
Research Article Written by London Swaminathan
Date: 31 May 2017
Time uploaded in London- 15-18
Post No. 3958
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

பிராமணர்களை புத்தரும் வள்ளுவரும் வானளாவ புகழ்ந்துள்ளனர். ஏன்? அவர்கள் அந்தக் காலத்தில் துறவிகள் போல வாழ்ந்தனர்.
புத்தர் தம்ம பதத்தில் மட்டும் சுமார் 45 ஸ்லோகங்களில் பிராமணர்களைப் பற்றி பாடியுள்ளார்.
தம்ம பதம் என்பது புத்த மதத்தினரின் வேதப்புத்தகம்.
தமிழ் வேதம் ஆகிய திருக்குறளில் திருவள்ளுவர் குறைந்தது பத்து இ டங்களில் பிராமணர்களைப் பற்றியும், வேதம்- மந்திரம் – வேள்வி பற்றியும் பாடியுள்ளார்.
புத்தருக்கும் வள்ளுவருக்கும் உள்ள அதிசயமான ஒற்றுமை: பிராமணன் என்பவன் யார் என்று இலக்கணம் வகுத்தது; மற்றும் பிராமணன் என்றாலும் துறவி என்றாலும் ஒன்றே என்று பாடியது.
அந்தத்தை அணவுவோர்= அந்தணர்கள்; அதாவது வேப்ப மரத்தில் எத்தனை இலைகள், கிரஹணம் ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்வதை விட உள்முக ஆராய்ச்சி செய்து இறைவனை நாடுவதே தலையாய பணி என்று கருதினர்.
பிராமணன் என்றால் பிரம்மத்தை (இறைவனை) நாடுவோன் என்று பொருள்.
பார்ப்பான் என்றால் நெடுநோக்கு பார்வை உடையவன்; எந்த உயிரினமும் துன்புறாதவாறு நான் என்ன செயலாம் என்று சதா சர்வகாலமும் சிந்திப்பவன்; அன்பே உருவானவன்.
இந்தக் கருத்து தம்ம பதத்திலும் அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவள்ளுவன் பாடிய திருக்குறளிலும் இருப்பது பெரிய ஒற்றுமை!
புத்தர் , தனது அடியார்களுக்காக புத்த பிட்சுக்கள் பற்றி 25-ஆவது அத்தியாயத்தில் பாடிவிட்டு கடைசியில் 26-ஆவது அத்தியாயத்தில் பிராமண வக்கோ (வர்க) என்று தனியாகப் பாடியதிலிருந்து இது பிராமணர்கள் பற்றியதே என்பது உறுதியாகிறது.
அதே போல அந்தணர், பார்ப்பான், பிராமணன் என்பன துறவியருக்கும் பொருந்தும் என்ற போதிலும் துறவியரைப் பற்றி பாட வந்த தமிழ்ப் புலவர்கள் அதற்காக உள்ள பிரத்யேகச் சொற்களையே – அதாவது முனிவர், இருடி= ரிஷி, துறவி, சந்யாசி என்றே — பயன்படுத்தினர்.
ஆக சுருக்கமாகச் சொன்னால் பிராமணர் துறவியரே; துறவியர் பிராமணரே.
விஸ்வாமித்திரர், எவ்வளவோ கஷ்டப்பட்டு தவம் செய்து, கடைசியில் வசிஷ்டரே அவரை “நீ ஒரு பிராமணன் (பிரம்மரிஷி)” என்று பகழ்ந்த கதை மிகவும் பிரசித்தம்
நிற்க; ஒரு சில குறட் பாக்களையும் அதற்கு இணையான தம்மபத ஸ்லோகங்களையும் தருவன்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் 30)
அந்தணர் என்போர் எல்லா உயிர்களிடத்திலும் அருள்பூண்டு வாழ்பவர்கள்
மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் (குறள் 134)
பிராமணன் வேதத்தை மறந்தாலும் பின்னர் நினைவுபடுத்திக் கொள்ளலாம்; ஆனால் அவன் ஒழுக்கம் கெட்டுப்போனால் மீண்டும் அவனது மதிப்பிற்குரிய முதல் நிலையை அடையவே முடியாது
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)
பிராமணர்கள் போற்றும் வேதங்கள் நிலைபெற மன்னவனின் நேர்மையான ஆட்சி அவசியம்; அதுதான் அடிப்படை.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் (560)
மன்னன் முறையான ஆட்சி செய்யாவிடில் பசுமாடுகள் பால் தராது; ஐயர்கள் வேதங்களைக்கூட மறந்து விடுவார்கள்.
