கண்ணீர் சிந்த வைத்த கண்டுபிடிப்பு! (Post No.5732)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 6-56 AM

Post No. 5732


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ராபர்ட் புல்டன் (Robert Fulton) என்பவர் கன்டுபிடித்த நீராவிப் படகு உலக வரலாற்றையே மாற்றியது. பிரம்மாண்டமான போர்க் கப்பல்களும் பிரயாணிகள் கப்பல்களும் உலகக் கடல்களில் பவனி வர, அவரது சிறிய நீராவிப் படகுதான் உதவியது. அவர் பரம ஏழையாக இருந்தவர். அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவரைச் சந்தித்தவர் எழுதுகிறார்.

நியூ யார்க் நகரிலிருந்து ஆல்பனி பகுதிக்கு ஏதோ ஒரு விநோதமான வாகனம் வந்து இருப்பதாக நகர் எங்கும் பரபரப்பு. அனைவரும் வேடிக்கை பார்க்க அணிதிரண்டு கடற்கரைக்கு வந்தனர். அதை ஓட்டி வந்த ஆள், அதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். நானும் அவரது பெயரைக் கேட்டுக் கொண்டு அவரை சந்திக்க விரைந்தேன். அதோ அந்த படகு கேபின் (Cabin Room)  அறையில் இருக்கிறாரே அவர் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பெயர் புல்டன் என்றனர்.

நான் படகின் கேபின் அறைக்குச் சென்றேன். எளிமையே உருவான ஒருவர் தனிமையில் அமர்ந்துகொண்டு ஏதோ  எழுதிக்கொண்டு இருந்தார்.

ஐயா, தாங்கள்தான் திருவாளர் புல்டன் என்று நினைக்கிறேன்.

ஆமாம், நான் தான்; நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?

இல்லை, நீங்கள் இதே படகில் நியூயார்க் நகருக்குத் திரும்பிச் செல்லப் போகிறீர்களா………?

அப்படித்தான் திட்டம்.

நானும்  உங்கள் கூட பயணம் செய்து நியூயார்க் செல்ல விரும்புகிறேன்.

அதற்கென்ன? வாருன்களேன்.

எவ்வளவு கட்டணம்?

ஆறு டாலர் கொடுங்கள், ஐயா.

உடனே நான் அவருடைய கைகளில் ஆறு டாலர்களை எண்ணிப் போட்டேன்.

அப்படியே பேச்சு மூச்சு நின்று போய் திகைத்து நின்று விட்டார்.முகத்தில் ஒரே திகைப்பு.

ஐயா, ஏதேனும் தப்பாகக் கொடுத்து விட்டேனா? எண்ணிப் பாருங்களேன். கூட வேண்டுமானால்…..

புல்டனின் கண்களில் மள மளவென்று கண்ணீர்த் துளிகள் பெருகின .புல்டன் சொன்னார்:

ஐயா உங்கள் மீது ஏதும் பிசகு இல்லை. அந்த நாள் ஞாபகம் வந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு நீராவி சக்தியை கடல் பயணத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடித்தேன். இன்று எனக்குக் கிடைத்த இந்த சிறிய காணிக்கை என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நான் பட்ட பாட்டுக்குக் கை மேல் கிடைத்த பலன் இது. இந்த தருணத்தை ஒரு ஒயின் ( a bottle of wine) பாட்டிலுடன் கொண்டாடி மகிழ ஆசை. ஆனால் என் செய்வது? இப்போது நான் பரம ஏழை!”

பிற்காலத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் அந்த அமெரிக்க எஞ்சினீயர் ராபர்ட் புல்டனைப் பாராட்டி, அஞ்சல்தலைகளும் நாணயங்களும் வெளியிட்டன.

பெரிய நதிகள் மலைகளில் விழும் சிறிய நீர்த்துளிகளால் உண்டகின்றன. பெரிய கண்டுபிடிப்புகள் அறிஞர்களின் சிறிய சிந்தனைத் துளிகளால் மிளிர்கின்றன.

வாழ்க புல்டன்; வளர்க அறிவியல் கண்டுபிடிப்புகள்!

TAGS– 
அறிவியல் கண்டுபிடிப்புகள், 
ராபர்ட் புல்டன்

–சுபம்–

Leave a comment

Leave a comment