
Written by SNagarajan
Date: 4 DECEMBER 2018
GMT Time uploaded in London –5- 44 am
Post No. 5731
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் இலக்கியம்
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!
ச.நாகராஜன்
தமிழனாய்ப் பிறக்க மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் அடங்கியுள்ள நூல்கள் ஏராளம்.
அறம், பொருள், இன்பம், முக்தி ஆகிய நால்வகைப் பேறுகளையும் தரவல்ல நூல்கள் தமிழில் உள்ளன.
இவற்றில் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 36492 (மிகைப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் -முப்பத்தாறாயிரத்து ஐநூறு) பாடல்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மேலோங்கி வரும் இந்த நாளில் இவற்றை http://www.projectmadurai.org போன்ற இணைய தளங்களில் படிக்கலாம்; இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் மட்டுமே படிப்பது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் 36500 பாடல்களைப் படித்து முடித்து விடலாம்.
இதன் அளப்பரிய பயனைப் படிப்பவர்களே அறிந்து கொள்ளலாம்.
இந்த தொடர் வரிசையில் அடுத்து இன்னொருமுப்பதினாயிரம் பாடல்களையும் கூடப் படிக்கலாம். அவ்வளவு பெரியது தமிழ்ச் செல்வம்!

பாடல் பட்டியலைக் கீழே பார்ப்போம்.
திருக்குறள் திருவள்ளுவர் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் 1330
ஆத்திசூடி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 109 பாடல்களும் – ஆக மொத்தம் 110
கொன்றைவேந்தன் ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 91 பாடல்களும் – ஆக மொத்தம் 92
மூதுரை ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 30 பாடல்களும் – ஆக மொத்தம் 32
நல்வழி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 40 பாடல்களும் – ஆக மொத்தம் 41
பன்னிருதிருமுறைகள்
இந்த நூல் தொகுப்பில் 12 திருமுறைகள் உள்ளன.
முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளை அருளியவர் திருஞானசம்பந்தர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 4147.
நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை அருளியவர் திருநாவுக்கரசர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 3067.
ஏழாம் திருமுறையை அருளியவர் சுந்தரர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 1026.
எட்டாம் திருமுறையில் திருவாசகம், திருக்கோவையார் இடம் பெற்றுள்ளன; இவற்றை அருளியவர் மாணிக்கவாசகர். இந்த எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 1056.
ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கரூவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளியுள்ளனர். இந்த ஒன்பதாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 301.
பத்தாம் திருமுறை திருமந்திரம் ஆகும்.திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 3047.

பதினொன்றாம் திருமுறை பிரபந்தம் ஆகும். இதில் 41 பிரபந்தங்கள் உள்ளன. இவற்றை திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள்,நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி ஆண்டார் நம்பி ஆகிய பன்னிருவர் அருளியுள்ளனர். இந்த பதினொன்றாம் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 1419.
பன்னிரெண்டாம் திருமுறை பெரிய புராணம் ஆகும். இதை இயற்றி அருளியவர் சேக்கிழார். இந்தத் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 4286.
இந்தப் பன்னிரு திருமுறைகளையும் வானத்தில் ஜொலிக்கும் 27 நட்சத்திரங்கள் போல 27 அருளாளர்கள் அருளியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
பன்னிரு திருமுறைகளிலும் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 18349.
நாலாயிர திவ்ய பிரபந்தம்.
பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளப் பெற்றது நாலாயிர திவ்ய பிரபந்தம். பெயரே சுட்டிக் காட்டுவது போல இதில் உள்ள பாடல்கள் 4000.
நாலடியார் 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.
அக நானூறு 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.
புற நானூறு 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.
திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் 1338 பாடல்கள் உள்ளன.
கம்ப ராமாயணம்
கம்ப ராமாயணத்தில் 10000 பாடல்கள் உள்ளன.
ஆக மேலே கூறிய நூல்களில் உள்ள பாக்களின் மொத்த எண்ணிக்கை 36492 ஆகும்.
மிகைப் பாடல்கள் என ஒரு எட்டையும் சேர்த்தால் மொத்தம் வருவது 36500 பாடல்களாகும்.
ஒரு நாளைக்கு 100 எனப் படிக்க ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் முடித்து விடலாம்.
வீட்டில் ஒரு புனித இடத்தைத் தேர்ந்தெடுத்து – Sacred Corner – பூஜை அறையில் இவற்றைச் சேர்த்து வைக்கலாம். (புத்தகங்கள், சி.டிக்கள், கணினி, அச்சுப் பதித்த தாள்கள் – எந்த வடிவமாக இருந்தால் என்ன)
பூஜை அறை வசதியாக இல்லாதவர்கள் இந்த நூல்களுக்கானதனி ஒரு அலமாரியைக் கொண்டு அதை சுலபமாக அணுகும் இடத்தில் வைக்கலாம்.

அன்றாடம் மனதைக் கவரும் – மனதை நெகிழ வைக்கும் சொற்றொடரைக் குறித்துக் கொள்ள பேப்பர்,பேனாவையும் கொண்டிருத்தல் நல்லது.
இதற்கான உரைகளும் இணைய தளத்தில் உள்ளன.
ஆகவே பொருள் புரியவில்லை என்று சொல்ல இடமே இல்லை.
நல்லதைப் படிப்போம்; நாளும் உயர்வோம்!
tags– ஒவ்வொரு தமிழனும்,படிக்க வேண்டிய,பாடல்கள்
***