
Written by London Swaminathan
Date: 9 July 2017
Time uploaded in London- 16-55
Post No. 4066
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நான் பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் (55 ஆண்டுகளுக்கு முன்னர்) மாலை வேளை இலவச சம்ஸ்கிருத வகுப்புக்குப் படிக்க்ச் சென்றபோது முதல் வகுப்பிலேயே எங்களுக்கு அமரகோஷம் என்னும் நிகண்டை மனப்பாடம் செய்ய வைத்தனர். அதை உலகின் முதல் திஸாரஸ் THESARUS (ஒரு பொருட் குறித்த பல சொற்கள் )என்று சொல்லலாம்.
இது போல சங்கரமடம் போன்றவற்றிலும் எல்லோருக்கும் சொல்லித் தருவர் என்று கேள்வி. உலகில் இப்பேற்பட்ட கல்வி முறை எங்கும் கிடையாது. முதலில் மனப்பாடம் செய்ய வைத்துவிட்டு, வயதானவுடன் தானாகப் புரிந்துகொள்ளச் செய்வர். பெரிய வேதங்களையே இப்படி மனப்பாடம் செய்ய வைக்கும் போது நிகண்டுகள் எம்மாத்திரம்!
“ஸார்! புத்தகம் இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் என்று நாங்கள் அங்கலாய்ப்போம்; போதும், போதும்! நான் சொல்லுவதைத் திருப்பிச் சொல், அது போதும்!” என்பார் எங்கள் ஆசிரியர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் (இது மதுரை மேலச் சித்திரை வீதியில் ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில் நடந்த சம்ஸ்கிருத வகுப்பு)
தமிழிலும் பல நிகண்டுகள் உள்ளன. ஆனால் இதை மனப்பாடம் செய்ய (வாய்வழியாக by the word of mouth) வழி செய்தனரா என்பது எனக்குத் தெரியாது.
இதோ சேலைக்கும் மாலைக்கும் ஒரு நிகண்டில் எத்தனை பெயர்கள் பாருங்கள்!
மடிதுகில் கோசிகங் காழகஞ் சேலை
புடைவை கலிகந் தானை தூசு – படமாடை
புட்ட மறுவை புனை சாடி யம்பரம்
பட்டுடை கூறை படாம்

மடி, துகில், கோசிகம், காழகம், சேலை, புடைவை, தானை, கலிங்கம், தூசு, படம், ஆடை, பட்டு, புனை, அறுவை, சாடி, அம்பரம், புட்டம், கூறை, படாம், உடை
மாலை
தொங்கல் பிணைய றொடைவண்டு சூழணிய
லங்கண்ணி செந்தேன் மலியலங்கல்- பைங்கோதை தேமனொலிய றெறிய லிலம்பகம் பூந்
தாம மொளிர் மாலை தார்
பொருள்:-
தொங்கல், பிணையல், தொடை, அணியல், கண்ணி, அலங்கல், கோதை, ஒலியல், தெரியல், இலம்பகம், தாமம், தார், மாலை.
கண்ணி, கோதை, அலங்கல், தாமம், தார் என்பன அதிகம் புழங்கும் சொற்கள். மதுரையில் பூக்காரிகள் முதற்கொண்டு கண்ணி என்ற சொல்லைப் பயன்படுத்துவர்.

எச்சரிக்கை
தமிழ் அகராதி, தமிழ் நிகண்டு என்றெலாம் பெயரிட்ட புத்தகங்களை எடுத்தால் அதில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் இருக்கும். அந்தக் காலத்தில் இந்த இரண்டு மொழிகளையும் இரு கண் போலப் பாவித்ததால் அவர்கள் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அஞ்சவில்லை. இன்றும் எந்த இந்தியனும் ஐந்து நிமிடம் கூட சம்ஸ்கிருதக் கலப்பில்லமல் பேச முடியாது. திருகுறளில் சம்ஸ்கிருதச் சொல் இல்லாத அதிகாரம் கிடையாது!
