
Written by London Swaminathan
Date: 20 May 2017
Time uploaded in London: 17-20
Post No. 3926
Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.
contact: swami_48@yahoo.com
வள்ளுவர் திருக்குறளில் சொல்வது என்ன?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)
பொருள்
தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் புற நானூற்றில் இதையே பாடினான்; அமிர்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்பவர் இந்தியாவில் கிடையாது; புகழ் என்றால் உயிரையும் கொடுப்பர்; பழி வருமானால் உலகமே கிடைத்தாலும் வேண்டாம் என்பர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்
–புறம் 182, க.மா. இளம்பெருவழுதி
பகவத் கீதை 3-13-ல் கண்ணனும் மொழிந்தது அதுவே:
யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி
புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்
(பகவத் கீதை 3-13)
பொருள்
யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

அதாவது பஞ்ச யக்ஞம் எனப்படும் ஐந்து வேள்விகளை தினமும் செய்ய வேண்டும்; இதில் மனிதர்கள், தேவர்கள், பிற உயிர்கள், விருந்தாளிகள், இறந்து போனோர் ஆகியோருக்கு படைப்புகள் கொடுப்பது ஐந்து வித வேள்வி – பஞ்ச யக்ஞம் — எனப்படும்.
இப்படி கண்ணன், வள்ளுவன், இளம்பெருவழுதி என்று பலரும் சொல்லக் காரணம் ரிக்வேத மந்திரமாகும். பத்தாவது மண்டலத்தில் உள்ள இந்த மந்திரம் மிகவும் அருமையான மந்திரம். ஒரு கவிஞர் பொழிந்து தள்ளி விட்டார். இதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். அவ்வளவு ஆழமான பொருளுடைத்து. இப்போது ஒரு மந்திரச் செய்யுளை மட்டும் காண்போம்..
“உணவு கேட்டு வந்த நண்பனுக்கு இல்லையென்று கைவிரிப்பவன் நண்பனே இல்லை.
ஏழைகளை பணக்காரர்கள் திருப்தி செய்ய வேண்டும். அதுதான் போகும் வழிக்குத் துணை (அதாவது மறுமையில் பலன் தரும். இறந்த பின்னர் ஒருவன் புண்ணியம் மட்டுமே அவனுடன் கூட வரும்)
செல்வம் என்பது இன்று வரும்; நாளை வேறு ஒருவரிடம் போய்விடும். இது வண்டிச் சக்கரம் போல் சுழலக் கூடியது.
யார் ஒருவன் உழைக்காமலே உணவு பெறுகிறானோ அவன் முட்டாள்; அது அவனைப் பாழாக்கி விடும்
(‘ஐயமிட்டு உண்’ என்று சொன்ன அவ்வைப் பாட்டியே ‘ஏ ற்பது இகழ் ச்சி’ என்றும் சொன்னது போல)
யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

திரு மூலரும் இதையே செப்புவார்:
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
– திருமந்திரம்
காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக.
கிருஷ்ண பரமாத்மாவும், வள்ளுவனும் இளம்பெருவழுதியும், திருமூலரும் பிற்காலத்தில் சொன்ன கருத்தை, அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகன்ற ரிக் வேத ரிஷியைப் போற்றுவோம்.
தமிழில் பழ மறையைப் பாடுவோம்—பாரதி
–SUBHAM–