பிராமணர்களையும் பசுக்களையும் இணைத்தே பேசுவதை புற நானூற்றிலும் தேவாரத்திலும் பகவத் கீதையிலும் காணலாம்.
அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்துண்ணாமை நன்று (259)
ஆயிரம் யாக யக்ஞங்கள் செய்வதற்கு சமம் ஒருவன் புலாலை மறுப்பது.
இதை மனுவும் (5-53) சொல்கிறார்; ஒருவன் தினமும் ஒரு அஸ்வமேத யாகம் வீதம் 100 ஆண்டுகளுக்கு அஸ்வமேதம் செய்தால் கிடைக்கும் புண்ணீயம் சைவ உணவு சாப்பிடுவோருக்குக் கிடைக்கும்.
பிராமணர்களை பூலோக தேவர்கள் (பூ சுரர்) என்று தேவாரம் முதலிய பாடல்களில் போற்றுவர். சதபத பிராமணம் முதலிய நூல்களும் பிராமணர்களை நடமாடும் தேவர்கள் என்று போற்றும். இதை வள்ளுவனும் எதிரொலிக்கிறான்:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோடொப்பர் நிலத்து (413)
செவிக்கு உணவாகிய கேள்வியினை (ச்ருதி=வேதம் =கேள்வி) உடையோர், இந்தப் பூவுலகில் , ஹவிஸை உண்ணும் தேவர்களுக்கு சமமாகக் கருதுவர்.
அவி= ஹவிஸ் என்னும் நெய்ச் சோற்றை வள்ளுவன் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறான்; ஐயர்கள் செய்யும் வேள்வியினை சில குறள்களில் சொல்லுகிறான். மந்திரம் பற்றியும் (28) பேசுகிறான்.

தம்ம பதத்தில் புத்தன் சொன்னது என்ன என்பதைக் கீழே படியுங்கள்:–
சொல் செயல் சிந்தனை மூன்றினாலும் யார் ஒருவன் தீங்கு செய்யவில்லையோ – அவனைத்தான் நான் பிராமணன் என்பேன் (தம்மபதம் 391)
ஒரு பிராமணனும், முனிவனும் கடந்த கால பாபத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆவர்; அவர்கள் தாய் தந்தையரைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களையே கொலை செய்திருந்தாலும், ஒரு நாட்டைச் சீரழித்து அந்த நாட்டு மக்கலை அழித்திருந்தாலும் சரி.
(தம்மபதம் 294)
பிராமணனுக்கு எவரும் தீங்கு இழைக்கக் கூடாது; பிராமணனனும் பதிலுக்குப் பதில் தாக்கக்க்டாது. இப்படிச் செய்தால் அவர்கள் பரிகசிக்கவே செய்வார்கள். அந்தோ பரிதாபம். (389)
நீண்ட முடியாலோ (குடுமி), பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் என்ற நிலை வராது; புனிதமும் சத்தியமும் எங்கு இருக்கிறதோ அவ ன்தான் பிராமணன்; அவன் ஆனந்தத்தில் திளைப்பான் (393)
ஏ மூடனே! நீண்ட முடியினால் என்ன பிரயோஜனம்? மான்தோலினால் என்ன பயன்? மனதில் சிக்கல் இருக்கும் வரை, துறவிக்கான அணிகலன்கள் இல்லாவிடில் என்ன பயன்?
இந்த உலகில் அன்னையாக இருப்பது இனிமையானது; தந்தையாக இருப்பது இனிமையானது; துறவியாக இருப்பது இனிமையானது; பிராமணனாக இருப்பது இனிமையானது (332)
யார் ஒருவர் புலன் இன்பத்தை நாடவில்லையோ- தாமரை இலைத் தண்ணீர் போல – ஊசி முனையில் கடுகு போல – வாழ்கின்றனரோ அவர்களைத்தான் நான் பிராமணன் என்பேன் (401)
யார் ஒருவன் பிற உயிர்களுக்கு– வலிதானாலும், மெலிதானாலும் – தீங்கு செய்யவில்லையோ பிற உயிர்களை கொல்லவில்லையோ – கொல்லச் செய்யவில்லையோ – அவனைத்தான் நான் பிராமணன் என்பேன் (405)
ஒரு மனிதன் நல்ல ஆடைகள் உடுத்திக்கொள்ளட்டும்; ஆயினும் அவன் அமைதியாக, நல்லவனாக, தன்னடக்கத்துடன் , நம்பிக்கையுடன், தூய்மையுடன் இருக்கட்டும்; அவன் வேறு எவருக்கும் தீங்கு செய்யவில்லையானால் அவனே புனித பிராமணன், சந்யாசி, பிட்சு (142)
–சுபம்—