
Picture posted by Lalgudi Veda
Written by London Swaminathan
Date: 24 October 2017
Time uploaded in London- 10-23 am
Post No. 4331
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
Facebook பேஸ்புக்கில் பல நண்பர்கள் உணவுப் பண்டங்களின் படங்களைப் போடுகிறார்கள்; நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது; டெலிவிஷனில் சமையல் கலை பற்றிய நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் பசி எடுக்கிறது. மணப்பாறை முறுக்கு. கல்கத்தா ரசகுல்லா, திருநெல்வேலி லாலாகடை அல்வா, டில்லி பூசணிக்காய் அல்வா, மானாமதுரை ரயில்வே உணவக சாம்பார் சாதம் (அந்தக் காலத்தில்), அழகர்கோவில் அடை — இவற்றைப் பற்றி எல்லாம் படித்தாலேயே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. இவை எல்லாம் உண்மையிலேயே உங்கள் சாப்பாட்டு மேஜை மீது வந்து விட்டால் எப்படி இருக்கும். அதுதான் கொள்ளமாளா இன்பம்.
இறைவன் கொடுக்கும் இன்பத்தை அளக்க முடியாது என்பது பக்தர்கள் கண்ட உண்மை. மேலும் சில பொருள்கள் தரும் இன்பம் திகட்டிவிடும். நாமே போதும் போதும் என்று சொல்லி விடுவோம். ஆனால் கடவுள் அளிக்கும் இன்பம் இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்டது. அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். நாம் அதைப் பெற்றுக்கொண்டே இருப்போம். போதும் என்று சொல்லவும் மாட்டோம்.ஆனால் நம்மிடம் அதை வாங்கிக் கொள்ள கூடையோ, பாத்திரமோ இராது.

ஒரு ஊரில் நிறைய தக்காளி விளைந்தது. காலையில் ஒரு விலை; மாலையில் அதைவிடக் குறைந்த விலை; சூரியன் அஸ்தமிக்கும் நேரம்; வியாபாரியிடம் இன்னும் அதிகம் தக்காளி இருந்தது. எல்லோரும் வாருங்கள்; இனி இலவசம்; எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்; ஆனால் நம்மிடம் கூடையோ, பைகளோ இல்லை; என்ன கொடுமை. கொடுக்க ஆள் இருக்கிறது; கொள்ள ஆள் இல்லை ஏனெனில் பை இல்லை.
இன்னொரு ஊரில் நெல் அறுவடை நடந்தது; நிலச் சுவான்தாரிடம் இருந்த குதிர்கள், பரண்கள் எல்லா வற்றிலும் நிரப்பியது போக மீதி இருந்தது; அடுத்த சில நாட்களில் புயல் மழை வரும் என்று வானொலிகள் அலறின; நிலச்சுவான்தாரும் மனம் உவந்து மீதி நெல்லை எவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் அங்கே இருந்த விவசாயத் தொழிலாளிகளிடம், சிறு கூடை மட்டுமே இருந்தது. என்ன செய்வார்கள் முடிந்தமட்டும் எடுத்துக்கொண்டனர்.
நம்மாழ்வாரின் நிலையும் அதுவே; இறைவா எனக்கு நித்திய ஆனந்தம் தா; பேரானந்தம் தா என்றார்; அதற்கென்ன பக்தா எடுத்துக்கொள் என்று திருமாலும் அருள் மழை பொழிந்தார்; ஆனால் அதை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாத்திரமோ, கூடையோ இல்லை. இதை மற்ற அடியார்களுக்கு எப்படிச் சொல்வது. பாடினார் இப்படி:
கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ! என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே
-திருவாய் மொழி (திவ்வியப் பிரபந்தம்)

பொருள்:-
பூவுலகை அளந்த வாமனனே! குற்றம் இல்லாத, அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாத ஆனந்தக் கடலைக் கொடுக்கின்ற வள்ளலே! என்றென்று நள்ளிரவிலும் நன்பகலிலும் நான் அழைத்தால், கள்ள மாயனே! என் கண்கள் காணும்படீ நடந்து வந்து அருள் புரியவேண்டும்.
இன்பம் தருகிறாய், உண்மைதான்; இவை எல்லாம் மனதளவில் (Mental pleasure) திருப்தி தருகிறது; உன்னை நேரில் காணவும்(Physical pleasure) அருள்புரி.
பக்தர்கள் எல்லோரும் இறைவனைக் காணும் முன்னரே இவ்வளவு இன்பமழையில் நனைந்தனர். பின்னர் அப்படித் தரும் கொடையாளியை, வள்ளலைக் காணவேண்டும் என்று ஆர்வம்; ஆகையால் பாடிப் பரவசம் அடைகின்றனர்.
‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்று பாடும் அப்பரும் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கிறார்.
‘பால் நினைந்தூட்டும் சாலப் பைரிந்து அருளும்’ சிவன் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்ததாக’ மாணிக்க வாசகரும் பாடுகிறார்.
இதை எல்லாம் படிக்கும்போதே நமக்கும் இன்பம் வருகிறது; வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது; துன்பங்கள் எல்லாம் பறக்கின்றன;மறக்கின்றன. பாஸிட்டிவ் எண்ணங்கள் உதிக்கின்றன.
–SUBHAM–
