விதுரர் கூறும் விதுர நீதி – 2 (Post No.4225)

Written by S.NAGARAJAN

 

Date: 19 September 2017

 

Time uploaded in London- 5-13 am

 

Post No. 4225

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விதுரர் கூறும் விதுர நீதி – 2

 

ச.நாகராஜன்

 

திருதராஷ்டிர மன்னனுக்கு விதுரர் கூறும் நீதிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை.

ஒன்று ஒன்றாகவும் இரண்டு இரண்டாகவும்  மூன்று மூன்றாகவும் இப்படி எண்ணிக்கை அடிப்படையில் சுலபமாக நினைவில் இருக்கும்படியாக ஒழுக்க விதிகளை அவர் தருவது வியக்கத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் வரும் நீதிகளை மட்டும் கீழே காண்லாம்.

(விதுர நீதி முழுவதையும் உத்யோக பர்வம், ப்ரஜாகர உப பர்வம்,முப்பத்துமூன்றாவது அத்தியாயம் (ம.வீ. ராமானுஜாசாரியார் பதிப்பில் படித்து மகிழலாம்.)

1

ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக ஒருவன் விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக வழி போகக் கூடாது.

 

தூங்குகிறவர்களின் நடுவில் ஒருவனாக விழித்திருக்கக் கூடாது.

 

சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது.

 

பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.

 

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை.

 

பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி.

 

வித்தை ஒன்றே மேலான திருப்தி.

 

அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.

 

 

2

எதிரிகளிடம் விரோதம் காட்டாத அரசன்,

தீர்த்த யாத்திரை போகாத அந்தணன்

இவ்விருவர்களையும் பாம்பானது எலிகளைத் தின்பது போல

பூமியானது தின்று விடுகிறது.

 

கடுமையாக ஒரு வார்த்தையையும் பேசாமல் இருத்தல்

துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல்

இவ்விரண்டையும் செய்பவன் உலகில் நன்கு விளங்குவான்.

 

பணமில்லாதவனின் ஆசையும்

சக்தியில்லாதவனுடைய கோபமும்

கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.

 

செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,

எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி

ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.

 

ச்க்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்

தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்

ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.

 

நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் த்குதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,

நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.

 

தானம் செய்யாத தனவானும்

தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்

கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.

 

 

3

பிறர் பொருளைக் கவர்தல்

பிறர் மனைவியை நேசித்தல்

நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்

ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.

 

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.

அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.

இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.

விதுர நீதி தொடரும்

***

Leave a comment

Leave a comment