
Written by London swaminathan
Date: 18 December 2016
Time uploaded in London:- 10-44 AM
Post No.3461
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
உலகின் மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.
ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.
ஓம்காரத்தில் வேதம் துவங்குவதை யார் சொன்னார்?
உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் சொன்னான்:
வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்
ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ
–ரகுவம்சம் 1-11
வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.
திருவாசகத்தில்

ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில் துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்
உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.
கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்.
மாணிக்கவாசகர் செய்த எல்லாவற்றையும் செய்ய முயன்ரறவர் பாரதியார். மணிவாசகப் பெருமானைப்போல திருப்பள்ளி எழுச்சி, அகவல், திருத்த்சாங்கம், குயிற்பாட்டு முதலிய பல செய்யுட்களை யாத்த பாரதி, அவரது புகழ் மிகு நூலான பாஞ்சாலி சபதத்தையும் ஓம்காரத்தில் துவங்கி அதிலேயே முடிக்கிறார்.
பாரதி பாடலில்
பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்:
ஓமெனப் பெரியோர்கள் – என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்,
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்
தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே – மனம்
நாடரிதாய் புந்தி தேடரிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடும் பிரமம் என்பார் – அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்
என்று பாடுகிறார். இதில் ஓம்காரத்தின் பெருமை முழுதும் கூறப்பட்டுள்ளது.

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:
ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை
பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று
சாமி தருமன் புவிக்கே – என்று
சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!
நாமுங் கதையை முடித்தோம் – இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.
அருமையான முடிவு.
திருமந்திரத்தில்
ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓம்கார சீவ பரசிவ ரூபமே

பொருள்:-
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்தே உண்டாயின –ஓம்காரத்திலிருந்துதான் அசையும், அசையாப் பொருட்கள் உண்டாயின. ஓம் எனும் பிரணவத்துள்ளே விஞ்ஞானகலர் (ஆணவ மலம் பற்றிய ஆன்மா), பிரளயாகலர் (ஆணவம், கன்மம் இரண்டும்), சகலர் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பற்றிய ஆன்மா) ஆகிய மூன்று வகைப்பட்ட உயிர்களும் ஒடுங்கியுள்ளன. ஓம்காரம் என்பது சிவ சொரூபமாகவும் பரசிவ வடிவமாகவும் அமைந்தது. ஓம் எனும் பிரணவம் மந்திரம் மட்டும் அல்ல; மகேசனின் உருவமும் ஆகும்.
திருப்புகழில்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நிறைய இடங்களில் ஓம்காரப் பெருமை கூறப்படுகிறது. இதோ ஒரே ஒரு திருப்புபுகழ்:
காமியத்தில் அழுந்தி இளையாதே
காலர் கைப்படிந்து மடியாதே
ஓமெழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தமருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுக லீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத்தமர்ந்த பெருமாளே

வள்ளலார் பாடலில்
அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-
சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்
திறனருளி மலைய முனிவன்
சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிகாரத்னமே
என்று புகழ்கிறார்.
சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–
ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா
கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ
–பாதஞ்ஜலதர்சனம்
பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.
பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.
சுவாமி விவேகாநந்தர் ஒரு அருமையான கருத்தை முன்வைக்கிறார்; எல்லா எண்ணங்களுக்கும் ஒரு சொல் உண்டு. சொல்லையும் அந்த எண்ணத்தையும் (Thought and Word cannot be separated) பிரிக்கமுடியாது. எல்லாப் பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு அவை இரண்டையும் பிரிக்க முடியாது (Word and Meaning). ஆனால் ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல சொற்கள் இருக்கும்– கடவுள் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும்— தண்ணீர் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும். ஆகையால் ஒரே சொல்லை வைத்து அந்தப் பொருளை விளக்கமுடியாது. ஆனால் ஓம் என்ற சொல் மட்டும் மொழிக்கு அப்பாற்பட்ட சப்தம் – அது இறைவனையே குறிக்கும். வைஷ்ணவர்கள் விஷ்ணு என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர்; சைவர்கள் சிவன் என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர். ஆனால் ஓம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். சைவ வைஷ்ணவ சாக்தர்கள் மட்டுமின்றி, சமணர்கள், பௌத்தர்கள் சீக்கியர்களும் ஓம்காரத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பார்.
இது மிகப்பெரிய உண்மை: இந்தியாவில் தோன்றிய எல்லா மதங்களுக்கும் ஓம் என்பது பொது; அதை சம்ஸ்கிருதத்திலும் எழுதலாம்; தமிழிலும் எழுதலாம் வெவ்வேறு உருவில் இருக்கும். ஆனால் சப்தம் ஒன்றே!
கடவுளை சப்தப் பிரம்ம என்பர்; இந்த உலகமே ஓம்காரத்தில் துவங்கியது. ஓம்காரத்தின் பெருமையை எல்லா முக்கிய உபநிஷத்துகளும் பறை சாற்றுகின்றன.

சிவபரத்துவ நிச்சயம்
பாடல் 2
பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.
அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில்
மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத
திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக
மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம்.
(அ-ரை) அந்தரம் – அந்தரிக்ஷம்; உமைவாழ் பாகச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் – சிவலோகம்; எவ்வம் – கேடு; அருந்தந் தன்னில் – அருத்த மாத்திரையில்.
‘கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய’ என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், ‘அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா’ என்ற வராகோபநிஷத்தும், ‘அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:’, “ப்ருதிவி – – அகாரே – – அந்தரிக்ஷம் – – உகாரே – – த்யெள: – – மகாரே – – பஞ்ச தைவதம் ஓங்காரம் ‘ என்ற தியாநபிந்தூப நிஷத்தும், ‘ப்ருதிவ்யகார: – – அந்த ரிக்ஷம் ஸ உகார: – – த்யெள: ஸ மகார: – – ஸோமலோக ஒங்கார:’ என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், ‘அரைமாத்திரையி லடங்கும்மடி’ என்ற தேவாரமும், ‘மஹோசாநமவாங்மநஸகோசரம்’ என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
ஓமின் புகழை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது.சுட்டிக்காட்டவே இயலும்!

ஓம் நம சிவாய; ஓம் நமோ நாராயணாய
–subam–