
RESEARCH ARTICLE by London swaminathan
Date: 5 JULY 2018
Time uploaded in London – 9-17 am (British Summer Time)
Post No. 5184
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் யூபம்- PART 1 (Post No.5184)
‘யூபம்’ என்றால் வேள்வித் தூண்!
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், இந்தோநேஷியா முதலிய இடங்களில் இருபதுக்கும் மேலான வேள்வித் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மன்னர்கள், பிராஹ்மணர்களைக் கொண்டு யாக யக்ஞாதிகள் செய்கையில் அந்தப் ப்ராஹ்மணர்கள் யூபத்தை நடுவர். அதில் யாக பலி கட்டப்படும். பின்னர் அந்த பலியைச் சுற்றி வேள்வித் தீ கொணர்வர். அதன் பிறகு அந்த உயிரினங்கள் கொல்லாமல் விடுதலை செய்யப்படும் என்று ஹிந்து மத ஸ்ம்ருதிகள் (சட்ட நூல்கள்) விளக்குகின்றன.
மிகவும் வியக்கத்தக்க செய்தி; ராஜஸ்தான் முதல் இந்தோநேஷியா வரை 20 யூபங்களுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டன. அதை விட வியப்பான செய்தி, சங்க இலக்கியத்தில்தான் மிகப்பழமையான யூபச் செய்தி கிடைக்கிறது. வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் வேதம் ஆகியவற்றிலும் யூபம் பற்றிய செய்தி உளது. ஆயினும் மன்னர் பெயருடன் வரலாற்றுச் செய்தியாக கிடைப்பது சங்கத் தமிழில்தான்.
தமிழ் மன்னர்களும் வேதமும் இணை பிரிக்க முடியாதன. மிக மிக வியப்பான செய்தி, ரிக் வேதத்தில் உள்ள அதே ஸம்ஸ்க்ருதச் சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் 2 இடங்களிலும் அதன் தமிழாக்கம் வேள்வித்தூண் மூன்று இடங்களிலும் உளது.
தமிழர் மதம் வேத மதம்; வேத சமயம் தமிழர் சமயம் என்பது வெள்ளிடை மலையெனவும், உள்ளங்கை நெல்லிக்கனி எனவும் விளக்க எழுந்துள்ளது புற நானூறு, மதுரைக் காஞ்சி, பெரும்பாணாற்றுபடை, பதிற்றுப்பத்து.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் இது வரை கிடைத்த யூபத் தூண்கள் குறித்தும் சங்க இலக்கியக் குறிப்புகள் குறித்தும் யூபத்தின் தோற்றம் குறித்தும் விளக்குவேன்.
யூபம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்:
யூப- புறநானூறு 224-8
யூபம் -புற.15-21
வேள்வித்தூண் -புற 400
வேள்வித் தூண்- பெரும்பாணாற்றுப்படை.
நெடுந்தூண்- அகநானூறு 220
XXX
யூபம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்:-
(பொ.ஆ= கி.பி; CE= COMMON ERA)
1.ஈசாபூர், மதுரா, உ.பி.- 102 பொ.ஆ
2.கோசம், பிரயாகை (அலஹாபாத்), உ.பி- பொ.ஆ. 125
3, 4.நாண்ட்சா, உதய்பூர், ராஜஸ்தான் -பொ. ஆண்டு 225 238 (இரண்டு கற்கள்)
5.பர்னாலா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் – 227 பொ.ஆ.
6,7,8,9.பட்வா, கோட, ராஜஸ்தான்,-238 (4 கற்கள்)
- நஹர், ஜெய்ப்பூர்- 264
11.பர்னாலா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் – 335 பொ.ஆ.
12.பிஜய்கர், பரத்பூர், ராஜஸ்தான், – 371
13-19 -கோடெய், போர்னியோ தீவு , இந்தோநேஷியா- மூல வர்மன் என்ற மன்னரின் ஏழு யூப ஸ்தம்பங்கள், பொ.ஆ.400 (ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்)
(இது முழுப் பட்டியல் அல்ல)
XXX

முதலில் சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்:
யூபம் என்பது ‘தூண்’ என்ற பொதுப் பொருளில் பயன்படுத் தப்பட்ட இடங்களை நான் விட்டுவிட்டேன்
எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
— சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதானார் பாடியது
புறநானூறு, பாடல் 224
இது சங்கத் தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பாடல்களில் ஒன்று.
XXX
நல் பனுவல், நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பல கொல்?– புறம் 15
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
XXX
மறவர் மலிந்த………………………….
கேள்வி மலிந்த வேள்வித்தூணத்து- புறம் 400
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
XXX
செல்லூர் கோசர் பற்றிய அகநானூற்றுக் குறிப்பு:–
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறுஅரையாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
அகநானூறு 220, பாடியவர் மருதன் இளநாகனார்
XXX
கேள்வி யந்தண ரருங்கடனிறுத்த
வேள்வித்தூணத்தசை இயவன
ரோதிம விளக்கினுயர் மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
–கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடிய பெரும்பாணாற்றுபடை 315-318
XXX
இது தவிர ராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளியை அவ்வையார் பாடிய பாடலில் ராஜசூயம் பற்றிக் குறிப்பிட்டாலும் யூபம் பற்றிய சொல் இல்லை. ஆயினும் அதிலும் யூபம் நடப்பட்டு இருக்க வேண்டும்.
XXX

ஆக யூபம் தொடர்புடைய சேர, சோழ, பாண்டிய அரசர்கள்:
நலங்கிள்ளி,
பெருநற்கிள்ளி
முதுகுடுமிப்பெருவழுதி
கரிகாற்பெருவளத்தான்
தொண்டைமான் இளந்திரையன்
கோசர், செல்லூர்
XXX
ரிக் வேதத்தில் யூபம்:
5-2-7 (யூபம்= வேள்வித்தூண்)
1-51-4 (தூண்)
அதர்வண வேதம், பிராஹ்மண நூல்களில் பல இடங்களில் வருகிறது.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள், ராமாயண, மஹா பாரதத்தில் யூபத்தின் தோற்றம் ஆகியவற்றைக் காண்போம்.
–TO BE CONTINUED
–SUBHAM—