
பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)
Written by London Swaminathan
Date: 4 June 2017
Time uploaded in London- 15-53
Post No. 3970
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று (குறள் 197)
பொருள்-
அறத்தோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் தராத வெறும் சொற்களை சான்றோர் சொல்லாதிருப்பது நல்லது
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (குறள் 198)
பொருள்-
அரிய பொருளை ஆராயும் அறிவினை உடையோர், வாழ்க்கைக்கு பெரும்பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்
1.கொலை செய்தல்
2.பொய் பேசுதல்,
3.திருடுதல்,
4.பிறன் மனைவியிடம் போதல்
5.கள் குடித்தல் – இந்த ஐந்து செயல்களும் தன்னுடைய வேரை தானே தோண்டிக் கொள்வதற்குச் சமம் தம்மபதம் 246/247
யானை தனக்குக்குத் தானே மண்ணைவாரி தன் தலையில் போட்டது போல.

பிறருடைய மனைவி
பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- (குறள் 147)
பிறருடைய மனவியை நாடுபவனுக்கு
1.பகைமை (முதல் கணவனுடன் மோதல்)
2.பாவம் (மறு ஜன்மத்தில் பாவத்தின் பலன்)
3.அச்சம் (எந்த நேரத்தில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்)
4.பழி (ஊரே தூற்றும் கெட்ட பெயர்)– இந்த நான்கும் எப்போதும் நீங்காது-
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – (குறள் 148)
பிறருடைய மனைவியை தவறான எண்ணத்துடன் கண் எடுத்தும்
பார்க்காத பேராண்மை என்னும் பண்பு சான்றோர்க்கு அறமாக மட்டும் அமைவதில்லை; பொருந்திய ஒழுக்கமும் ஆகும்.
மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309
வெறுப்பு
பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை ( குறள் 852)
பொருள்
கருத்து மாறுபட்டு ஒருவன் அன்பில்லாத செயலைச் செய்யினும் , வெறுப்பினால் அவனுக்கு கெடுதல் செய்யாது இருப்பது சிறந்தது.
நம்மை வெறுப்போருக்கு இடையே நாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம் (தம்மபதம் 197)
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செறுக்கு (குறள் 860)
ஒருவனுக்கு வெறுப்பினாலேயே துன்பம் உண்டாகும்; நட்பினால் நல்லவன் என்ற மதிப்பு கிடைக்கும்.

நற்குணங்கள்
உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)
ஒருவன் மனத்தாலும் பொய் சொல்லாதிருக்கக் கற்றுக் கொண்டால் அவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் நிலைபெற்று இருப்பான் (அரிச்சந்திரன், ராமன், தர்மன், காந்தி அடிகள் போல)
பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)
ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263
இதே கருத்து பகவத் கீதை 16-21லும் உளது மூன்று நரக வாசல்கள் என்று கீதை சித்தரிக்கும்.
வள்ளுவன் குறளில்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கூடும் நோய் (குறள் 360)
காமம், க்ரோதம், மோகம் ஆகிய மூன்றின் பெயர்கூட மனத்தில் தோன்றாதவாறு ஒருவன் வாழ்ந்தால் அவன் உள்ளத்தில் ஞானம் பிறக்கும்; கர்ம வினை அறுபட்டுப்போகும்; பிறவ்தி தளை அறுபடும்; மோட்சம் கிட்டும்
–சுபம்-