Written by S
Nagarajan
Date: 5 DECEMBER 2018
GMT Time uploaded in London –7- 38 am
Post No. 5737
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5
பாண்டிய மாதேவிக்கு மனமகிழ்ச்சி எல்லை கொள்ளவில்லை. மன்னர் தந்த ஓலை சோழமாதேவியிடமிருந்து வந்திருந்தது. அங்கு விஜயம் செய்திருக்கும் சேரமாதேவியுடன் சேர்ந்து வள்ளுவரைத் தரிசிப்பதற்காக மதுரை நோக்கி வர வேண்டும் என்ற தன் ஆசையைத் தமக்கைக்கு எழுதுவதாக அவள் எழுதியிருந்தாள்.
‘தங்கையே! உடனே அருமை சேரமாதேவியுடன் இணைந்து வருக! எல்லையில் வரவேற்கக் காத்திருப்பேன்’ என பதில் ஓலை அனுப்பினாள் பாண்டிய மஹாராணி.
செய்தி தெரிந்தவுடன் மக்களும் இரு பெருந்தேவியரை வரவேற்கக் காத்திருந்தனர்.
மக்கள் சோழ, சேர நாடுகளிலிருந்து யார் வந்தாலும் தங்கள் தங்கள் இல்லத்தில் தங்கலாம் என விரும்பிச் சொன்னதால் சோழ, சேர நாட்டு விருந்தினருக்கென அதிக ஏற்பாடுகளைச் செய்யும் அவசியம் பாண்டியனுக்கு ஏற்படவில்லை. மக்கள் தாங்களே வீதியெங்கும் தோரணமும் கொடியும் கட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் விருந்தோம்பும் பண்பையும் தெரிவித்தனர்.
அவரவருக்கு உரிய மரியாதையுடன் அற்புத அரண்மனைகளை அவர்களுக்கு ஒதுக்கி இருந்தார் மந்திரி.
தேவியர் வர, வரவேற்பு முடிய அவ்விருவரும் தங்கள் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறினர்.
சபை ஆரம்பிக்கும் போது அவர்கள் சரியான நேரத்திற்கு வரவே மக்கள் துள்ளிக் குதித்து நடனம் ஆடினர்.
வள்ளுவரை அனைவரும் முறைப்படி வணங்கியவுடன் சபை தொடங்கியது.
முதல் கேள்வியே விறுவிறுப்பாக இருந்ததால் மக்கள் அமைதி காத்து சபை நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தனர்.
ஒருவர் எழுந்தார்.
“ஐயனே! வணக்கம். விதியா, மதியா எது வெல்லும்? என் கருத்துப் படி விதி தான் வலியது” என்று கூறினார்.
வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்.
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்”
வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் மக்கள் ஆரவாரிக்க கேள்வி கேட்டவர் அமர்ந்தார்.
ஆனால் புலவர் குழு இரண்டாகப் பிரிந்தது. ஒரு குழு மதியே என்று முழங்க இன்னொரு குழு விதியே என்றது.
வள்ளுவரின் குறளுக்கு பொருளை விரித்துச் சொல்ல மதி என்ற குழுவினருள் ஒருவர் எழுந்தார்.
“ஐயனே! மதி அல்லவா ஜெயிக்கும். சரியாகச் சொன்னீர்கள். விதியே முற்றிலுமாகக் கிடையாது என்பது எனது எண்ணமும் கூடத்தான்! சரிதானே!”
என்றார்.
வள்ளுவர் புன்முறுவல் மாறாது கூறினார்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்
கேட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. மக்களும் திடுக்கிட்டனர். ஊழ் கட்சியின் புலவர் குழாம் ஆரவாரம் செய்தனர்; விதி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.
ஊக்கமுடைய ஒரு வீரன் எழுந்தான்.
ஐயனே! அப்படியானால் முயற்சிக்குப் பலனே இல்லையா?
வள்ளுவர் உடனே முழங்கினார்:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
உடனே அவன் மகிழ்ந்து கூவ, மதி கட்சியைச் சேர்ந்த புலவர் கூழாம் முயற்சி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.
பாண்டியன் எழுந்தான். வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினான்:
“ஐயனே! முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். ஆயின் மற்றொன்று சூழினும் ஊழ் தான் முன்னால் வரும். முன்னால் மட்டும் தான் வருமா? வெற்றியும் பெறுமா? தெளிவு படுத்த வேண்டும். ஊழா, முயற்சியா?”
பாண்டியன் கேள்வியை முடிக்குமுன்னரே வள்ளுவர் கூறினார்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
பாண்டியன் இதன் பொருளுணர்ந்து மகிழ்ந்தான்.
மக்கள் புலவர்களைப் பார்க்க அவர்கள், “கைப்பொருள் வர வேண்டுமெனில் நல்ல ஊழ்வினை காரணமாக – ஆகூழால் – சோர்வில்லாத முயற்சி உண்டாகும். ஆயின் செல்வம் போவதற்குக் காரணமான போகூழ் இருப்பின் சோம்பல் ஏற்படும். முயற்சியே இருக்காது” என்று விளக்கினர்.
விதியே மதியாகும் அதிசயத்தைப் பற்றிப் புலவர் பெருமக்கள் விவாதித்து வள்ளுவரின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதைச் சொல்ல ஆரம்பித்தனர்.
