
picture from wikipedia
Written by S Nagarajan
Date: 18 November 2018
GMT Time uploaded in London –6-55 am
Post No. 5673
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஷாலின் ஆலயமும் போதிதர்மர் மர்மமும்!
ச.நாகராஜன்
இந்தியாவிலிருந்து கி.பி. 527 ஆம் ஆண்டு வாக்கில் சீனா சென்ற போதிதர்மரைப் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு.
குங் பூ உள்ளிட்ட விஷேச சண்டைப் பயிற்சிகள், சில விசேஷ தியான முறைகள், தர்மத்தைக் கற்பிக்கும் முறைகள், அவற்றை உள்ளடக்கிச் சொல்லும் குறைந்த சொற்களுடைய கோயன் எனப்படும் செய்யுள்கள் ஆகியவை போதிதர்மருடன் தொடர்பு படுத்திச் சொல்லப்படுகின்றன.
ஷாலின் மடாலயம் சான் பிரிவின் தலைமையகம். ஐந்தாம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலமான ஒரு தலமாகத் திகழ்ந்தது. இது ஹெனான் மாகாணத்தில் டெங்ஃபெங் என்ற பிரதேசத்தில் அமைந்த ஒரு ஆலயம்.
ஷாலின் போதித்த புத்த மதப் பிரிவின் தத்துவத்தைப் பின்பற்றுவாருக்கு இன்றும் இது தான் பிரதான மையமாக இலங்குகிறது.
2010ஆம் ஆண்டு இது யுனெஸ்கோ உலக கலாசார பாதுகாப்பு இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
ஷாலின் ஆலயம் சென்ற போதிதர்மர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒன்பது வருடங்கள் குகையின் சுவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏழு வருடங்கள் தூங்கி விட்டதாகவும், உடனடியாக தன் கண் இமைகளை அறுத்துக் கொண்டு தூங்காமல் இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
பின்னர் அங்குள்ள பிக்குகளுக்கு குங்பூவையும் விசேஷ தியானமுறையையும் கற்பித்தார்.
எதையும் சுருக்கமாகச் சொல்லும் கோயன் எனப்படும் செய்யுளும் சான் புத்தமதப் பிரிவும் அவராலேயே துவக்கப்பட்டது.
சீன மன்னருடனான அவரது சந்திப்பும் பல விதமாகக் கூறப்படுகிறது.
அதே போல மர்மமும் புனிதமும் கொண்ட ஷாலின் ஆலயம் பற்றியும் அதில் போதிதர்மரின் வருகை பற்றியும் கூட விதவிதமான கதைகள் உண்டு.
இவற்றில் எது சரி, எது மிகைப்படுத்தப்பட்டது என்பதை அறிய முடியாது.
இதில் அடங்கியுள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
எது எப்படி இருந்த போதிலும் மிகப் பெரிய மாற்றத்தை புத்த தர்மத்திற்குத் தந்தவர் போதிதர்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவரைப் பற்றிய சில சம்பவங்களைப் பார்ப்போம்:
வு சக்கரவர்த்தியை போதிதர்மர் சந்தித்தார். அப்போது நடந்த உரையாடல் இது:
வு : புத்த பிக்குகளை உருவாக்கவும் புத்த மடாலயங்களைக் கட்டவும், சூத்ரங்களை பிரதி எடுக்கவும், புத்தரின் சிலைகளை நிர்மாணிக்கவும் நான் எந்த அளவு புண்ணிய கர்மத்தைக் கொண்டுள்ளேன்?
போதிதர்மர் : ஒன்றுமில்லை! உலகியல் நோக்கில் செய்யப்படும் கர்மாக்கள் நல்ல கர்மாக்களைக் கொண்டு வந்து தரும். ஆனால் புண்ணியத்தைத் தராது.
வு: ஆக, எது பெரிய உண்மையின் அர்த்தம்?
போதி தர்மர்: பெரிய உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை. சூனியம் தான் இருக்கிறது.
வு: அப்படியானால், என் முன் நிற்பது யார்?