ஒரு மொழியில் கலர்களுக்கு (வர்ணம்) எத்தனை சொற்கள் உண்டு என்பதை வைத்து அந்த மொழியின் வளத்தைக் கணக்கிடும் முறையும் உண்டு.சில மலைஜாதியினர் மொழிகளில் வெள்ளை அல்லது கருப்பு என்ற இரண்டு சொற்களே உண்டு. மற்ற கலர்களை அவர்கள் பழம், பூ இவைகளைச் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும். பெயிண்ட் கடைக்கு (Paint Shop) போனால் ஒரு புத்தகம் கொடுப்பர். அதில் எத்தனை வகையான வர்ண பெயிண்ட் கிடைக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். இவ்வளவு பெயர்களில் வர்ணங்கள் இருக்கிறதா என்று வியப்போம். ஆனால் ஆங்கிலம் என்பது கலப்பட மொழி; தூய மொழி அல்ல. எல்லா மொழிகளிலிருந்தும் கூசாமல் கடன் வாங்கி வளர்த்த மொழி.
இதோ வெள்ளைப் பாட்டு
வெள்ளை என்பதற்கு எத்தனை சொற்கள் என்று பாருங்கள்
இவற்றில் ஆடை, உடை, சேலை புடைவை முதலியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம்.அறுவை, காழகம், கலிங்கம் என்பன பழந்தமிழ் நூல்களில் வருகின்றன. கூறை என்பதை பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் இன்றும் பயன்படுத்துகின்றனர். அம்பரம் என்பதை திகம்பரர் (வானமே ஆடை), ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடையினர்) என்ற சமணப் பிரிவுகளில் காண்கிறோம். ஆக நிகண்டை மனப்பாடம் செய்தால் செய்யுட்கள் எளிதில் புரியும். அம்பரம் திருப்பாவையிலும் வரும்.
பாண்டுரங் கௌரஞ் சிதஞ்சுவே தந்தவளம்
பாண்டரம் பால் வாலருச்சனம் – பாண்டு
சுசியவதாதஞ் சுதை சுப்பிரமே
விசதம் விளர்க்கம் வெளுப்பு
பொருள்
பாண்டுரம், கௌரம், சிதம், சுவேதம், தவளம், பாண்டரம், பால், வால், அருச்சசுனம், பாண்டு, சுசி, அவதாதம், சுதை, சுப்பிரம், விசதம், விளர் கம், வெளுப்பு (வெள்ளை)
இவைகளில் பாண்டு (ரோகம்) வால், பால், தவளம், கௌரம் என்பன அதிகம் புழங்கும் சொற்கள்.
ஸ்வேத என்ற சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ‘ஸ்’வைட் (WHITE) வந்தது!
வளமான தமிழ் மொழியை வளர்க்க நிகண்டுகளைக் காப்போம், படிப்போம்.
தமிழ் வாழ்க! வளர்க!!
–SUBHAM—
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 9, 201755 ஆண்டுகளுக்கு முன்- அது ஒரு மகத்தான சகாப்தம். இன்னும் 5-6 வருஷங்கள் பின்னோக்கிப் போனால் இன்னும் சிறந்த நிலை இருந்தது. சிறியவர்கள், இளைஞர்களுக்கு பாடத்தில் இல்லாத பல விஷயங்களைக் கற்றுத்தர சில பெரியவர்கள் விசேஷ முயற்சி மேற்கொண்டார்கள். 52-58 வாக்கில் தமிழ் நாட்டில் பள்ளிகளில் சம்ஸ்க்ருதம் ஒரு மொழியாக கற்றுத்தந்தார்கள். ஆனால் அதன் சிலபஸ் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலத்தில் idiom போல, சுபாஷிதங்களை தனியாகத்தான் கற்கவேண்டும். அதை வாய்மொழியாகத்தான் சொல்லித்தருவார்கள்.
பல பெரியவர்கள் பல விஷயங்களில் பள்ளிச் சிறுவர்களை ஈடுபடுத்துவார்கள்.
சீதாராமய்யர் என்ற வக்கீல் தன்வீட்டில் சனிக்கிழமை தோறும் சம்பிரதாய பஜனை நடத்துவார். சில பிள்ளைகள் போவோம். அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம் போன்ற பலமொழிகளில் பஜனை பாடல்களும் ஶ்லோகங்களும் சிரமமின்றி உரிய மெட்டுடன் கற்றுக்கொண்டோம். பஜனை பத்ததியும் தெரியவந்தது, நாட்டின் பலபாகத்திலும் இருந்த அருளாளர்-ஞானிகளைப்பற்றியும் தெரிந்துகொண்டோம். பாரத-பாகவத ஸம்பிரதாயம் மனதில் பதிந்தது! யாரும் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை! பாட திட்டத்தில் இருந்திருந்தால்கூட இவ்வளவு லகுவாக கற்றுக்கொண்டிருக்க மாட்டோம்!
