ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை (Post No.3900)

Written by S NAGARAJAN

 

Date: 12 May 2017

 

Time uploaded in London:-  6-10 am

 

 

Post No.3900

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

ஜென் வழிகாட்டி

 

 

ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை

 

ச.நாகராஜன்

 

ஜப்பானைச் சேர்ந்த பெரிய ஜென் மாஸ்டர் ஹோஷின் (Hohin) சீனாவில் சில காலம் வாழ்ந்து வந்தார்.பின்னர் அவர் ஜப்பானின் வடகிழக்குப் பகுதிக்குத் திரும்பினார்.

 

ஒரு நாள் ஜப்பானில் தனது சீடர்களுக்குத் தான் சீனாவில் கேட்ட கதை ஒன்றைக் கூறலானார்.

இது தான் அந்தக் கதை;

 

டோகுஃபு (Tokufu) என்பவர் ஒரு பெரிய ஜென் மாஸ்டர். மிகுந்த வயதாகி முதுமையின் பிடியில் அவர் இருந்தார். ஒரு வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் நாள் தன் சீடர்களை அழைத்த அவர், “நான் அடுத்த வருடம் உயிரோடு இருக்க மாட்டேன். ஆகவே நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைக்க வேண்டும்” என்றார்.

 

அவர் சும்மா வேடிக்கையாக அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்று அனைத்து சீடர்களும் நினைத்தனர். என்றாலும் அந்த மாஸ்டரை அனைவருக்கும் பிடிக்கும். பெரிய மனது படைத்த சிறந்த மாஸ்டர் அவர்.

 

ஆகவே  ஒவ்வொரு சீடரும் முறை போட்டுக் கொண்டு அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவருக்கு விருந்து வைத்தனர்.

 

அடுத்த ஆண்டு பிறந்தது. அனைவரையும் அழைத்த டோகுஃபு, “நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைத்தீர்கள். நாளை மதியம் பனி பொழிவது நின்றவுடன் நான் போய் விடுவேன்” என்றார்.

 

 

சீடர்கள் அனைவரும் சிரித்தனர். அவருக்கு வயதான காரணத்தால் ஏதேதோ சொல்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். குறிப்பாக முதல் நாள் இரவில் பனி பொழியவில்லை. நல்ல பனி இல்லாத வானம் இருந்தது. ஆகவே அவர் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.

ஆனால் திடிரென்று அன்றைய இரவில் பனி பொழிய் ஆரம்பித்தது. மறு நாள் பகலில் அவரைக் காணவில்லை. சீடர்கள் அனைவரும் தியான மண்டபத்திற்கு ஓடோடிச் சென்றனர்.

 

 

அங்கே அவர் இறந்து நிர்வாண நிலையை அடைந்திருந்தார்.

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய மாஸ்டர் ஹோஷின் தொடர்ந்து கூறினார்: “ ஒரு ஜென் மாஸ்டருக்குத் தான் எப்போது “போகப் போகிறோம்” என்பதைச் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் இல்லை. ஆனால் அவர் நிஜமாகவே சொல்ல  வேண்டுமென்று நினைத்தால் அதைச் சொல்லலாம்” என்றார்.

 

சீடர்களில் ஒருவர், “உங்களால் அப்படிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

 

“முடியுமே” என்று கூறிய ஹோஷின்,”உங்களுக்கு இன்றிலிருந்து ஏழாம் நாள் என்னால் போக முடியும் என்பதைக் காண்பிக்கிறேன்” என்றார்.

 

சீடர்களில் ஒருவரும் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர் கூறியதை பெரும்பாலானோர் மறந்தே விட்டனர்.

ஆனால் ஏழாம் நாளன்று அனைவரையும் அவர் அழைத்தார்.

 

 

“ஏழு நாட்களுக்கு முன்னர் நான் உங்களிடம் உங்களை விட்டுப் போய் விடுவேன் என்று கூறி இருந்தேன். போவதற்கு முன்னர் கடைசிக் கவிதை எழுதுவது சம்பிரதாயமாகத் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால் நானோ ஒரு கவிஞனும் இல்லை; எழுத்துக்களை அழகுற எழுதும் எழுத்தோவியரும் இல்லை. ஆகவே உங்களில் யாரேனும் ஒருவர் நான் சொல்லும் கடைசிக் கவிதையை எழுதுங்கள்” என்றார்.

அவர் வேடிக்கையாக இதைச் சொல்கிறார் என்று நினைத்த சீடர்கள், தங்களில் ஒருவரை அவர் சொல்வதை எழுதச் சொன்னார்கள்

 

அவரைப் பார்த்த ஹோஷின்,” நீ தயாரா?” என்றார்.

“ஆமாம், ஐயா” என்றார் சீடர்.

 

ஹோஷின் கவிதையைக் கூறலானார்:

“நான் பிரகாசத்திலிருந்து வந்தேன்.

 

மீண்டும் பிரகாசத்திற்குச் செல்கிறேன்.

 

என்ன இது?”

இத்தோடு நிறுத்தினார் அவர். சாதாரணமாக ஒரு கவிதை நான்கு வரிகளைக் கொண்டதாக இருத்த மரபு.

இப்போது ஒரு வரி குறைகிறது.

 

சீடர் அவரை நோக்கி, “மாஸ்டர், இன்னும் ஒரு வரி வேண்டும்” என்றார்.

சிங்கத்தை ஜெயிக்க நினைக்கும் ஒருவன் போடும் கூக்குரலான “கா” என்ற கர்ஜனைச் சொல்லை அவர் உதிர்த்தார்.

 

அத்தோடு அவர் மூச்சும் நின்றது.

 

சீடர்கள் பிரமித்து விக்கித்து நின்றனர்.

Leave a comment

Leave a comment