‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 16 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10-04 am

 

 

Post No. 4503

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இந்துக்களிடையே மிகவும் புகழ் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம். இது, திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. ஆயிரம் என்றும் 1008 என்றும் ஆண்டவனின் பெயர்களை எழுதினாலும் அதற்கு ஆயிரம் என்றே சுருங்கச் சொல்லுவர்.

 

இது கம்பன் காலத்தில் , அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ் நாட்டில் நன்கு பிரபலம் அடைந்திருக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம், மஹாபாரத்தில் உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் பாராயணம் செய்யப்பட்டிருக்கும்.

சிவன் சஹஸ்ரநாமம்

 

 

ஏனெனில் கம்பருக்கும், அவருக்கு முந்தைய கொம்பருக்கும், அதவது அப்பர் என்னும் திருநாவுக்கரசருக்கும் முன்னரே சிவ சஹஸ்ரநாமமும் பிரயோகத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்பர், சம்பந்தருக்கு முன் வாழ்ந்த மாணிக்க வாசகர்,

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை

உருநாமறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்

 

ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

 

என்று திருவசகத்தில் செப்புவார்.

 

அவருக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்

………….. (ஆறாம் திருமுறை) என்று மாணிக்கவாசகரின் சொற்களை எதிரொலிக்கிறார்.

 

 

சமண சஹஸ்ரநாமம்.

இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண்  காதையில் சமணர்களின் சஹஸ்ரநாமம் பற்றி உரைக்கிறார்:

 

சாரணர் வாய்மொழிகேட்டு, தவமுதல்,

காவந்திகை தலைமேற்கொண்டு

ஒருமூன்று அவித்தோன் ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு

நாமம் அல்லது நவிலாது, என் நா

 

–என்று கவுந்தியடிகளின் வாயிலாக உரைப்பார்

 

பொருள்:

தவ முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் உரைத்த வாய்மையான உபதேசங்களை எல்லாம் கேட்டனர். தம் கைகளைத் தலைமேற் குவித்துக் கொண்டனர். “என் செவிகள் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றினையும் கெடுத்தோனாகிய அருக தேவன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லது

பிறவற்றிற்குத் திறக்காது; காமனை வென்றோனின் 1008 திருநாமங்கள் அல்லது வேறு எதனையும் என் நா நவிலாது.

 

 

விஷ்ணு  சஹஸ்ரநாமம்

கம்பனின் சொற்கள், சொற்றொடர்கள் ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்து, படித்து ரஸிக்க வேண்டும். அவனும் சஹஸ்ரநாமத்தைத் தக்க இடத்தில் பயன்படுத்துகிறான்

 

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை

மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து

தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை

ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்

 

பொருள்

பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.

 

 

இதில் திருமாலின் சஹஸ்ரநாமத்துடன் வேறு சில சுவையான விஷயங்களும் உள.

 

ஒளிவீசும் ரத்தின மாலையுடன் வருணன் வந்த செய்தி, அக்காலத்திலேயே மாலை போடும் வழக்கத்தைக் காட்டுகிறது. சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் கழுத்தில் மாலை போடாமல் அதை அவருடைய பாத கமலங்களில் சமர்ப்பிப்பர். அது போல இராம பிரானின் திருவடிகளில் மாலையை வைக்கிறான் வருணன். அவ்வளவு மரியாதை.

பிழை பொறுத்தல்

அடுத்ததாக சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை) என்றும் மொழிகிறான்.

 

பிழை பொறுக்க வேண்டுதலை அவ்வையாரின் வெற்றி வேற்கை முதல் கந்தசஷ்டிக் கவசம் வரை காண்கிறோம். அதைக் கம்பனும் இப்பாடலில் புகுத்தியுள்ளான்.

