
WRITTEN BY S NAGARAJAN
Date: 2 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-45 AM (British Summer Time)
Post No. 5385
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!
ச.நாகராஜன்
ரமண மஹரிஷியிடம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருவோர் ஏராளம். இடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற வைக்க வேண்டும் என்று வருவோரும் உண்டு.
அவரவர்க்கு அவரவர் பாணியில் பதில் தருவது பகவானின் விசேஷ சமத்கார திறன்.
இரு சம்பவங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர் இருவர் மஹரிஷியிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர் சம்பாஷணையைத் தொடங்கினார்.
இஸ்லாமியர் : கடவுளுக்கு உருவம் உண்டா?
மஹரிஷி : அப்படி என்று யார் சொன்னது?
இஸ்: நல்லது, அப்படியானால் கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் சிலையை வைத்து வழிபடலாமா?
மஹ: கடவுளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் யாருக்கும் புலனாகாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?
இஸ்: ஆம். என்னை இன்னார் என்று சொல்ல முடியும்.
மஹ: அப்படியானால் நீங்கள் அங்கங்களை எல்லாம் கொண்ட ஒரு மனிதர். ஆறடி உயரம் கொண்டவர், தாடி கொண்டவர், இல்லையா?
இஸ்: நிச்சயமாக.
மஹ: அப்படியானால் ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
இஸ்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கியதாக உணர்கிறேன். ஆகவே ஊகத்தின் அடிப்படையில் தூக்கத்திலும் நான் இருந்ததாக உணர்கிறேன்.
மஹ: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு உடலை ஏன் புதைக்க வேண்டும். உடல் தன்னை புதைப்பதை எதிர்த்து புதைக்கக் கூடாது என்று மறுக்க அல்லவா வேண்டும்?
இஸ் : இல்லை, நான் நுண்மையான உயிராக பரு உடலில் இருக்கிறேன்.
மஹ: ஆகவே உண்மையில் நீங்கள் உருவமற்றவர் என்பதை அறிகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை உடலுடன் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் உருவமுடன் இருக்கும் வரையில் உருவமற்ற கடவுளை உருவமுள்ளவராக ஏன் வழிபடக் கூடாது?
கேள்வி கேட்ட இஸ்லாமியர் விழித்தார். முழித்தார்.
29-12- 1935 தேதியிட்ட குறிப்பில் முனகல வேங்கடராமையா Talks with Sri Ramana Maharishi – Volume I என்ற நூலில் முன்னர் நடந்த சம்பாஷணை ஒன்றைத் தந்துள்ளார் இப்படி.
ரமணரை மடக்க வேண்டும் என்று வருவோர் அவரது பதிலால் திணறுவதும் திருப்தியுறுவதும் வழக்கம்.
*

இன்னொரு சுவையான சம்பவம்:
ஒருநாள் இளைஞன் ஒருவன் மஹரிஷியிடம் வந்தான்.
இளைஞன்: ஸ்வாமி! ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கச் செய்தது போல் மஹரிஷியும் நிர்விகல்ப சமாதியில் என்னை நிலைபெறச் செய்ய முடியுமோ?
இதைக் கேட்டவுடன் மஹரிஷி, “கேட்பது விவேகானந்தர் தானோ?” என்றார்.
கேள்வி கேட்ட இளைஞன் வாயடைத்து நின்று விட்டான். பின்னர் சென்று விட்டான்.
*

கேட்பவர்க்கு கேட்கும் பாணியில் பதில் தரும் மஹரிஷியின் Artless Art of Repartee – சுடச்சுட பதில் தரும் கலை – வியக்க வைக்கும் ஒன்று. இப்படி ஏராளமான பதில்களில் பெரிய ஆன்மீக விளக்கங்களும் இடம் பெறும்.
***