் பேச ஆரம்பித்தார்.

“பெரியோர்களே, தாய்மார்களே. இராமபிரான் அருளால் நமக்கு நல்லது நடக்கும் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இதோ எந்தக் கூட்டத்திலும் பேச அழைத்தாலும் பேசாத அடக்க புருஷர் இப்போது சாஸ்திரிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல இசைந்திருக்கிறார். நம் பாக்கியம்!”
பெரியவர் வந்தார். கன குஷியாக ஆரம்பித்தார். இராமாயணம் எப்படி உலகின் மகத்தான் காவியம் என்பதில் ஆரம்பித்த அவர் நேராக சுப்புணி சாஸ்திரிகளுக்கே வ்ந்து விட்டார்.
அடடா, சாஸ்திரிகளின் உபந்யாசத்தில் தான் என்ன ஒரு நயம்! பதினெட்டு புராணங்களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டி இனிய சாரீரத்துடன் அவ்வப்பொழுது கானம் செய்து சுலோகங்களை முறைப்படி சொல்லும் அவர் பாணியே தனி!
சாஸ்திரிகள் ஒரு கணம் மலைத்தார்.
தான் தான் அப்படிச் சொல்கிறோமா? கந்தர்வ கானம் இசைக்கிறோமா?
இன்று என்ன நடக்கிறது.!!
கூட்டத்தினர் ஆரவார கரகோஷம் செய்தனர்.
அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய ‘மணி’ ஆனவர் முக்கிய விஷயத்திற்கு வந்தார்.
“இந்த நல்ல நாளிலே இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் பாக்கியவான்கள் அனைவருக்கும் இப்போதே என் கையெழுத்திட்ட கூப்பன்களை விநியோகிக்கப் போகிறேன். ஆண், பெண், குழந்தை என்ற பேதமில்லாமல் நாளைக்கே நம் கடைத் தெருவில் இருக்கும் என் ஜவுளிக்கடைகளில் உங்களுக்குத் தேவையான ரவிக்கைத் துணி, வேஷ்டி, குழந்தை சட்டை என ஆளுக்கு ஒன்றை தேர்ந்தெடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். நாளைக்கு வர முடியாதவர்கள் இந்த உபந்யாசம் முடியும் நாள் வரை இந்த சலுகையை அனுபவிக்க்லாம். ஆனால் உப்ந்யாசத்திற்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டுமென்பதால் மாலை ஏழு மணி முதல் இந்த சலுகையைப் பெற முடியாது. காலை முதல் மாலை வரை கடைக்கு வாருங்கள்” கூட்டத்தினரின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
ஹரிஹரன் ராமா ராமா என்று கூவினார்.
சாஸ்திரிகளுக்கு ஒரே மகிழ்ச்சி. கூட்டத்தினர் ஒரு க்யூவாக நின்றனர். கையில் இருந்த பேப்பர் ஸ்லிப்பில் கையெழுத்திட்டு ஒவ்வொருவருக்கும் கூப்பனை அயராமல் கொடுத்துக் கொண்டிருந்த பெரியவர் கோவில் பட்டரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர் பெரிதாகத் தலையாட்டி விட்டு ஓடினார்.
நாற்பத்தைந்து நிமிடத்தில் அனைவரின் முகத்திலும் மலர்ச்சி காணப்பட்டது. அனைவருக்கும் கூப்பன் வந்து விட்டது போலும்!
சாஸ்திரிகள் சற்று சாந்தமடைந்தார்.
மீண்டும் ஆரம்பித்தார்.
“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின் மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”
மக்கள் அவரைக் கவனிக்கத் தொடங்கிய அதே வேளையில் ‘நகரு நகரு’ என்று ஒரு பெரிய கோஷம் கேட்டது.
அண்டா அண்டாவாக வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கள், புளியோதரை . அத்தோடு பெரிய பெரிய தொன்னைகள் வேறு.
சாஸ்திரிகள் முழித்தார். அவருக்கு உதவ ஹரிஹரன் ஓடோடி வந்தார்.
“அண்ணா, வேறொண்ணுமில்லை. பெரியவர் இன்று பிரசாதம் தன் உபயம்னு சொல்லி தடபுடலாக எற்பாடு பண்ணிட்டார். கூப்பன் கொடுக்கற்துக்குள்ளே ஸ்பெஷல் அடுப்புகள் மூட்டி எல்லாம் ரெடி!. டைம் ஆறது. பஸ்ஸிலே போறவாளுக்கு பஸ் கிடைக்கணும். முதல்லே நைவேத்யம் பண்ணிடுங்கோ” கூட்டத்தில் முன் வரிசையில் இதைக் கேட்டவர்கள் தலையை ஆட்டி அதை ஆமோதித்தனர். விவரம் காதோடு கிசு கிசுவென்று பரவ கூட்டம் மொத்தமும் கலகலப்பாகக் கை தட்டியது.
நைவேத்யம் நடந்தது.
இவர்களுக்கு விநியோகம் நடக்க ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும்!
அனைவரும் வரிசையாக நின்றனர்.
கூட்டத்தில் நிற்பவர்கள் சும்மாவா நிற்பார்கள்! ஒருவருக்கொருவர் – சாஸ்திரிகள் காது படவே தான் – பேசிக் கொண்டனர்.
“இந்த மாதிரி உபந்யாசம் இது வரை கேட்டதே இல்லை. எவ்வளவு படித்தவா! எத்தனை பெரியவர்! சுப சகுனம் என்று ஆரம்பித்தார் பாரு, வேஷ்டி, ரவிக்கை, சட்டைன்னு ஒவ்வொருவருக்கும் கூரையிலேர்ந்து கொட்டறது. இவர் சொன்னா எதுவும் நடக்கிற மஹிமை இவர்ட்ட இருக்கு!”
“அட அதை விடு! இங்க பாரு! பெரிய தொன்னைலே வயிற்றுக்கு நிறைய வெண் பொங்கல், மூட நெய் முழங்கை வழி வார நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை….”
தாய்க்குலம் சாஸ்திரிகளை நமஸ்கரித்து மகிழ்ந்தது. அன்று வீட்டில் சமைக்க வேண்டாம் என்பதாலோ!
கடைசி வரைக்கும் திரிஜடை சீதையிடம் சொன்னது என்ன என்று சாஸ்திரிகளால் சொல்ல முடியவில்லை.
ஆனால் மணியான பிரசங்கம் என்று பெயர் கிடைத்து விட்டதே! இதற்கு மேல் என்ன ஸார் வேணும்!
MONEY ஆன பிரசங்கம் சார் அது! ஒப்புக் கொள்கிறீர்களா!
**********
You must be logged in to post a comment.