கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

 
Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 6-33 am

 

Post No. 4214

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்திரலோகத்தில் ஒரு கொண்டாட்டம்; எல்லா தேவர்களும் வந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் அதிகரித்தது; அப்சரஸ் என்னும் அழகிய தேவதைகள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்திரனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கந்தர்வசேனு. அவன் ஒரு அப்சரஸ் மீது கை வைக்கவே இந்திரனுக்கு மஹா கோபம்.

“சீ! கழுதை! நீ பூலோகத்தில் கழுதையாகப் போகக்கடவது” என்று சபித்துவிட்டார்.

 

 

உடனே வாயுதேவன், அக்கினி தேவன், யமன் , சூரியன், வருண தேவன் முதலானோர், ” அடக் கடவுளே! இளம்சிட்டு அறியாமல் பருவக் கோளாறினால் செய்த செயலுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? ரத்து செய்யுங்கள்” என்று மன்றாடினர்.

 

ஆனால் உலகிலேயே அற்புதமான இந்துமதம் உண்மை- ஸத்யம் என்னும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது; கடவுளே ஆனாலும் இதை மீற முடியாது. ஒரு வரமோ சாபமோ கொடுக்கப்பட்டுவிட்டால் அதில் பின்வாங்குதல் என்பதே கிடையாது. இதிஹாச, புராணங்கள் அ னைத்திலுள்ள கதைகளிலும் இந்த அற்புதமான கொள்கையைக் காணலாம். ஆனால் வருத்தப்படுவோருக்கு சாப விமோசனம் கொடுக்கலாம். ஆகவே இந்திரனும், “சரி, போ! பகல் முழுதும் கழுதையாக இரு; இரவு நேரத்தில் அழகிய இளைஞனாக இரு” என்று ஒரு துணை விதியை நுழைத்தார்.

 

 

இந்திரன் மகன் என்றால் என்ன கொக்கா? கொம்பனா? சாபத்தின் படியே பூமியில் கழுதையாக விழுந்தார். அப்போது ஒரு பிராமணன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அன்பரே எனது கதையைக் கேளும் என்று ஆதீயோடு அந்தமாக நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, இந்த நாட்டு மன்னனான தாரு என்பவரின் மகளை—இளவரசியை– எனக்கு மணம் முடிக்க அருள் செய்க” என்று வேண்டினான்.

 

அந்தப் பிராமணனும் அரசன் தாருவிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லி கல்யாணம் செய்து கொடுங்கள் என்றார்.

கழுதைக்கு என் மகளைக் கல்யாணம் முடிப்பதா? அவன் சொல்லுவது உண்மையானால் ஒரு அற்புதத்தையாவது செய்து காட்டட்டும்; அப்போதுதான் நான் நம்புவேன் என்றார்.

 

இந்திரன் மகன் கந்தர்வ சேனு கழுதை உருவத்தில் இருந்தபோதிலும் ஒரு பெரிய இரும்புக் கோட்டையை இரவோடிரவாக கட்டிக் காட்டினான். அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது.

மன்னரே! மனிதனின் உருவம் என்பது மேல் சட்டை போன்றது. அதைக்கண்டு ஏமாறக்கூடாது; ஆளைக் கண்டு ஏமாறாதேடா ஊது காமாலை என்றும் ஆள் பாதி ஆடை பாதி என்றும் பழமொழிகள் இருப்பதை நீங்கள் அறியவில்லையா? என்றெல்லாம் கந்தர்வசேனு மன்னனிடம் சொல்லி அவரை அமைதிப்படுத்தினான்.

 

 

 

உடனே அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது. கல்யாணத்திற்கு, பிராமணர்களைக் கொண்டு தேதி நிச்சயித்தார். வெளி நாட்டு அரசர்களுக்கும் உள்நாட்டு அரசர்களுக்கும் அழைப்புகள் பறந்தன. ஊரெல்லாம் கொண்டாட்டம்; அலங்காரம்.

 

இள்வரசி தேவதை போல உடுப்பு அணிந்து அலங்கார பவனி வந்தாள். கழுதை மாப்பிள்ளையிடம் இளவரசியை ஒப்படைத்தான் மன்னன் தாரு. கழுதைக்கு ஏக குஷி; ‘காழ் காழ்’ என்று கழுதை போலக் கத்தியது

 

கழுதையைப் பார்த்தவுடன், அதன் குரலைக் கேட்டவுடன்,  மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு; முகத்தை மறைத்துக் கொண்டு இளி இளி என்று இளித்தனர். பல இளவரசர்களுக்கு வருத்தம். நமக்கு இந்த தேவதை– பேரழகி கிடைக்க வில்லையே! ஒரு கழுதைக்கு அடித்ததே யோகம் — என்று அங்கலாய்த்தனர்.

 

பிராமணர்களோவெனில் ஒருகாலத்தில் ஒட்டகத்துக்கும் கழுதைக்கும் நடந்த கல்யாணக் கதைகளைச் சொல்லி மன்னனை ஊக்குவித்தனர். அவர்களுக்கு நல்ல தட்சிணை கிடைத்தது.

 

 

அரண்மனைப் பெண்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப வருத்தம். மன்னரே இப்படிச் செய்வது நல்லதா? உமக்கே அடுக்குமா? இது என்ன அநியாயம்? என்றார்கள்.

 

ஆனால் அன்றிரவு ஒரு அற்புதம் நடந்தது; கழுதையானது அழகிய இளவரசன் ரூபத்தில் தோன்றியது. மன்ன னுக்கும் இளவரசிக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

 

 

அரசனுக்கு ஒரு யோஜனை உதித்தது. ஒன்றிரண்டு நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் செத்துப்போன கழுதையின் உடல் வெளியே இருப்பதைப் பார்த்தான். இந்த கழுதை உடலை எரித்துவிட்டால் இளவரசன் எப்போதும் இளவரசனாகவே இருப்பானே என்று கருதி ஒரு நாள் இரவில் கழுதையின் உடலை எரித்துவிட்டான்.

 

அன்று முதல் கந்தர்வ சேனு சாபம் நீங்கி என்றும் இளவரசனாக விளங்கினான்.

 

இந்தக் கதை நூறு ஆண்டுகளுக்கு முன் பாதிரியார் ஆஸ்பார்ன் மார்டின் எழுதிய இந்தியக் கடவுள்கள் என்ற புத்தகத்தில் உள்ளது; மொழி பெயர்ப்பு லண்டன் சுவாமிநாதன்.

—சுபம்—

Leave a comment

Leave a comment