
Written by London Swaminathan
Date: 7 June 2017
Time uploaded in London- 8-51 am
Post No. 3979
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
சொற்சிலம்பம் ஆடுவதில் கவி காளமேகப் புலவர் போன்றோர் வல்லவர்கள். இதை நாம் அறிவோம். ஆனால் கம்பன் ஆடிய வினைச் சொற்க (VERBS) சிலம்பம் வேறு யாராவது ஆடியிருக்கிறார்களா என்பது ஐயப்பாடே. தமிழ் அதிசயமான மொழி; ஆற்றல் மிக்க மொழி. உலக மொழிகள் அனைத்தும் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டிலிருந்துதான் கிளைவிட்டன. இந்த இரண்டின் அமைப்பிலுள்ள ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழியிலும் காணக் கிடைக்கில.
நான் எவ்வளவோ தமிழ், சம்ஸ்கிருத நூல்களைப் படித்தேன்; ஆயினும் நாலே வரிகளை உடைய வெண்பாவில் 14 அல்லது 16 வினைச் சொற்களை மட்டும் வைத்துப் பாடியவன் கம்பன் ஒருவனே. தமிழில் வினைச் சொற்களச் சொன்னாலே சுட்டுப் பெயர் (pronoun) இல்லாமலேயே வாக்கியம் பூர்த்தி ஆகி விடும்.

“வந்தேன்” (came) என்று சொன்னாலேயே போதும். நான் (I) என்னும் சுட்டுப் பெயர் (Pronoun) தேவை இல்லை. சம்ஸ்கிருதத்தில் இதையும் விடக் கூடுதலாக சொற்சிலம்பம் ஆட முடியும். ஏனெனில் தமிழில் ஒருமை, பன்மை(Singular and Plural) மட்டுமே உள. சம்ஸ்கிருதத்தில் இருமையும் (Dual) உண்டு. அந்த வினைச் சொல்லின் முடிவைக் கொண்டே “இருவர்” பற்றிப் பேசுகின்றனர் என்பதை அறிவோம்.
ஆயினும் கம்பன் போலப் பாடல்களில் வினைச் சொற்களை மட்டும் வைத்துப் பாடல் இயற்றியதை நான் வேறு எங்கும் கண்டதில்லை.கம்ப ராமாயணம் சுந்தர காண்டத்தில் இருந்து மட்டும் ஓரிரு பாடல்களைக் காண்போம்:
ராமன் கொடுத்து அனுப்பிய மோதிரத்தை அனுமன் சீதையின் கையில் கொடுக்கிறான்; உடனே சீதா தேவி,
வாங்கினள் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்
தாங்கினள் மலர்க் கண்மிசை ஒற்றினள் தடந்தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமோ
-உருக்காட்டு படலம், சுந்தர காண்டம்
பொருள்:
சீதை அம்மோதிரத்தை தன் கையால் வாங்கினாள்;
அதைத் தன் மார்பின் மீது பதித்துக் கொண்டாள்;
தலமேல் வைத்துக் கொண்டாள்;
கண்களிலே ஒற்றிக் கொண்டாள்;
அதனால் அவளது தோள்கள் பூரிக்கப் பெற்றாள்;
மனம் குளிர்ந்தாள்;
உடல் மெலிந்தாள்;
உடலில் தோன்றிய காதல் வெப்பத்தாள் ஏங்கினாள்;
பெருமூச்சு விட்டாள்;
அவள் நிலை இத்தகையது என்று சொல்ல முடியுமோ — என்று கம்பன் வியக்கிறான்.
இங்கு சீதையின் செயலில் ஒன்பது வினைச் சொற்களைக் காண்கிறோம்.
இன்னொரு பாட்டில் இதையும்விட ஒருபடி மேலே செல்கிறான் கம்பன்:
இது அசோக வனத்தின் அழிவு பற்றிய பாடல்

முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த
மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த
இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த
ஒடிந்தன ஒசிந்தன உதிரிந்தன பிதிர்ந்த
— பொழில் இறுத்த படலம், சுந்தர காண்டம்
பொருள்:
அனுமனின் கால்களால் தாக்கப்பட்ட அசோக வனத்தில் பல மரங்கள் அழிந்துவிட்டன; பிளந்து போயின; வளைந்து போயின; நொருங்கிப் போயின; தலைகீழ் மேலாக மடங்கிப் போயின; துண்டுகள் ஆயின; இடிப ட்டு வீழ்ந்தன; சிறு சிறு துண்டுகளாகத் தெறித்துப் போயின; எரிந்து போயின; கரியாய்ப் போயின; ஒடிந்துவிட்டன; துவண்டு சாய்ந்தன; வலியற்று நிற்கமுடியாமல் உதிர்ந்துவிட்டன; சின்னா பின்னம் ஆயின
கம்பன இப்படி எல்லாவற்றையும் வருணிப்பதே தனி அழகு. அதுவும் நாலே வரிகளில் 14 வினைச் சொற்களை அள்ளித் தெளிப்பது வேறு மொழிகளில் காணக்கிடைக்காத அரும் பொக்கிஷம்!

பிணி வீட்டுப் படலத்திலும் (சுந்தர காண்டம்) கம்பன் இப்படி ஒரு சொற் சிலம்பம் ஆடுவான்:
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எம் மருங்கும்
பார்த்தார் ஒடிச் சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள்
வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து உயிர்த்தாள்
பொருள்:-
அச் செய்தியை அண்டத்துக்கு அப்பாலும் அறிவிப்பார்கள் போல அரக்கர்கள் ஆர்த்தார்கள்;
அங்கும் இங்கும் முரசுகளை இழுத்து முழங்கினார்கள்;
இடி முழக்கம் போலக் குரல் எழுப்பினார்கள்;
அனுமானை அதட்டினார்கள்;
எல்லாப் பக்கங்களில் இருந்தும் அனுமனைப் பார்த்தார்கள்;
சிலர் ஓடிப் போய் சீதைக்கு இச்செய்தியைத் தெரிவித்தார்கள்;
அதைக் கேட்டு அவளும் உயிர் துடித்தாள்;
உடல் வேர்த்தாள்;
விம்மினாள்;
நிலத்தில் விழுந்தாள்;
பெருமூச்சு வீட்டாள்
இதிலும் குறைந்தது 14 வ் 15 வினைச் சொற்கள் உள.

இதைவிடக் கூடுதலாக நாலே வரிகளில் ஒரு செய்தியை இப்படி 15, 16 வினைச் சொற்களால் வருணிப்பது தெய்வத்தமிழால் மட்டுமே முடியும்.
வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்