பயறு மிளகானது : சிவபிரான் திருவிளையாடல்! (Post No.4333)

Written by S.NAGARAJAN

 

 

Date: 25 October 2017

 

Time uploaded in London- 6-59 am

 

 

Post No. 4333

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழின்பம்

 

பயறு மிளகானது : சிவபிரான் திருவிளையாடல்!

 

ச.நாகராஜன்

 

 

கொங்கு மண்டல சதகத்தில் உள்ள சில பாடல்களைப் பற்றி முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

இன்னும் ஒரு பாடல் இதோ:

இது பயறு மிளகான கதை பற்றியது!

 

அணித்திகழ் சேர்தென் கரைநாட்டி லப்பிர மேயருக்கு

பணித்தொழி லான தளர்ச்சியி னால்வெறுப் பாயொர்செட்டி

எணித்தொலை யாத மிளகைப் பயறென வெம்பெருமான்

மணிப்பய றாக்கின தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே

 

பொருள்: தென்கரை நாட்டில் எழுந்தருளிய அப்பிரமேயருக்கு, மிளகைப் பயறு என ஒரு வணிகன் பொய் சொல்ல, அந்த

மிளகு அப்படியே பயறு ஆனதும் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில்     84வது பாடலாக அமைந்துள்ளது இது.

 

மலையாளத்துக் கொச்சியில் மிளகு விற்று வரும் ஒரு வணிகன் வறுமையால் நலிவுற்றான். சரி, இனி வெளியூர் சென்று வர்த்தகம் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தான். காளைகளின் மீது மிளகுப் பொதிகளை ஏற்றிக் கொண்டு ஆம்பிராவதி தீரமான தென் கரை நாட்டில் இடைஞானியாரால் பூஜிக்கப்பட்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள வனத்தின் வந்து இறங்கினான்.

ஒரு கிழப்பிராம்மணனாக அந்தக் கோவிலில் குடி கொண்டிருந்த கடவுள் எதிரில் வந்தார்.

 

“கொஞ்சம் மிளகு வேண்டும் என்று கேட்டார் அவர்.

வணிகன், “இந்தப் பொதிகள் பயறு என்று பதிலிறுத்தான்.

“அப்படியே ஆகுக! என்று கூறி விட்டு அவர் போய் விட்டார்.

வணிகன் மூட்டைகளைக் காளைகளின் மீது ஏற்றி திருவாரூர் சென்றான். மிளகை விலை பேசினான்.

தொகையைப் பெற்றுக் கொண்டு மிளகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினான்.

 

 

எல்லாம் பயறாகவே இருந்தது.

அதை வாங்கியோர், இவன் புரட்டன், ஏமாற்றி விட்டான் என்று  மிகுந்த கோபம் கொண்டனர்.

அப்போது முன் வந்த கிழ பிராம்மணர் அங்கு தோன்றினார்.

“வணிகரே! தென்கரை நாட்டில் நான் கொஞ்சம் மிளகு கேட்ட பொது இவை பயறு என்றீரே என்றார்.

வணிகன் திகைத்தான்.

 

 அவர் சிவபிரானே என்று தெளிந்தான்.

அவரை வணங்கினான். “அடிகளே! மிளகைப் பயறாகச் செய்த நீரே மீண்டும் பயறை மிளகாகச் செய்து அருளும் என்று வேண்டினான்.

 

“தென்கரை நாட்டில் இடைச் சிறுவனிட்ட பந்தல் எமது கோயில்.அதனைக் கற்பணி செய்க என்று கூறி விட்டு  அவர் மறைந்தார்.

 

அங்கு கீழே கிடந்த பயறு எல்லாம் மீண்டும் மிளகாயின.

அப்பிரமேயர் தல புராணம் இந்த வரலாறைக் கூறுகின்ற பாடல் இது:

அவ்வி டத்திலுறை யும்பதத்துமுன தருகுவந்து மிள காசையாற்

செவ்வி பெற்றமெய் வருந்தி நின்றது பொறாது போனகுறி தேறுவாய்

பவ்வ மற்றநெறி வணிகனே நமது பணிசெ யென்றுகுவி பயறெலாம்

வெவ்வி யற்கைபெறு  மிளகு செய்தருளி  யேகினார் பரம வெளியிலே    (அப்பிரமேயர் தல புராணம்)

 

 

அற்புதமான திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. கொங்கு மண்டலத்தில் ஏராளமான அற்புதமான கோவில்கள் உள்ளன.

அதில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.

அந்தத் திருப்பணிகள் பற்றியும் கூட கொங்கு மண்டல சதகம் விரித்துரைக்கிறது!

***

Leave a comment

Leave a comment