
Written by London Swaminathan
Date: 3 June 2017
Time uploaded in London- 12-50
Post No. 3967
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

கிழக்கு வங்காளத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழைப் பிராமணனக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா என்ற பெண் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஆனாந்த மயீ மா என்ற புனிதவதியாக உயர்ந்த கதை கேட்பதற்கே சுவையானது; புனிதமானது.
1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி பிறந்த அவர் 86 ஆண்டுகளுக்கு வாழ்ந்து இந்தியாவிலுள்ள புனித ஹரித்வாரில் 1982 ஆகஸ்ட் 27ல் சமாதி அடைந்தார். உடனே அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி விசேஷ ஹெலிகாப்டரில் வந்து அந்திமக் கிரியைகளில் கலந்து கொண்டார்.
தெய்வ நெறிக் கழகத்தின் சுவாமி சிவாநந்தா, யோகதா சத் சங்கத்தின் பரமஹம்ச யோகாநந்தா போன்றோர் புகழ் மாலை சூட்டிய ஆன்மீகப் பேரரசி அவர்.
ஆனந்தமயீ மா, கியோரா என்னும் சிறு கிராமத்தில் விபினவிஹாரி பட்டாசார்யா- மோக்ஷதா சுந்தரி தேவி ஆகிய தம்பதியருக்கு தவப் புதல்வியாக அவதரித்தார் நிர்மலா சுந்தரி. சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செலுத்தினார். எல்லா இந்துக் குடும்பங்களிலும் உள்ளது போலவே அவரது வீட்டிலும் ஒரு சுவாமி அறை இருந்தது. அதிலுள்ள பல கடவுளரிம் படங்களுக்கு முன்னால் தியானம் செய்வது இவரது வழக்கம்.

அந்தக் கால வழக்கபடி நிர்மலாவுக்கும் விக்ரமபுரத்தைச் சேர்ந்த ரமணி மோஹன சக்ரவர்த்திக்கும் திருமணம் நடந்தது. அப்போது நிர்மலாவுக்கு வயது 13. ஆயினும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான். எப்படி பிற்காலத்தில் நிர்மலா– ஆனந்தமயீ ஆனாரோ, அப்படி ரமணி மோஹன் — போலாநாத் ஆனார்.
நிர்மலாவும் ரமணியும் பெயர் அளவிலேயே மனைவி- கணவனாக இருந்தனரே தவிர தாம்பத்திய உறவு என்பது கிடையவே கிடையாது.
சிறிது காலத்தில் போலாநாத்துக்கும் ஆன்மீக உணர்வு அதிகமானது எப்படி ராமகிருஷ்ன பரமஹம்சரால், அவரது மனைவி சாரதா தேவி சந்யாசினி ஆனாரோ அப்படி ஆனந்தமயீ முன்னிலையில் போலாநாத் சந்யாசி ஆனார்.
ஆனந்தமயீ மாவின் தவ வலிமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

பிறப்பிலேயே இறை உணர்வு பெற்ற ஆனந்தமயீ, அடிக்கடி தன்னை மறந்த நிலையை அடைந்தார். நாளடைவில் இது அதிகமாகி, பல நாட்களுக்கு நினைவற்றுக் கிடப்பார். கணவனும் கூட அவருக்கு சேவகம் செய்யத் துவங்கினார். அறியாத ஒரு மகளுக்கு தந்தை எப்படி உதவுவாரோ அது போல போலாநாத் தன் மனைவிக்கு உதவினார்.
ஆனந்தமயீயின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது அவரது கணவருக்கு பாஜிப்பூரில் நவாப்பிடம் முதலில் வேலை கிடைத்தது. பின்னர் டாக்காவில் வேலை கிடைத்தது.
டாக்காவில் ஆனந்தமயீ இருக்கும் போது சமூகத்தின் உயர் நிலையில் இருந்த டாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவரைப் பார்க்க குவிந்தனர். காலப் போக்கில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து டாக்காவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டினர். ஆனால் தன்னை சி றைப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனந்தமயீ தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினார். நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்யத் துவங்கினார். எந்த இடத்திலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.
தென்னிந்தியாவில் ரமண மகரிஷிக்கு வெளிநாட்டு பக்தர்கள் சேர்ந்தது போல ஆனந்தமயீக்கும் நிறைய வெளி நாட்டு பக்தர்கள் சேர்ந்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி , தத்துவ அறிஞர் கோபிநாத் கவிராஜ் ஆகியோர் இவரது பக்தர்களாயினர்.
இவரது ஆன்மீக சக்தி, இவரைத் தரிசித்த அனைவரிடமும் பரவியது. அனைவரும் இவரது செல்வாக்கின்கீ ழ் வந்தனர். குறிப்பிடத்தக்க ஒரு வெளிநாட்டுக்காரர் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த பிளாங்கா (Blanca) ஆவார். அ ந்த யூத மதப் பெண்மணி இவரது உபதேசத்தில் உருகி ஆத்மாநந்தா என்ற பெயர் பெற்றார். அவர் எழுதிய டயரி, ஆத்மாநந்தா சமாதி அடைந்தபின்னர் ராம் அலெக்ஸாண்டர் என்பவரால் வெளியிடப்ப ட்டது. அதில் ஆனந்தமயீ மற்றும் ஆத்மாநந்தாதாவின் வரலாறு வெளியானது.
ஆனந்ததமயீயிடம் வந்த அறிஞர்களில் ஒருவர் ஒரு நாள் திடீரென்று உரத்த குரலில் பேசினார். இன்று நான் உங்களை “அம்மா” என்று அழைத்துக் கதறிவிட்டேன்; எதிர்காலத்தில் உலகம் முழுதும் உங்களை “அம்மா” என்று அழைக்கும் என்று ஆரூடம் சொன்னார். அது உண்மையும் ஆயிற்று. உலகமே அவரை மா (அன்னை) என்று அழைக்கத் துவங்கியது.
வெளிநாட்டுப் பேராசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் ஆகியோர் இவரிடம் பல வினாக்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர் படிக்காத மேதையாக விளங்கினார்.

குரு இல்லை!
ஆனந்தமயீ தனக்குத் தானே குரு ஆனார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை கூட தான் வெளி உலகிற்குச் சொல்லவில்லை என்று பிற்காலத்தில் அவரே கூறியதுண்டு. சுமார் 60 ஆண்டுக் கால தர்மப் பிரசாரத்திற்குப் பின்னர் ஆனந்தமயீமா 1982 ஆகஸ்ட் 27ல் ஹரித்வாரில் சமாதி அடைந்தார். அங்கே அவரது புனித சமாதி இருக்கிறது.
அவர் பரப்பிய ஞான ஒளியும், அவர் பொழிந்த அருள் மழையும் இன்றும் நீடிக்கிறது; அவரை நினைப்போருக்கு அவை என்றும் கிடைக்கும்!
xxxx SUBHAM xxxxxx