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

–SUBHAM–

 

Leave a comment

3 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    பல கீதைகள் இருந்தாலும் “கீதை” என்று மட்டும் சொன்னால் அது ஸ்ரீமத் பகவத் கீதையையே குறிக்கும். அதுபோல், பல தெய்வங்களுக்கும்
    ஸஹஸ்ரநாமம் இருந்தாலும், “ஸஹஸ்ரநாமம்” என்றால் அது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமமே!
    இதைப்பற்றி ஒரு ரசமான கதை வழங்குகிறது. ஸ்ரீ லலிதா
    ஸஹஸ்ரநாமத்திற்கு உரை எழுத நினைத்த ஆசார்ய சங்கரர், ஒரு சீடனிடம்
    ” ஸஹஸ்ர நாமச் சுவடி எடுத்து வா” என்றாராம். அவன் குடிலுக்குச் சென்று விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடி எடுத்துவந்தானாம்! இதைக் கண்ட சங்கரர், இது தான் தெய்வ சித்தம் போலும் எனக்கருதி அதற்கே உரை எழுதினாராம்!

    கீதைக்கும் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு,
    பாரத யுத்தத்திற்கு முன் அர்ஜுனனுக்கு தர்மம் பற்றி குழப்பம் ஏற்பட்டது, [ தர்ம ஸம்மூட சேத:] அதைப்போக்க பகவான் கீதை உபதேசித்து ‘எல்லா தர்மத்தையும் விட்டு என் ஒருவனையே பற்றிக்கொள் ” [ ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ ] என்று கீதையை முடிக்கிறார். யுதிஷ்டிரருக்கோ யுத்தமெல்லாம் முடிந்து சக்ரவர்த்தியாகி அமர்ந்ததும் குழப்பம் வருகிறது. பகவான் அவனை பீஷ்மரிடம் சென்று தர்மம் பற்றிக் கேட்கச் சொல்கிறார். பீஷ்மரும் எல்லா தர்மத்தையும் பற்றிச் சொல்கிறார். எல்லாவற்றையும் கேட்ட யுதிஷ்டிரருக்கு [ ஶ்ருத்வா தர்மான் அஸேஷேன ] மேலும் குழப்பமாகிறது. ‘ நீங்கள் இதுவரை சொன்ன தர்மங்கள் அனைத்திலும் எது சிறந்ததாகக் கருதுகிறீர்களோ அதைச் சொல்லுங்கள் ” என்று பீஷ்மரைக் கேட்கிறான்! [ கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத பரமோ மத: ] உடனே பீஷ்மர் ஸஹஸ்ர நாமத்தை உபதேசிக்கிறார். எனவே கீதையின் கருத்தையே ஸஹஸ்ர நாமம் பிரதிபலிக்கிறது/வலியுறுத்துகிறது என்று சொல்லலாம்!

    ஜோதிஷ நூல்களில் கிரக தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், ஆயுர்வேதப்படி சில நோய்களை அகற்றவும், தர்ம சாஸ்திரங்களில் பாவத்திற்குப் பிராயச்சித்தமாகவும் விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் விதிக்கப்பட்டிருக்கிறது என பெரியோர் சொல்வார்கள். இந்த ஒரு ஸஹஸ்ர நாமமே பிரார்த்தனைக்கும், ஜபத்திற்கும், த்யானத்திற்கும், பாராயணத்திற்கும் அர்ச்சனைக்கும் பயன்படுகிறது! இவ்வளவு பெருமைபடைத்த ஸஹஸ்ர நாமத்தைக் கம்பர் போற்றியது வியப்பில்லை அல்லவா!

    அருணகிரி நாதரும் ஒரு இடத்தில் ” ஸஹஸ்ர நாம கோபாலா” என்று பாடுகிறார்!

  2. tskraghu's avatar

    “கம்பனின் சொற்கள், சொற்றொடர்கள் ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்து, படித்து ரஸிக்க வேண்டும். அவனும் சஹஸ்ரநாமத்தைத் தக்க இடத்தில் பயன்படுத்துகிறான்” whets one’s appetite especially for the uninitiated like the undersigned.

  3. Tamil and Vedas's avatar

    GOOD ONE. THANKS.

Leave a comment