
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 2 December 2018
GMT Time uploaded in London – 8-29 am
Post No. 5724
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பிரபல விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் இரண்டு முறை வேலையை இழந்தார். இதை அவர் சிரித்துக் கொண்டே சுவைபட உரைப்பதைக் கேளுங்கள்:
“ஒரு தந்தி ஆபீஸில் வேலைக்குப் போனேன். நிறைய தந்திகள் வந்து கொண்டே இருந்தன.இந்தப் பாழாய்ப்போன மிஷின் இப்படி மெதுவாக வேலை செய்கிறதே; இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தந்திகள் குவிந்தன. அவைகளைப் பார்க்கவும் இல்லை; மற்றவர்களுக்கு அனுப்பவும் இல்லை. மானேஜர் அய்யா வந்தார். இன்றுடன் உன் சீட்டு கிழிந்தது; வீட்டுக்குப்போ என்றார். நானும் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் வீட்டுக்குப் போனேன்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? என்றார் ஆல்வா!”
இன்னொரு ஆபீஸுக்கு வேலைக்குப் போனேன். அந்தப் பாழாய்ப் போன ஆபீஸில் எங்கு பார்த்தாலும் எலிகள்; கரப்பான் பூச்சிகள். நானா சும்மா இருப்பேன்; ஒரு அருமையான கருவியைக் கண்டு பிடித்தேன். அந்தக் கருவி அவைகளைக் கொசு அடிப்பது போலக் கொன்று குவித்தன. எனக்கு இந்தப் படுகொலையில் பேராநந்தம்; அலுவலகத் தரை முழுதும் இரத்த வெள்ளம்! எலிகளும் பூச்சிகளும் கால் பட்ட இடமெல்லாம் கிடந்தன. மானேஜர் அய்யா வந்தார். ஏனய்யா, எடிஸனாரே! அலுவலகத்தை சுடுகாடாக மாற்றி விட்டீரே; இதுக்கா உமக்கு சம்பளம்? வீட்டுக்குப் போம்! என்றார்.
நாயை அடிப்பானேன், XXXXயைச் சுமப்பானேன் – என்ற பழமொழிக்கு இணங்க வீட்டுக்கு வந்தேன்.
சிரித்துக் கொண்டே மிடுக்காகச் சொன்னார் எடிஸன்.
மானேஜர் அய்யா, ஆல்வாவுக்கு அல்வா கொடுத்த கதை இது
xxxx

நான் விஞ்ஞானி அல்ல; பணமே எனக்குக் குறி
ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிஸனைப் பாராட்டி ஒரு கட்டுரை , ஒரு பத்திரிக்கையில், வெளியானது. அதை நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.
“அந்தக் கட்டுரை முழுக்க தப்பு. நான் விஞ்ஞானி அல்ல. நான் ‘பக்கா பிஸினஸ்மேன்’; வியாபாரி; எனக்கு எல்லாம் ‘துட்டு’ பற்றியே சிந்தனை; ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு வெள்ளிப்பணம் கையில் வரும் என்று எண்ணித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன். பாரடேயை வேண்டுமானால் விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் எனக்குப் பணம் சம்பாதிக்க நேரமே இல்லை என்பவர். எனக்கு காசேதான் கடவுள்– என்றார் ஆல்வா
xxxx

தந்திரக்கார எடிஸன்!!!
தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு பங்களா வைத்திருந்தார். அது கோடை காலத்தில் தங்கும் விடுதி; எல்லோருக்கும் பெருமையாகச் சுற்றிக் காண்பிப்பார். அங்கே எல்லா நவீன வசதிகளும் , அதிசயமான கருவிகளும் இருக்கும். ஒரு முறை ஒரு பார்வையாளர் கூட்டம் வந்தது. எல்லோரையும் சுற்றிக் காண்பித்தார். தோட்டத்தின் வழியாக அடுத்த பகுதிக்குச் செல்ல வேண்டியி ருந்தது. அங்கு ஒரு கம்பியால் மறைக்கப்பட்ட தள்ளும் கேட் (வாசல்) இருந்தது. ஒவ்வொருவரும் அதைத் தள்ளினால் அது நகரும்; ஒவ்வொருவராக செல்லலாம். அதைத் தள்ள மகத்தான சக்தி தேவையாக இருந்தது.
ஒருவருக்கு வியப்பு ; ஐயா எடிசனாரே! வீடு முழுக்க அதி நவீன கருவிகளை வைத்திருக்கிறீர்; இங்கு மட்டும் நாங்கள் மூச்சுப் பிடித்துத் தள்ள வேண்டிய கம்பி கிராதி கேட் வைத்திருக்கிறீரே என்ன காரணமோ? என்று வினவினார்.
தந்திரக்கார எடிஸன் சிரித்துக்கொண்டே செப்பினார்:
நீங்கள் ஒவ்வொருவரும் மூச்சுப் பிடித்து அதைத் தள்ளி உள்ளே போகும்போதும் எட்டு காலன் தண்ணீர் என் (தோட்டத்து) வீட்டில் பாயும் என்றார்.

நல்ல தந்திரமான கண்டுபிடிப்பு!
எடிஸனோ கொக்கோ!
TAGS-விஞ்ஞானி, எடிஸன், காசேதான் கடவுள், எலி அடித்தேன்
–சுபம்–