போதிதர்மர் : அது எனக்குத் தெரியாது, மன்னரே!
கோயன்களைக் கொண்டுள்ள, “Blue Cliff Record’இன் முதல் கோயன் இது தான்!
போதிதர்மரின் பதிலால் வு மன்னர் திருப்தியுறவில்லை. போதிதர்மர் இதன் மூலம் என்ன போதித்தார் என்பது அவருக்குப் புரியவும் இல்லை.
போதிதர்மரோ யாங்ட்ஸே நதியைத் தாண்டி வடக்கே சென்று விட்டார்.
picture from wikipedia
பின்னால் போதிதர்மர் மறைந்து விட்ட செய்தியைக் கேட்டதும் அவரை விட்டு விட்டோமே என்று பெரிதும் வருந்திய வு கீழ்க்கண்ட கவிதையை இயற்றிப் புலம்பினார்:
அந்தோ! அவரைப் ‘பார்க்காமல்’ பார்த்தேன்!
அவரைச் ‘சந்திக்காமல்’ சந்தித்தேன்!!
அவரிடம் போதனை பெறாமல் போதனை பெற்றேன்!!!
இப்போது இதோ வருந்துகிறேன்!!!!
போதி தர்மரைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அதில் ஒன்று கிளி பற்றிய சம்பவம்.
அந்தக் கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.
அது தெருவில் சென்று கொண்டிருந்த போதி தர்மரைப் பார்த்தது.
அவரைப் பார்த்து கிளி கேட்டது:
மேற்கிலிருந்து மனம் வருகிறது,
மேற்கிலிருந்து மனம் வருகிறது,
தயவுசெய்து எனக்கு ஒரு வழியை போதித்தருளுங்கள்,
இந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க!
எந்த மக்களுக்காக போதி தர்மர் வந்தாரோ அவர்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இந்தக் கிளியையாவது உய்வு பெறச் செய்வோம் என்று எண்ணிய போதி தர்மர் இப்படி பதில் கூறினார்:
கூண்டிலிருந்து விடுதலை பெற,
கூண்டிலிருந்து விடுதலை பெற,
உன் இரு கால்களையும் நேராக வை,
இரு கண்களையும் இறுக்கி மூடு!
கூண்டிலிருந்து நீ தப்பிக்க இதுவே வழி!!
புத்திசாலி கிளி இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டது.
அது இறந்தது போல கூண்டில் படுத்தது! இரு கால்களையும் முடக்கி நேராக வைத்தாது. கண்களை இறுக்க மூடியது.
கூண்டில் அடைத்து வைத்திருந்த கிளியின் சொந்தக்காரர் கிளியைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
கிளி இறந்து விட்டதோ?
கூண்டைத் திறந்தார்.கிளியைக் கையில் தூக்கி வைத்தார். அதன் மூச்சு கூட வரவில்லை. ஆனால் உடல் வெப்பம் குறையவில்லை. அவர் கையை உயரத் தூக்கினார் ஒரு கணம். அதே கணத்தில் கிளி கால்களைப் பரப்பி, கண்களைத் திறந்து மேலே பறந்தது!
விடுதலை பெற்றது!!
இந்தக் கோயன் இன்றும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதன் உண்மைப் பொருள் என்ன?
கிளி என்பது பிரக்ஞை.
கூண்டு என்பது உடல்.
இறுக்க மூடு. கால்களை ஒடுக்கு என்பது புலன்களின் எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவித்துக் கொள். உடலுக்கு அப்பாற்பட்டு உன்னை விடுவித்துக் கொண்டு உயரே பற! என்ற அர்த்தத்தைத் தருகிறது.
இது போன்ற உபதேசங்களை ஆங்காங்கே அருளிச் சொல்லியவாறே போதிதர்மர் சென்றார்.
இப்படி ஏராளமான அதிசய சம்பவங்களை உள்ளடக்கிய போதி தர்மரின் வாழ்க்கை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!
Tags– போதிதர்மர்,ஷாலின் ஆலயம்
***
