அறிவியல் வியக்கும் இசை (Post No.5507)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 October 2018

 

Time uploaded in London – 6-07 AM (British Summer Time)

 

Post No. 5507

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 5-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஒன்றாம்) கட்டுரை                                

அறிவியல் வியக்கும் இசை                  

ச.நாகராஜன்                                   

இசையின் பெருமையையும் அருமையையும் அறிவியல் போற்றுவதைப் பல கட்டுரைகளில் இந்த தொடரில் கண்டுள்ளோம்.     இப்போது இன்னும் சில உண்மைகளை அறிவியல் தருகிறது. இசை உங்கள் செயல்திறனை பணிபுரியும் இடங்களில் அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு விடையைக் கண்டுள்ளார் மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள துணைப் பேராசிரியையான தெரஸா லிசியுக். (TeresaLesiuk).                                                                              

யார் இசையைக் கேட்கிறார்களோ அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையை சீக்கிரமாகவும் மற்றவர்களை விட சிறந்த கருத்துக்களைக் கொண்டும் திறம்பட முடிக்கிறார்கள் என்பதே அவரது ஆய்வின் முடிவு.                         ஆனால்  சில வகையான இசை, உற்பத்தித் திறனை பாதிக்கவும் செய்கிறது. பணியிடத்தில் சளசளவென்று மற்றவர்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தால் அருகில் இருக்கும் ஒருவரால் நன்கு வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதே போலவெ பாடல் வரிகள் கொண்ட இசையைக் கேட்டால் கவனம் சற்றுச் சிதறுகிறது. இசை ஒரு பேக் ரவுண்டாக இருந்து பங்கை ஆற்றும் போது அது சிறக்கிறது. அதுவே பல வரிகளைக் கொண்ட பாடலுடன் இருந்தால் பணிக்கும் பாடல் வரிகளுக்குமாக மனம் தாவுகிறது.

 

டாக்டர் ஹாக் (Dr Haake) என்ற பெண்மணி பணியிடங்களில் இசை கேட்பதை நன்கு ஆய்வு செய்துள்ளார்.   அவரது ஆய்வின் முடிவுகள் பல உண்மைகளை அறிவிக்கின்றன:               சிக்கலான இசை அமைப்புடைய இசை கவனத்தைச் சிதற அடிக்கும்.

பாடல் வரிகள் அதன் மெசேஜைக் கேட்கத் தூண்டுவதால் நமது சிந்தனைப் போக்கை மாற்றும். கவனத்தைத் திசை திருப்பும்.   ஒரு வேலையைச் செய்யும் போது இசையைக் கேட்டுக் கொண்டே செய்வது ஒருவருக்கு நன்கு பழக்கமாகி விட்டதென்றால் அது அவரைப் பொறுத்தவரையில் நல்லதையே செய்யும். ஆகவே இசை கேட்கும் பழக்க வழக்கமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

இசை ஒருவரின் மீது வலியத் திணிக்கப்பட்டால் அவரை அது மிகவும் பாதிக்கும். வேலையைச் செய்யவிடாது.

பொதுவாக எந்த வகை இசை நலம் பயக்கும் என்பதையும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

பாரம்பரிய சங்கீதம் – கர்நாடக இசை போல உள்ளவையும், பாச், விவால்டி ஆகியோரின் இசையும் மனநிலையைச் சீராக்கி பணியிடத்தில் கவனக் குவிப்பை அதிகமாக்கும்.         இயற்கை தரும் இயல்பான இனிய ஓசைகள் மூளைத் திறனை அதிகரிக்கும். சலசலவென ஓடும் ஆற்றின் ஓசை, இலைகளின் அசைவில் எழும் ஓசை, மழை விழும் போது எழும் ஒலி, பறவைகளின் இனிய கானம் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

வீடியோ கேம் ம்யூசிக் என்பது இன்னொரு ரகம். இதில் உள்ள இசை அமைப்பு விசேஷமாக விளையாடும் திறனை அதிகரிப்பதற்காகவே கம்போஸ் செய்யப்படுகிறது.

இன்னொரு வகையான இசை ஆம்பியண்ட் மியூசிக் எனப்படும். பாரம்பரிய இசைக்குப் பதிலாக இதில் த்வனிக்கும் சூழ்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாத்திய இசையான இதில் மிக மெதுவான திருப்பித் திருப்பி வரும் மனதை வருடும் இதமான இசை ஒலி எழும்பும்.

