
Written by S NAGARAJAN
Date: 16 May 2017
Time uploaded in London:- 6-08 am
Post No.3912
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
நகைச்சுவை விருந்து
கம்யூனிஸ ஜோக்குகள்!
ச.நாகராஜன்
கம்யூனிஸ ஜோக்குகள் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் எப்படியெல்லாம் கம்யூனிஸம் அடக்கி விடும் என்பதைத் தெரிவிப்பவை. கம்யூனிஸ கொள்கைகள் அது பிறந்த நாட்டிலேயே செத்து மடிந்த போதும் கூட இன்றும் காம்ரேடுகள் இங்கு அதைக் கட்டி அழுவது விசித்திரமே!
சில கம்யூனிஸ ஜோக்குகள் இதோ:-

சராசரி நாள்!
கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாட்களைத் தள்ளுவது கஷ்டம் தான்!
ஆனால் காம்ரேடுகள் அதை ஒப்புக் கொள்வார்களா, என்ன?
நாளைய தினத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் ரஷியாவில் சொல்லப்படும் அறிவிப்பு :
இன்று சராசரியான ஒரு நாள். – நேற்றைய தினத்தை விட மோசமான நாள்; நாளைய தினத்தை விட நல்ல நாள்!

உண்மையையே சொல்லும் ப்ராவ்தா
ப்ராவ்தா என்ற ரஷிய பத்திரிகை செய்தியை வெளியிடும் விதத்தைப் பற்றி ஏராளமான ஜோக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:-
ப்ராவ்தா பத்திரிகைக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு:- ஐவான் ஐவனோவிச் லண்டாவ் இன்ஸ்டிடியூட்டில் (Landau Institute) உள்ள தனது லாபரட்டரியில் கோல்ட் ஃப்யூஷன் (cold fusion) சோதனையில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறாராமே, நீங்கள் பிரசுரித்திருக்கும் அந்தச் செய்தி உண்மையா?
இதற்கு ப்ராவ்தாவின் பதில்:
ஆமாம், அந்தச் செய்தி உண்மை தான். ஆனால் அதில் சில சின்னத் திருத்தங்கள் உள்ளன. இன்ஸ்டிடியூட் லண்டாவில் இல்லை. அது டப்னாவில் (Dubna) உள்ளது. சோதனையைச் செய்தது ஐவான் ஐவனோவிச் அல்ல; செய்தவர் பியோட்ர் பியோட்ரோவிச். அவர் சாதனை படைத்தது கோல்ட் ஃப்யூஷனில் இல்லை; மாறாக அவர் செய்தது இஸ்ரேலுக்கு ஓடிப்போனது தான்!

கடவுளும் உருளைக்கிழங்கும்
விஞ்ஞான ரீதியாக விவசாயம் செய்வதில் முனைந்த மாஸ்கோ அரசின் போலிட்பீரோ விஷயம் தெரித தனது காம்ரேட் ஒருவர் தலைமையில் குழு ஒன்றை மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ஒரு கூட்டுறவுப் பண்ணைக்கு அனுப்பியது.
“உருளைக்கிழங்கு விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது, தோழரே!” என்று கேட்டார் குழுவின் தலைவர்.
“பிரமாதமாய் இருக்கிறது, காம்ரேட்” என்று ஆரம்பித்த விவசாயி, ‘ எல்லா உருளைக்கிழங்குகளையும் ஒரே இடத்தில் சேகரித்துக் குவித்தால் அது தரையிலிருந்து கடவுளின் சொர்க்கம் வரை போய் விடும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
குழுத் தலைவர் கோபமாக, “ என்ன சொல்கிறாய், தோழா, இது சோவியத் யூனியன். இங்கு கடவுளே கிடையாது, உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
“ஆமாம், ஆமாம், இது சோவியத் யூனியன் தான். இங்கு உருளைக்கிழங்கும் கிடையாதே, அது தெரியாதா உங்களுக்கு?”
என்று பதில் சொன்னார் அந்த விவசாயி.

நான்கு பேருக்குத் தெரியும் நடந்தது என்னவென்று!
வார்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு புகைவண்டியின் பெட்டி ஒன்றில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.
ஒருவர் ரஷியர்; இன்னொருவர் ஒரு விவசாயியின் வயதான மனைவி. மூன்றாமவர் ஒரு இளவயது அழகி; நான்காமவர் போலந்தைச் சேர்ந்த ஒரு லாஜிக் புரபஸர்.
நெடு நேரம் புகைவண்டியில் அவர்கள் பேசாமலேயே அமர்ந்திருந்தனர்.ஒரே நிசப்தம்!
திடீரென்று புகைவண்டி ஒரு குகைக்குள் சென்றது. பெட்டியில் ஒரே இருள். திடீரென்று நிசப்தத்தைக் கலைக்கும் வகையில் ஒரு முத்தமிடும் சப்தம் கேட்டது; அடுத்து பளார் என்று ஒரு அறை விழுந்த சப்தம் கேட்டது.
புகைவண்டி குகையிலிருந்து வெளியேற, வெளிச்சம் வந்தது.
ரஷியர் மிகவும் கலவரமான முகத்துடன் வெளிறிக் காணப்பட்டார். அவரது ஒரு கன்னம் மற்றதை விடச் சிவந்து இருந்தது.
இப்போதும் கூட யாரும் பேசவில்லை. அவரவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் நினைத்தது என்ன, தெரியுமா?
வயதான பெண்மணி நினைத்தது:- ரஷிய மடையனுக்கு நன்கு வேண்டும். அழகி கொடுத்த அடி பிரமாதம்!
ரஷியர் நினைத்தது:- என்ன அநியாயம்! போலந்துக்காரன் கொடுத்த முத்தத்திற்கு நானா பலிக்கடா? என்னை எதற்கு அடிக்க வேண்டும்?
இளம் அழகி நினைத்தாள்:- என்ன விசித்திரம் இது! ரஷிய ஆபீஸர் அந்த வயதான பெண்மணியையா முத்தமிட வேண்டும்? என்ன அநியாயம்?
போலிஷ் லாஜிக் புரபஸர் நினைத்தார்:- அடடா! தேசபக்தியுள்ள அருமையான போலந்துக்காரன் அல்லவா நான்! என் கையை நானே முத்தமிட்டுக் கொண்டு கொடுத்தேன் ஒரு அடியை ரஷியனின் கன்னத்தில்! யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை, யாராவது புத்திசாலியாக இருந்தால் தானே!
***