நான் ஏன் இந்து? அபேதாநந்தா பதில் (Post No.5359)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 21-28 (British Summer Time)

 

Post No. 5359

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி அபேதானநந்தா ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகராவார். அந்த மடத்தின் தலைமைப் பீடத்திலும் இருந்தார்.

 

இந்திய தத்துவப் பேராசிரியரும் பிற்காலத்தில் ஜனாதிபதியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தற்கால தத்துவ அறிஞர்களுக்கு மூன்று கேள்விகள் அனுப்பினார். அதற்கு மஹாத்மா காந்தி உள்பட பலரும் பதில் அளித்தனர். அபேதானநந்தா அளித்த பதிலின் சுவையான அம்சங்களை மட்டும் தருகிறேன்.

 

மூன்று கேள்விகள்

 

  1. உங்கள் மதம் என்ன?
  2. அதில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

சமுதாய வாழ்வில் அதன் தாக்கம் எப்படி இருந்தது?

 

 

இதற்கு அபேதாநந்தா அளித்த பதில்:–

 

நான் கல்கத்தாவில் 1866-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்தேதி பிறந்தேன். பிறந்தபோது பெற்றோர்கள் சூட்டிய திரு நாமம் காளி பிரஸாத்.

என் அப்பா ரஸிக்லால் சந்திரா தத்துவ ஆர்வலர். ஆனால் அவர் கல்கத்தா ஓரியன்டல் செமினரியில் ஆங்கில ஆசிரியர்.

நான் முதலில் ஸம்ஸ்க்ருதப் பள்ளியிலும் பின்னர் வங்காளிப் பள்ளியிலும் பயின்றேன். 18 வயதில் படிப்பை முடித்தேன். சிறு வயதிலிருந்தே எதையும் ஏன் எப்படி என்று அறிவதில் ஆர்வம் உண்டு.

 

Standing: swami Vivekananda and others

Sitting: Swami Abedhananda and others

 

வில்ஸன் எழுதிய இந்திய சரித்திரம் என்ற புஸ்தகத்தைப் படித்தேன்; அவர் ஆதி சங்கரரின் தத்துவ அறிவைப் போற்றி எழுதி இருந்தார்; அதைப் படித்த போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்ச்சி. நானும் தத்துவ அறிஞராக மாறி அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்பொழுது ஸெமினரியில் ‘வரையும் கலை’ (DRAWING AND PAINTING) யைப் பயின்று கொண்டிருந்தேன். இயற்கை ஓவியங்களை வரைவதும் வண்ணம் தீட்டுவதும் என் படிப்பு. திடீரென்று இதை விட்டுவிட்டு தத்துவ அறிஞர் ஆவோம் என்று வெளியேறி விட்டேன்.

 

முன்னரே பள்ளியில் ஸம்ஸ்க்ருதம் பயின்றதால் வீட்டில் ‘முக்தபோதம்’ என்ற இலக்கண நூலைப் பயின்று நல்ல ஸம்ஸ்க்ருத அறிவைப் பெற்றேன். இப்பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் கவிதைகள் எழுதும் அளவுக்கு ஆற்றல் வந்துவிட்டது.

 

அப்பாவின் நூலகத்துக்குள் நுழைந்த போது பகவத் கீதை புஸ்தகத்தைக் கண்டேன். அதைப் படிக்கத் துவங்கினேன். அதைப் பார்த்துவிட்ட என் அப்பா, புஸ்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு இது எல்லாம் பையன்களுகான விஷயம் அல்ல; இதைப் படித்தால் பைத்தியக்காரன் ஆகிவிடுவாய் என்று சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லியும் அதை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை.

 

சிறு வயதிலிருந்தே சமயச் சொற்பொழிவுகளுக்குப் போவேன். இந்து மத உபந்யாஸம் மட்டும் என்றில்லாமல் ரெவரெண்ட் மக்டொனால்டு, ரெவரெண்ட் காளிசரன் பானர்ஜி ஆகியோர் ஆற்றிய கிறிஸ்தவ சொற்பொழிவுகளையும் செவி மடுத்தேன். பைபிளை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போனேன். பிரம்ம சமாஜத்தின் பெரும் புள்ளிகளான கேசவ சந்திர சென், பிரதாப் சந்திர மசூம்தார் ஆகியோரின் பிரசங்கங்களைக் கேட்கும் பாக்கியமும் கிடைத்தது.

 

1883-ல் இந்து தத்துவ வித்தகர் பண்டிட் சேஷாதர் தர்க்க சூடாமணி இந்து தத்துவ இயலின் ஆறு பிரிவுகள் பற்றி உரையாற்றினார். வைசேஷிகம், சாங்க்யம் பற்றி உரையாற்றுகையில் கானடர், கபிலர் ஆகியோரின் கொள்கைகளை நவீன விஞ்ஞானக் கொள்கைகளுடனும் கிரேக்க ஞானிகளின் கொள்கைகளுடனும் ஒப்பிட்டார். பதஞ்சலியின் யோகம் பற்றிப் பேசுகையில் அவர் சொன்னதைக் கேட்டு இந்து உளவியலில் (HINDU PSYCHOLOGY) எனக்கு ஆர்வம் பிறந்தது.

 

இதையடுத்து கபிலரின் யோக சாஸ்திரத்தை காளிபர வேதாந்த வாகீஷிடம் கற்றேன். அவர் அதை விரிவான விளக்க உரையுடன் அ வங்காளி மொழியில் மொழிபெயர்த்த காலம் அது.

 

நானும் ஹட யோகம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பயிற்சி செய்து நிர்விகல்ப சமாதி அடைய முயன்றேன். சிவ சம்ஹிதையைப் படித்த போது அதிலுள்ள யோகப் பயிற்சிகளை முறையான யோகிகளின் வழிகாட்டுதலோடுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர். யாராவது குரு கிடைக்க மாட்டார்களா என்று தவித்தபோது என்னுடைய சக மாணவர் ஞானேஸ்வர் பட்டாசார்யா என்னை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் படி சொன்னார்.

 

கல்கத்தாவிலிருந்து நாலு மைல் தொலைவில் தட்சிணேஸ்வரம் இருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்திக்க அங்கே சென்றேன். யோகத்தைக் கற்பிக்க முடியுமா என்று வினவியபோது அவர் உடனே ‘சரி’ என்று சொன்னார். நீ பூர்வ ஜன்மத்தில் பெரிய யோகியாக இருந்தாய். வா, வா, உனக்கு யோக முறைகளைச் சொல்லித் தருகிறேன் என்றார். எனக்கு பயிற்சி முறையை விளக்கிய பின்னர் என் நெஞ்சைத் தொட்டார். என்னுள்ளே உறைந்து கிடந்த குண்டலினி சக்தி மேலே கிளம்பி அற்புத அனுபவத்தைத் தந்தது. நான் அவருடைய பரம பக்தனாகவும் சீடனாகவும் மாறினேன். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்த காலத்தில் அவருடைய மற்ற சீடர்களுடன் ,குறிப்பாக சுவாமி விவேகாநந்தருடன் தொடர்பு ஏற்பட்டது.

 

அவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டதால் இந்திய ஐரோப்பிய தத்துவவியலின் பல அம்சங்கள் பற்றி விவாதிப்பேன்.

 

–தொடரும்

 

Leave a comment

Leave a comment