இலக்கிய தசாங்கமும் பூஜை தசாங்கமும் (Post No.3570)

Written by London swaminathan

 

Date: 23 January 2017

 

Time uploaded in London:- 10-37 am

 

Post No.3570

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

இலக்கியத்தில் தசாங்கம் என்பது பத்து அம்சங்களை வைத்துப் பாடுவதாகும். இந்து சமயத்தில் பூஜை முதையவற்றில் இறுதியில் காட்டும் தூப, தீபாரதனையில் தசாங்கம் என்னும் தூபம் பத்து வாசனைத் திரவியங்களினால் ஆன வாசனைப் பொடியை எரித்து நறுமனப் புகை உண்டாகுவதாகும்

 

முதலில் இலக்கியத்தில் தசாங்கம் என்னும் சிற்றிலக்கிய வகையைக் காண்போம்.

 

வரையாறு நாடு நகரூர் துரக மதகரியே

விரையாரு மாலை முரசம் பதாகை மெய்யாணையென்னு

முரையார் தசாங்கத்தினொவ்வொன்றை நாடியுற வகுத்தே

தரையாளு மன்னர் முதலா யெவருக்கும் சாற்றுகவே

 

–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

பொருள்:-

தச+அங்கம்=தசாங்கம், அதவது பத்து பகுதிகள்/உறுப்புகள். அவையாவன

வரை = மலை

யாறு= நதி

நாடு = நாடு

நகர்= நகரம்

ஊர் துரகம்= ஊர்ந்து செல்லும் குதிரை

மதகரி= யானை

விரையாருமாலை = நறுமணம் வீசும் பூமாலை

முரசம் = முரசு

பதாகை = கொடி

மெய் ஆணை = அரச கட்டளை

என்னும் உரை ஆர்= என்று சொல்லப்பட்ட

 

 

தசாங்கத்தில் = பத்து உறுப்புகளில்

ஒவ்வொன்றை நாடி = ஒவ்வொன்றையும் ஆராய்ந்து

வகுத்தே = கூறியவற்றை

தரை ஆளும் மன்னர் முதலா= ஆட்சி செய்யும் மன்னர் முதலானோருக்கு

சாற்றுகவே= சொல்லுக

இந்த அமைப்பை பாரதியாரின் பாடல் ஒன்றிலும், மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடலொன்றிலும் காணலாம்;

 

பாரதியார் பாடிய பாரத தேவியின் திருத் தசாங்கம் என்னும் பாடலில் பாரததேவி மீது நாமம்/ பெயர், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி/வாஹனம், படை, முரசு, தார்/மாலை, கொடி என்ற வரிசையில் பாடியிருக்கிறார்.

 

திருவாசகத்தில் மாணிக்க வாசகர் திருத் தசாங்கம் என்ற பகுதியில் சிவபெருமான் மீது பாடிய பாடலில் தலைவனுடைய பெயர், நாடு, ஊர், ஆ,று, மலை, குதிரை, படை, பறை/முரசு, மலை, கொடி என்ற பத்துறுப்புக, ளையும் வைத்துப் பாடி இருக்கிறார். இது அவர் தில்லைச் சிதம்பரத்தில் பாடிய பாடல்.

 

 

பத்து உறுப்புகள் விஷயத்தில் சிறிது தளர்வு உண்டு. ஓரிரு அம்சங்களுக்குப் பதிலாக வேறு சில அம்சங்கள் இடம்பெறுவதும் உண்டு.

 

பூஜையில் தசாங்கம்

 

இந்துக்களின் வீடுகளிலும் கோவில்களிலும் நடைபெறும் பூஜைகளின் இறுதியில் தூப, தீபங்கள் காட்டப்படும் அதில் ஒரு மந்திரம், உனக்கு தசாங்கத்தைச் சமர்ப்பிக்கிறேன் என்று வரும்.

 

 

தசாங்கம் குக்குலோ பேதம் சுகந்தம் ச மநோஹரம்

தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹான த்வம் கஜானன/ அல்லது அவரவர் இஷ்ட தேவதை வரும்.

 

அந்த தசாங்கம் என்பது நறுமணத் தூள் ஆகும். அதை எரியும் அனலில் போட்டு, நறுமணப் புகை எழுப்புவர். அதை முகர்ந்தால் நோய்கள் அகலும்; மேலும் எங்கும் நறுமணம் பரவி  நல்ல சூழ்நிலை ஏற்படும்.

 

அந்த தசாங்கப் பவுடரில், சந்தனம், வெள்ளை அகில், குங்கிலியம், கோரைக் கிழங்கு, சாம்பிரானி, கார் அகில், மட்டிப்பால், தேவதாரு மரத்தூள் முதலிய பொருட்களின் பொடிகள் இருக்கும்.

 

–சுபம்–

 

Leave a comment

3 Comments

  1. Nirmala's avatar

    Nirmala

     /  August 14, 2020

    தசாங்க பொடியில் 8 மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள் தயை கூர்ந்து பத்தையும் கூறவும்

  2. Tamil and Vedas's avatar

    SOME BOOKS SAY புனுகு, கஸ்தூரி . BUT IT IS NOT AUTHORITATIVE.புனுகு, கஸ்தூரி ஆகிய இரண்டையும் சேர்த்தால் பத்து ஆகும். ஆயினும் இவை இரண்டும் ஒரு வகைப் பூனை , மான் ஆகியவற்றிலிருந்து கிடைப்பதால் , சிலர் தவிர்த்திருக்கக்கூடும். இதற்கு ஆதார பூர்வ சுலோகம் , பாடல் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தால் இப்பகுதியில் இணைக்கிறேன். வியாபரப் பொருள்களில் அவரவர் இஷடம்போல பத்துப் பொருட்களை சேர்க்கின்றனர்.

  3. Tamil and Vedas's avatar

    புனுகு, கஸ்தூரி ஆகிய இரண்டையும் சேர்த்தால் பத்து ஆகும். ஆயினும் இவை இரண்டும் ஒரு வகைப் பூனை , மான் ஆகியவற்றிலிருந்து கிடைப்பதால் , சிலர் தவிர்த்திருக்கக்கூடும். இதற்கு ஆதார பூர்வ சுலோகம் , பாடல் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தால் இப்பகுதியில் இணைக்கிறேன். வியாபரப் பொருள்களில் அவரவர் இஷடம்போல பத்துப் பொருட்களை சேர்க்கின்றனர்.

Leave a comment