மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை! (Post No.5510)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 October 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5510

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மன்மதைனையும்  மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

 

ச.நாகராஜன்

 

    பழ வகைகள், தேன் முதலிய உணவுப் பொருள்கள் நிரம்பிய மலை கொல்லி மலை. ஆகவே தவம் செய்ய விரும்பிய முனிவர்களும் தேவர்களும் இங்கு வந்து தங்கி இருக்கப் பெரிதும் விரும்புவர். இந்த மலையின் பெருமையைக் கேட்ட இராக்கதர்களும் அசுரர்களும் இங்கு வரத் தொடங்கினர். இதனால் தவம் புரிந்து வந்த முனிவர்களுக்குப் பெரிதும் இடையூறு ஏற்பட்டது.

 

ஆகவே அவர்கள் காற்று, மழை, இடி ஆகிய எதனாலும் கேடு கொள்ளாத ஒரு பாவையை விசுவகன்மாவைக் கொண்டு நிர்மாணிக்கச் செய்து அதை அம்மலையின் மேற்குப் பாகத்தில் நட்டு வைத்தனர். பல்வகை சக்தி அதில் ஊட்டப்பட்டிருந்ததால் அசுரர் முதலானோரின் காற்று வாடை பட்டால் கூட அந்தப் பாவை இளஞ்சிரிப்பைச் சிந்தும். கண்டவரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண் பார்வையையும் கொள்ளும். இதனால் பார்த்தவர்கள் பெரும் காம வேட்கையைக் கொள்வர். இறுதியில் உயிர்போக்க வல்ல மோகினி வடிவத்தையும் அது கொள்ளும். இந்தக் கொல்லிப்பாவை நகைப்பதையும் இயங்குவதையும் கண்டு அது ஒரு அழகிய மடந்தை என்று எண்ணி மயங்கிக் காம நோய் கொண்டு இறுதியில் அசுரர் முதலானோர் மடிவர்.

இப்படிப்பட்ட கொல்லிப்பாவையைக் கொண்டுள்ள கொல்லி மலை உடைய மண்டலம் கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தின் 25ஆம் பாடல் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறது.

 

பாடல் வருமாறு:

 

“தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்

பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்

பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவைமுல்லை

வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே

 

பாடலின் திரண்ட பொருள் : மன்மதனும் மயங்கத் தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப் பாவை விளங்கும் கொல்லி மலையும் கொங்கு மண்டலத்தில் இருப்பதேயாகும்.

 

கொல்லிமலையில் எழுந்தருளியுள்ள அரப்பளீசுரர் ஆலயத்துக்கு மேற்குப் பக்கத்தில் இப்பாவை இருப்பதாக கொல்லி மலை அகராதி என்ற சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் இக்காலத்தில் இது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை; இதைக் காணவும் முடியவில்லை.

 

சித்திரமடல் என்னும் நூலில் இது பற்றிய குறிப்பைக் காண்கிறோம்:

 

     “ …. திரிபுரத்தைச் –

செற்றவனுங் கொல்லிச் செழும்பாவையு நகைக்கக்

கற்றதெலா மிந்தநகை கண்டாயோ    (சித்திர மடல்)

 

நற்றிணையும் கொல்லிப்பாவை பற்றிக் குறிப்பிடுகிறது:

 

‘செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்

தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்

டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்

கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு

முருமுடன் றெரியினு மூறுபல தோன்றினும்

பெருநலங் கிளரினுந் திருநல வுருவின்

மாயா வியற்கைப் பாவை  …

         ….   கொல்லிக் குடவரைப்

பூதம் புணர்ந்த புத்தியல் பாவை     (நற்றிணை)

 

இதுமட்டுமின்றி குறுந்தொகையும் கொல்லிப்பாவை பற்றிக் கூறுகிறது:

 

“பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருகட் டெய்வங் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை                  (குறுந்தொகை)

 

இப்படி குடவரை எழுதிய கருங்கல் தெய்வமான நல்லியல் கொல்லிப் பாவையின் நகையும் இயக்கமும் மயக்க வைக்கும் மோகன உருவமும் அசுரரை மயக்கி அழித்து தவம் செய்யும் நல் முனிவர்களைக் காத்து வருகிறது என்பது பல நூல்களின்  முடிந்த முடிபுரை.

 

அப்படிப்பட்ட கொல்லிப்பாவையைத் தன்னகத்தே கொண்டு தென்னகத்தே இலங்கும் கொல்லி மலை இருப்பது கொங்கு மண்டலத்தில் என்பதால் கொங்கு மண்டலம் தனிப் பெருமை பெறுகிறது.

 

இத்துடன் கொங்குமண்டல சதகத்தின் அடுத்த பாடலும் (பாடல் 26) கொல்லி மலையில் உள்ள தேன் பற்றிப் புகழ்ந்துரைக்கிறது.

 

“முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்

தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரத்

கொத்தீட் டியபுதுப் பூத்தேனு மூறுங் குறிஞ்சியின்றேன்

வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே

பொருள் : தேவர் முதலிய அனைவரும் ஆசை கொள்ளத் தக்க சுவை மதுரப் பூந்தேன் ஊறும் கொல்லி மலையைக் கொண்டுள்ளதும் கொங்கு  மண்டலமே ஆகும்.

கொல்லிமலையின் தேன் பற்றிக் கம்பரின் தனிப்பாடல் ஒன்று, “கொல்லிமலைத் தேன் சொரியுங் கொற்றவா என்று குறிப்பிடுகிறது.

 

அடுத்து நற்றிணையும் கொல்லி மலைத் தேனைப் பற்றிக் கூறுகிறது:

 

“உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி

னகவிலைக் காந்த ளங்குகுலைப் பாய்ந்து

பறவை யிழைத்த பல்க ணிறாஅற்

றேனுடை நெடுவரை

 

இப்படிப்பட்ட தேவரையும் மயங்க வைக்கும் தேன் உடை நெடு வரை கொல்லி மலை என்பதால் கொங்கு மண்டலத்தின் பெருமை இன்னும் கூடுகிறது, இல்லையா!

***

Leave a comment

Leave a comment