நல்ல வினைகள் நல்ல ஊழைத் தரும். நல்ல விதி முயற்சியைத் தரும் என்று புலவர்கள் விரித்துரைக்க வள்ளுவரை நோக்கி, முயற்சிக்குப் பலனே இல்லையா என்று முதலில் கேட்டவர் எழுந்தார்.
“ஐயனே! என் எண்ணம் பலிக்குமா, பலிக்காதா?” என்று வலியுறுத்திக் கேட்கவே
வள்ளுவர் கூறினார்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
பகீரதன் கதையை புலவர் ஒருவர் கூற முயற்சி வெற்றி தருவதை மக்கள் உணர, இன்னொரு புலவர் நளன் கதையைக் கூற அவன் ஊழின் வசத்தால் துன்பம் அனுபவித்ததை மக்கள் உணர்ந்தனர்.
“ஆக முயற்சி நிச்சயம் வேண்டும்; முயற்சி உள்ளவனுக்கு ஊழ் உறுதுணையாக இருக்கும். ஆகூழ் உள்ளவனுக்கு முயற்சி ஏற்படும். அதில்லாமல் போகூழ் உள்ளவனுக்கு சோம்பலே ஏற்பட்டு அவனை அழித்து விடும்.” – என இப்படி புலவர்கள் விவாதிக்க பாண்டியன் எழுந்து வள்ளுவரை நோக்கி, “முடிந்த முடிபாக தாங்கள் அருளுவது என்ன?” என்று வினயத்துடன் கேட்டான்.
வள்ளுவர் மென்மையாகக் கூறினார்:
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”
“ஆஹா! அவரவரே தம்மை மதிப்பீடு செய்து கொள்ளலாம். கட்டளைக் கல்! ஆஹா! கர்மமே கட்டளைக் கல். அவரவர் வினைப் படி அவரவர் தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர்! ஊழையையும் முயற்சியையும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது” என்று பாண்டியன் கூறவே அறிஞர்கள்,
“எந்த ஒருவனும் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளலாம்” என்று முடிவு கூறினர்.
முப்பெரும் தேவியரும் இந்த அறிவு சால் விவாதங்களைக் கேட்டுப் பிரமித்தனர்.
ஒருவர் எழுந்தார்.
“ஐயனே! இப்படி விளக்கிக் கூறும் தாங்கள் எதைச் செய்யக் கூடாது என்பதையும் சொல்லி அருளுங்கள்” என்று வேண்டினார்.
வள்ளுவர் கூறினார்:
“எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று”
மற்றவர் வருந்தும் காரியங்களை ஒரு போதும் செய்யாதீர்கள்; ஒரு வேளை தவறி ஒரு முறை செய்து விட்டால் அதை மீண்டும் செய்யவே வேண்டாம்.
அடடா! என்ன கருணையுடன் இப்படி ஒரு வாழ்வியல் ரகசியத்தை எளிதாகக் கூறுகிறார் என அனைவரும் மகிழ்ந்த போது வள்ளுவர் தொடர்ந்தார்:
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினுச் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”.
தாய் பசியினால் வாடித் துடித்தாலும் சான்றோர் செய்யக் கூடாது என்று சொல்லிய செயல்களை ஒரு போதும் செய்யாதீர்கள்!
அற நூல்கள் செய்யக் கூடாதவை என்று சொல்லி இருக்கும் செயல்களை ஒவ்வொரு புலவரும் விளக்க ஆரம்பித்தார்.
வள்ளுவர் இன்னும் கூறினார்:
“இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து”.
வறியவன் என்று தீயவனவற்றைச் செய்யாதே; செய்தால் இலனாகவே ஆகி விடுவாய் – புலவர்கள் அப்படித் தீயவை செய்பவன் எதை எதை இழப்பான் எனப் பட்டியலிட்டு முடிக்க வள்ளுவர் தொடர்ந்தார்:
“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்”.
தனக்கு தீமையானவை வரக்கூடாது என்று எண்ணும் ஒருவன் பிறருக்குத் தீயன செய்யக் கூடாது. – வள்ளுவர் வலியுறுத்தலை அனைவரும் புரிந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தார்:
“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை”.
எந்த உயிரையும் கொல்லாதே – தானே சாக வேண்டிய சூழ்நிலையிலும் கூட – வள்ளுவர் கூறிய கொல்லாமை அறத்தை அனைவரும் புரிந்து கொண்ட போது அவர் மந்திரியையும் மன்னனையும் பார்த்துக் கூறினார்:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை
மறைவாக ஒற்றன் தரும் செய்தியைக் கேட்டவுடன் அவனுக்கு அனைவருக்கும் தெரியும் படி பரிசைத் தர வேண்டாம்; செய்தால் அவன் கொண்டு வந்த இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியதாகும்.
ஒற்றர்கள் புன்முறுவல் பூத்தனர். ஏன் அரசன் ஊரார் அறியத் தம்மைப் புகழ்ந்து அனைவருக்கும் எதிரே பரிசு தருவதில்லை என்பதை அவர்கள் இன்று காரணத்துடன் தெரிந்து கொண்டனர்.
செய்யற்க என்று வள்ளுவர் கூறிய அறவுரைகளை ஓலையில் எழுதிக் கொண்டனர் பலரும்.
மாலை நெருங்கியது. மக்கள் மனமகிழ்ச்சியுடன் வீடு செல்ல ஆயத்தமாயினர்.
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590
TAGS– நூறு கேள்விகள்! – 5