மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி! ((Post No.5397)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-49 AM (British Summer Time)

 

Post No. 5397

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

போர் என்பது இனி தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற இறுதி முடிவுக்கு துரியோதனன் வந்து விட்டான்.

போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை.

 

‘,ஹூம், அவர்களிடம் வெறும் ஏழு அகக்ஷௌஹிணி சேனை மட்டும் தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.

ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் – வெற்றியுடன். அது மட்டுமா,  குடும்பத்தில் அனைவருக்கும் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்த துரோணர் என் பக்கம். ஆசார்ய கிருபர் என் பக்கம். அருமைத் தம்பிகள், மாமா சகுனி, இன்னும் ஏராளமான ராஜாக்கள்! அட,இது போதாதா, வெற்றிக்கு” என்று இவ்வாறு எண்ணி மகிழ்ந்தான் துரியோதனன்.

 

ஆனால் ஒரே ஒரு உறுத்தல்.

 

அந்த மாமாயக் கண்ணன் அவர்கள் பக்கம். அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ – துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது.

 

அவனுக்குப் பதில் தெரிய வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான்!

 

வெற்றி நிச்சயம் என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும், எத்தனை நாள் தான் நடக்கும்?

ஒரு நாள அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எண்ணினான். இரவு முழுவதும் சிந்தனை.

 

இரவு விடிந்ததும் பிதாமஹர் பீஷ்மரை நோக்கி துரியோதனன் வினவினான்: “இதோ பிரம்மாண்டமான இந்த பாண்டவ சேனையை எவ்வளவு காலத்தில் வெல்வீர்?”

 

இதைக் கேட்ட பீஷ்மர் பதில் அளித்தார்: “ பதினாயிரம் காலாட்கலையும், ஆயிரம் தேராளிகளையும் ஒரு பாகமாகச் செய்து பாண்டவர்களின் சேனையை நாள் தோறும் அழிப்பேன். இது எனது பாகமாகக் கொள்கிறேன். ஓ! பாரத! அல்லது யுத்தத்தில் நின்று கொண்டு லட்சம் பேர்களைக் கொல்கின்ற மஹாஸ்திரங்களை விடுவேன் என்றால் ஒரு மாதத்தில் கொல்லுவேன்”

 

துரியோதனன் இப்போது துரோணர் பக்கம் திரும்பினான்: “ஓ! ஆசார்யரே! நீர் பாண்டுபுத்திரர்களின் சேனைகளை எவ்வளவு காலத்தில் வெல்லுவீ ர்?”

 

துரோணர் அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்:” கிழவனாயிருக்கிறேன். சக்தியும் முயற்சியும் எனக்குக் குறைந்து விட்டன. பாண்டவ சேனையை பீஷ்மர் போல் ஒரு மாதத்தில் எரிப்பேன் என்பது என் எண்ணம். இது தான் என் சக்தியின் அளவு. இது தான் என் வலிமையின் அளவு”

துரியோதனன் கிருபரை நோக்க அவர், “இரண்டு மாதங்களில் கொல்வேன்” என்றார்.

 

அஸ்வத்தாமன் பத்து தினங்களில் பாண்டவ சேனையை வதம் செய்வதாக பிரதிக்ஞை செய்தார்.

கர்ணனோ ஐந்து தினங்களில் பாண்டவரை வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை செய்தான்.

உள்ளதிலேயே குறைந்த காலம்; ஐந்தே நாட்கள்! பாரதப் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன்! !கர்ணனின் வாக்கு!

கர்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட கங்காபுத்திரரான பீஷ்மர்  ஹாஹா என்று சப்தத்துடன் சிரித்தார்.

 

“ஓ! ராதையின் புத்திரா! கர்ணா! தேரில் ஏறி வருகின்ற அர்ஜுனனை நெருங்காத வரையில் நீ இவ்விதம் நினைப்பாய். உன்னாலே இப்படியும் இதற்கும் மேலும் இஷ்டப்படி சொல்லுவதற்கு முடியும்” என்றார் பீஷ்மர்.

இந்த விஷயங்களை தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட தர்மர் தனது தம்பிகளை நோக்கி நடந்த விஷயங்களைச் சொன்னார்.

 

பின்னர் அர்ஜுனனை நோக்கி, “நீ எவ்வளவு காலத்தில் பகைவர்களை நாசம் செய்வாய்?” என்று கேட்டார்.

அர்ஜுனன், “ நான் சத்தியம் தவறாமல் சொல்கிறேன். கிருஷ்ணனின் சகாயத்துடன் தேவர்களோடு கூடிய மூவுலகங்களையும்  எல்லா சராசரங்களையும் சென்றதையும் இருப்பதையும் இனி உண்டானதையும் ஒரு நிமிஷத்தில் கொல்லுவேன்” கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதன் படியே ஆகும்! வேறு விதம் ஆகாது.  பாசுபதாஸ்திரம்  என்னிடம் இருக்கிறது. அதை பீஷ்மரும் அறியமாட்டார். துரோணருக்கு, அது தெரியாது. கிருபருக்கும் தெரியாது. அஸ்வத்தாமனும் அறியான்! எனில் கர்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

 

என்றாலும் திவ்ய அஸ்திரங்களினாலே  சாமான்ய மனிதர்களைக் கொல்வது உசிதமில்லை. ஓ! பாண்டவரே! ஒருவராலும் வெல்லப்படாத சிகண்டி, யுயுதானன், திருஷ்டத்யும்னன், பீமசேனன், நகுல ஸஹதேவர், யுதாமன்யு, உத்தமௌஜஸ், விராட துருபதர்கள், சங்கன், கடோத்கஜன், அவனது புத்திரனான் அஞ்சனபர்வா, சாத்யகி,அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் ஆகிய இவர்கள் தேவர்களுடைய சேனையைக் கூட வெல்வார்கள். அதே போல கோபத்தால் நீர் எந்த மனிதனைப் பார்ப்பீரோ அவன் சீக்கிரம் இல்லாமல் போய் விடுவான் என்பது நிச்சயம் என்று உம்மை நான் அறிகிறேன்.” என்று பதில் கூறினான்.

 

ஒரு மாதம் நடக்குமா, பத்து மாதம் நடக்குமா, அல்லது ஐந்து நாட்கள் நடக்குமா? அர்ஜுனன் கூறியது போல ஒரு நிமிடத்தில் முடியுமா? அல்லது தர்மரின் ஒரு கோபப் பார்வையே போதுமா?

அர்ஜுனன் கணித்த படி கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதுவே நடக்கும்!

 

மாமாயக் கண்ணன் முன்பே முடிவு செய்து விட்டான்.

படிப்படியாக பதினெட்டு நாட்களில் களை எடுத்து வேருடன் பகைவ்ரை அழிப்பதென்று! அவன் எடுத்த முடிவை யாரே மாற்ற வல்லார்?

 

அற்புதமான தர்ம யுத்தம் கோரமாக நடந்தது.

தர்மம் வென்றது. பாவம் தோற்றது.

போர் எனில் இது போர்! புண்ணியத் திருப் போர்!

பாவிகள் ஒழிந்தனர்; புண்ணியர் ஜெயித்தனர்!

 

***

குறிப்பு : –  வியாச பாரதம், உத்யோக பர்வம் 193, 194 அத்தியாயங்களின் சுருக்கத்தைத் தான் மேலே பார்த்தோம். விரிவாக படிக்க விரும்புவோர், ம.வீ.இராமானுஜாரியாரால் பதிப்பிக்க்ப் பெற்ற ம்ஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கலாம்.

-subham-

 

Leave a comment

Leave a comment