இது தவிர, ஜாஸ், தியான இசை போன்றவையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கேட்பதற்காக உள்ளன.                  இப்போது பிரபலமாகி இருக்கும் பிரபல பாடகர் டினி டெம்பா, “இசை உணர்ச்சியைத் தூண்டுகிறது. அத்துடன் மட்டுமல்ல, வெவ்வேறு மதம், இனம், நாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு லட்சம் பேரை ஆண்பால் பெண்பால் பேதமின்றி ஒரே இடத்தில் சேர வைப்பது இசை தான். இதே போல அரிய காரியத்தை ஆற்ற வல்லவை மிகச் சில தான்” என்கிறார்.

இவர் (பிறப்பு 7-11-1988) லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவரை இப்போது ப்ளிமத் பல்கலைக் கழகம், பேராசிரியர் எடுவார்டோ மிராண்டா தலைமையில் செய்யப்படும் ஒரு ஆய்விற்கு அழைத்துள்ளது. சோதனைக் கூடத்தில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க இவர் இசையைக் கேட்க வேண்டும். இ.இ.ஜி கட்டுப்பாட்டிற்குள் வரும் போது இவரது மூளை இசை கேட்கும் சமயத்தில் என்ன மாறுதலை அடைகிறது என்பதைக் கண்டு பிடிப்பதே ஆய்வின் நோக்கம்.

இசை உணர்ச்சிகளைத் தூண்டும். ஒருவரை அழ வைக்கும்; குதூகலப்படுத்தும்; ஒருவருக்கு இன்பமயமான உணர்வுகளைத் தூண்டும் என்பனவற்றில் விஞ்ஞானியும் இசை வல்லுநரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். என்றாலும் குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்கும் போது உள்ளம் கிளர்ச்சி அடைகிறதா, அமைதியை உணர்கிறதா, ஆனந்தப் படுகிறதா, துயரமடைகிறதா என்பனவற்றைப் பற்றி ப்ளிமத் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தும்.    இப்படிப்பட்ட இசை கேட்கும் நேரத்தில் மூளை எப்படித் தோற்றமளிக்கிறது என்பதும் காணப்படும்.

இறுதியாக ஆய்வின் முடிவுகளை வைத்து இசையை ஒரு சிகிச்சை முறையாக அறிவியல் ரீதியில் அறிமுகப்படுத்துவதும் தீர ஆலோசிக்கப்படும். இந்த இசை தெராபி வந்தால் அது ஆயிரக்கணக்கானோருக்கு நல்ல மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் குறைந்த செலவில் தரும் என்பதில் ஐயமில்லை!

ஆய்வு முடிவுகள் எதை எப்படிச் சொன்னாலும் கூட ஒலியே இல்லாத அமைதியான இடம் பணிக்கு மிக சாதகமான இடம் என்பதில் ஐயமே இல்லை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜோசெலின் பெல் பர்னெல் (தோற்றம் 15-7-1943- Jocelyn Bell Burnell) வட அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி. முதலில் இந்தப் பெண்மணி தான் ரேடியோ பல்சரைக் (Radio Pulsar) கண்டுபிடித்தார். ஆனால் 1974ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்குத் தரப்படவில்லை. பெல்லின் மேற்பார்வையாளராக இருந்த ஆண்டனி ஹீவிஷுக்குப் பரிசு அளிக்கப்பட்டது. இது அப்போதே பலராலும் கண்டிக்கப்பட்டது. என்றாலும் கூட பெல் அமைதி காத்தார். பின்னால் பல விருதுகளை இவர் பெற்றார். என்றாலும் கூட வட்டியும் முதலும் சேர்த்துக் கிடைத்தது போல 2018க்கான ஸ்பெஷல் ப்ரேக்த்ரூ விருது (Special Breakthrough Prize in Fundamental Physics) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத் தொகை 23 லட்சம் பவுண்டுகள் ஆகும். இந்தப் பெரும் தொகையை அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறுபான்மை இனத்தினரின் முன்னேற்றத்திற்கும், இயற்பியலில் ஆர்வம் கொண்டு ஆய்வுக்காக அகதிகளாக வரும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் நன்கொடையாக அளித்து விட்டார். பெரிய கண்டுபிடிப்பிற்காக இவரைப் பாராட்டுவதா, அல்லது இவரது பெரிய மனத்திற்காக பாராட்டுவதா? இரண்டிற்காகவும் இரு முறை இவரைப் பாராட்டுவோம்!

XXXX SUBHAM XXXX

Leave a comment

Leave a comment