அதிசய புத்த துறவி ஸு யுன்! முடிவுரை Part – 39 (Post No.3739)

Written by S NAGARAJAN

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3739

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 39

ச.நாகராஜன்

 

முடிவுரை

 

நூறு வயது வாழ்ந்த பெரியோரின் வரிசையில் காஞ்சி பரமாசார்யர் மஹா பெரியவாள், பண்டிட் சாத்வலேகர், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, அரவிந்த மஹரிஷியின் சீடரான நிரோத்பரன் ஆகியோரைப் பற்றி எழுதி முடித்தவுடன் அடுத்து 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி மாஸ்டர் ஸு யுன் பற்றி எழுத முனைந்தேன்.

 

Empty Cloud  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அது அவரது அற்புதமான சுய சரிதம். அது 320 பக்கங்கள் கொண்ட பெரிய நூல்..

 

ஏராளமான அருமையான புத்த மத நூல்களை எனக்கு இலவசமாக தபால் செலவையும் தாமே ஏற்று அனுப்பி வரும் பெரிய புத்த மத தர்ம நிறுவனம்

 

The Corporate Body of the Buddha Educational Foundation

Taipei, Taiwan.

 

Xu Yun (Picture from Wikipedia,thanks.)

இந்த நிறுவனம் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் தான் எனக்கு ‘எம்ப்டி க்ளௌட்’ புத்தக்கத்தையும் அனுப்பி உதவியது.

 

 

இவர்களுக்கு வெறும் வார்த்தையால் நன்றி என்று சொல்வது மட்டும் போதுமா? என் உளமார்ந்த அன்பும் வணக்கமும் கலந்த ந்ன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

 

இந்தப் பெரியாரின் சரிதத்தை ஒரு கட்டுரையில் தருவது தான் முதலில் எனது எண்ணமாக இருந்தது. .ஆனால் எழுத எழ்த இது இந்த 39வது அத்தியாயம் வரை நீண்டு விட்டது.

இது புத்தரின் கருணையே.

 

இந்தத் தமிழாக்கம் பெரிய புத்தகத்தின் சொல்லுக்குச் சொல், வரிக்கு வரியான தமிழாக்கம் அல்ல இது. திரண்ட சுருக்கம் என்றே சொல்லலாம். பல நீண்ட சொற்பொழிவுகளை இங்கு சேர்க்கவில்லை.

நெருடலான மொழிபெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை.

சீன நகர்களின் பெயர்கள், சீன பெரியோரின் பெயர்கள். புத்த மத கலாசாரம் சம்பந்தமான் கலைச் சொற்களை ஆகியவற்றை அப்படியே எழுதியதால், படிப்பதில் சிரமம் இருக்கலாம். சம்பிரதாயமான புத்த தம்ம கலைச் சொற்கள் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டவை. அதன் விளக்கம் புத்த தர்மத்தைப் பற்றி ஆழ்ந்து படித்த்வர்களாலேயே நன்கு உணர முடியும்.

என்றாலும் இந்த வார்த்தைகள் தமிழ் அன்பர்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டி விட்டு அவற்றைப் பற்றி மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கும் என்றே நம்புகிறேன்,

 

புத்தமதம், ஜென், கோயன்கள் பற்றி பல கட்டுரைகளை எழுத தைவான் புத்தகங்களும் எனது சேகரிப்பில் உள்ள இதர புத்த மத நூல்களுமே காரணம்.

 

யோக வாசிஷ்டம் உள்ளிட்ட ஆழ்ந்த அத்வைதக் க்ருத்துக்கள் அடங்கிய நூல்களில் அதிகம் ஈடுபாடுள்ள எனக்கு சூன்ய வாத  கொள்கையை உடைய புத்தமத நூல்களின் மீதும் புத்த தர்ம ஆசார்யர்களின் மீதும் எப்படி ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு எனது எளிமையான பதில் ஒன்று உண்டு.

 

எதையும் ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள் என்கிறது புத்த மதம்.

இதனாலேயே அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு (அம்பேத்கர் என்ற ‘அ’வில் ஆரம்பித்து ‘ஜ’ வழியே சென்றால் ஆயிரக்கணக்கான பெயர்களைப் பட்டியலிடலாம்) உள்ளிட்ட சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், நாத்திகர்களாகவும் ஆக முடியாமல் ஆத்திகர்களாகவும் ஆக முடியாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் அக்னாஸ்டிக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் அறிவால் எதையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் புத்தரின் உபதேசங்களால் கவரப்படுகின்றனர்,

 

அருணகிரிநாதர் திருப்புகழில்,

 

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே

என முருகனைப் பற்றிப் பாடுகிறார்.

 

அறிவால் அறிதலையும் புத்தரின் மீதான பக்தியையும் புத்த தர்மம் வலியுறுத்துகிறது..

 

இப்படி அறிவு வழியே பக்தியுடன் சரியாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் சரியான, இறுதியான பேரறிவை அடைந்தே தீருவர் என்பது நமது அறநூல்களின் முடிபு

 

ஆகவே புத்தமத நூல்களும் அதைப் பின்பற்றும் பெரியோர்களின் சரிதமும் கூட ஒரே உண்மையை அடையும் வழிகளுள் ஒன்றே!

 

தவறாமல் புத்த மத நூல்களை நான் படிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு.

இந்து மதத்தின் முக்கிய கொள்கையான கர்மா மற்றும் மறு பிறப்பு உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் மதம் புத்த மதம். சீலமே அடிப்படை என்கிறது புத்த மதம். இதுவே இந்து மத தத்துவமும் கூட.

 

ஆகவே இதைப் படிப்பதிலும் புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றுவதிலும் யாருக்கும் எந்த வித சிக்கலும் உருவாகாது.

சீலத்திற்கு பிரபஞ்சமே அடி பணியும்.

 

 

பிறந்த நாட்டிலேயே அழிந்து ஒழிந்த கம்யூனிஸ்டு கொள்கை சீனாவில் அடியெடுத்து வைத்தவுடன் கம்யூனிஸ்டு குண்டர்களால் சீனா சீரழிந்ததையும் மாஸ்ட்ர் ஸு யுன்னின் வரலாறில் காணலாம்.

 

புத்தரின் கருணையால் கம்யூனிஸம் அழிந்து பட்டு அஹிம்சை வழியே சீனா அறப்பண்புகளைப் பெற்று  பாரதத்துடன் பழைய நாட்களில் கொண்டிருந்த பெரும் நட்புடன் மீண்டும் இணக்கமாக செய்லப்டும் அற்புதமான் நாட்கள் வந்தே தீரும்.

 

அதை அருளுமாறு புத்தரை இறைஞ்சுகிறேன்.

 

 

இந்த நெடுந்தொடரை http://www.tamilandvedas.comஇல் வெளியிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதைப் படித்த அனைத்து வாசகர்களுக்கும் புத்தரின் அருள் உரித்தாகுக;

 

புத்தம் சரணம் கச்சாமி!

ச.நாகராஜன்

பெங்களூரு

12-3-2017

துர்முகி வருடம் மாசி மாதம் 28ஆம் நாள்  –  பௌர்ணமி தினம்

முற்றும்

Leave a comment

Leave a comment