
Written by London Swaminathan
Date: 11 October 2016
Time uploaded in London: 8-54 AM
Post No.3241
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com

Ardhanaareeswarar painted by Robert Ryan (Half Siva+Half Uma)
இந்துமதத்தின் மகத்தான சிறப்பு கடவுளையும் கூட நக்கல் அடிக்கலாம்; கிண்டல் செய்யலாம்; பகடி பேசலாம். இது மரியாதைக் குறைவின் பேரில் பிறந்ததல்ல; அன்பின் மிகுதியால் தோன்றியது. கண்ணனை சேவகனாகவும் தாயாகவும், நண்பனாகவும் உருவகிக்கும் பாரதி பாடல்களில் இதைக் காணலாம். கண்ணனை வெண்ணை திருடிக் கண்ணன் (Chor) என்று ஹிந்தி பஜனைப் பாடல்கள் பேசும்; சிவ பெருமானை பிச்சைக்காரன்/ பிக்ஷாடனர் என்று பக்திப் பாடல்கள் பாடிப் பரவும். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு. மற்ற மதங்களில் கடவுளை எட்டாத தூரத்தில் இருக்கும் ஒரு “கடுமையான ஆண்மகன்” என்று வருணிப்பர். ஆனால் இந்துவோ, தனது வீட்டில் பிறந்த குழந்தைகளை வாய்க்கு வந்த பெயர் எல்லாம் சொல்லிக் கொஞ்சுவது போல, பட்டப் பெயர்களைச் சூட்டுவது போல, பிறந்த அப்பா, அம்மாவையே அன்பாகப் பட்ட பெயர் சொல்லி அழைப்பதுபோல, அழைப்பான்.
நான் பாரதியார் பணியாற்றிய மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒன்றரைக் கண்; அதாவது மாறு கண் (SQUINT EYE). எனது சஹ மாணவர்கள் அவருக்கு வைத்த பெயர் அரைப் பரம சிவம்; முதலில் எனக்குப் புரியவில்லை. ஏனெனில், அவரோ ஐய்யங்கார். பட்டை நாமத்துடன் வந்துதான் வகுப் பு நடத்துவார். பின்னர்தான் புரிந்தது சிவபெருமானுக்கு மூன்று கண்கள்; இந்த வாத்தியாருக்கு அதில் பாதி — ஒன்றரைக் கண்—என்று!
பள்ளிப் பாடங்களில் ‘பாஸ் மார்க்’கான (Pass Mark) நூற்றுக்கு 35 மதிப்பெண்கூட எடுக்கத் தவிக்கும் மாணவர்கள், வாத்தியார்களுக்கு வைக்கும் பட்டப் பெயர்களைப் பார்த்தால் அவர்களுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசே கொடுக்கலாம் போலிருக்கும்! மதிய வேளைகளில் மதியச் சாப்பாட்டுக்குக்காக ஸ்கூல் கிரவுண்டில் (School Ground) மரத்துக்கு அடியில் மணல் வெளியில் உட்காருவோம்; அப்பொழுது அவர்கள் தமிழ் திரைப்படம் பற்றிச் செய்யும் விமர்சன ங்களைப் (Film Criticism) பார்த்தால், “அடப் பாவிப் பயல்களா! இவ்வளவு அறிவையும் தமிழ்ப் பாடத்தில்– ஆங்கிலப் பாடத்தில்—செலுத்தக் கூ டாதா என்று வியக்கத் தோன்றும். அப்படி விமர்சனம் செய்வார்கள். இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்தது அப்பரின் தேவாரப் பாடல்; இதோ அந்தப் பாடல்:–
“இன்று அரைக் கண் உடையார் எங்கும்
இல்லை; இமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட்
பாவைக்குக் கூறிட்ட நாள்
அன்றுஅரைக் கண்ணும் கொடுத்து உமை
யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்! ஒற்றி
ஊர் உறை உத்தமனே”
–திருநாவுக்கரசர் (அப்பர்),நாலாம் திருமுறை தேவாரப் பதிகம் 86, பாடல் எண்.7

மாதொருபாகனாகிய– அர்த்தநாரீஸ்வரனாகிய — சிவ பெருமானை வருணிக்கும் அப்பர் சொல்லுகிறார்:–
இரு கண் உடயவர்கள் உலகெங்கும் உளர்; ஆனால் அரைக் கண் உடையவர் இலர்; இமயமலக்கு உரிய – பர்வத ராஜன் புதல்வியான குலமகள் — பார்வதிக்கு — உமையம்மைக்கு — நீ பாதி வடிவத்தைக் கொடுத்ததா ல் அரைக் கண் உடையவனாகிவிட்டாய். நீயோ முக்கண்ணன் உடலில் பாதிப் போனதால் மிஞ்சியிருப்பது ஒன்றரைக் கண் அல்லவோ! திரு ஒற்றியூரில் அமர்ந்து அருளும் உத்தமனே ஆகிய ஒன்றரைக் கண்ணனை எல்லோரும் காண வாரீர்.
என்ன அற்புதமான கிண்டல்.
இறைவன் முழுக் கண்ணால் பார்த்தால் நாம் தாங்க மாட்டோம். எப்போதும் உன் கடைக் கண் பார்வை வேண்டும் என்றுதான் இந்துக்கள் வேண்டுவர். ஒன்றரைக் கண் பார்வையைக் கூடத் தாங்க மாட்டாதவர்கள் நாம். அவன் முக்கண் திறந்துவிட்டாலோ மன்மதனை எரித்தது போல நமது பாவங்கள் எரிந் து பொடிபடும். ஏனெனில் அந்த மூன்றாவது கண் ஞானக் கண்; ஊனக் கண் அல்ல.
சிவ, சிவ சிவ! ஓம் நமசிவாய!!
You must be logged in to post a comment.