இவர் பள்ளிப் பிள்ளைகளுடன் மார்கழிமாதம் அதிகாலையில் வீதிகளில் பஜனை செய்வார். அக்ரஹாரம் என்று இல்லாததால் பொதுத்தெருக்களிலேயே சுற்றி வருவோம். ஒரு கோயிலில் பஜனை நிறைவுறும்.
இவர் சந்நியாசிகளிடம் மரியாதை உடையவர். ராமக்ருஷ்ணமடம், ரிஷிகேசம் ஸ்வாமி சிவானந்தர் ஆஸ்ரமம் சேர்ந்தவர்களோ, பிற சம்பிரதாயங்களைச் சேர்ந்த சந்நியாசிகளோ வந்தால் அவர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்வார். நாங்கள் எடுபிடி வேலைக்குப் போவோம். சிலர் பூஜை செய்வார்கள், சிலர் பேசுவார்கள். ரிஷிகேசம் ஸ்வாமிகள் மிக எளிமையாகப் பேசுவார்கள். Serve-Love-Give-Meditate-Realise என்ற ஸ்வாமி சிவானந்தரின் ஃபார்முலா அன்றே மனதில் பதிந்தது.
பாலசுப்ரமண்ய ஐயர் என்று தபாலாபீசில் அகவுண்டன்ட். இவர் ஞாயிறு காலையில் தன் வீட்டில் பிள்ளைகளுக்கு விஷ்ணு ஸஹஸ்ர நாமம் சொல்லித்தருவார். ஸ்லோகம் அவர் சொல்ல நாங்கள் திருப்பிச் சொல்வோம். மூன்று மாதம் கழித்து மெட்ராசிலிருந்து புத்தகம் தருவித்துத் தந்தார். ஆனால் அதை கிளாசில் பார்த்துப் படிக்க விடமாட்டார். ‘வீட்டில் படியுங்கள், இங்கே கேட்டுச் சொல்லுங்கள்’ என்பார்! 4 மாதங்களுக்குள் எங்களுக்கு மனப்பாடமாகிவிட்டது!
இப்படிச் சில பெரியவர்கள் செய்த தனிப்பட்ட முயற்சியினால்தான் சில அரிய விஷயங்களை சிறுவர்கள் கற்றுக்கொண்டோம். This formed an effective cultural supplement to formal schooling. வீட்டில் அதிகம் படித்தவர்கள் இல்லாத நிலையிலும் இது உதவியது. எந்த ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லை! இதற்கு அன்றைய சமூக-குடும்ப சூழ்நிலையும் வசதியாக இருந்தது. எல்லோரும் முக்காலும் கீழ் நடுத்தர, வர்கம், ஏறத்தாழ ஒரேவிதமான எளிமையான பழக்கவழக்கங்கள்; பணப்புழக்கம் அதிகமில்லை. படிப்புச்சுமை அதிகமில்லை; ஹோம் ஒர்க் தொல்லையில்லை. சிறிய ஊரானதால் எல்லாம் அருகிலேயே- செலவும் சிரமமும் இல்லை. எதிலும் பரபரப்பு இல்லை. டி.வி. இல்லை. சினிமா, கிரிக்கெட் இல்லை! ஆகவே மனம் பல விஷயங்களில் சிதற வழி இல்லை. இன்று இந்தச் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது! ஆங்கில மீடியத்தினால் பள்ளிப் பிள்ளைகளின் நடை, உடை, பாவனை, பேச்சு- எல்லாம் மாறிவிட்டது. மார்க்குகள் மிக முக்கியமாகிவிட்டதால் பிற விஷயங்களுக்கு இடமும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. “இங்க்லீஷ் மேன்” என்று ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சொன்னது இனைவுக்கு வருகிறது. தமிழ் நாட்டில் இன்று எந்த அளவுக்கு இம்மாதிரி முயற்சிகள் நடக்கின்றன என்று தெரியவில்லை!