
Written by Santanam Srinivasan (brother of
London swaminathan)
Date: 6 December 2018
GMT Time uploaded in London – 7-29 am
Post No. 5743
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
(English version of this article is posted already)
சென்னையிருந்து பிரிட்டனிலுள்ள மாஞ்செஸ்டருக்குச் சென்றேன். அங்கிருந்து அயர்லாந்தின் தலைநகரான டப்ளினுக்குச் சென்றேன். அயர்லாந்தின் வடக்குப் புகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது. அங்கு ஸிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) பிறந்த ஊருக்கு என்னையும் என் மனைவியையும் நண்பர் அழைத்துச் சென்றார். அயர்லாந்து நாட்டிலிருந்து பிரிட்ட்ஷ் ஆட்சியின் கீழுள்ள வட அயர்லாந்தில் தங்கு தடையின்றி நுழைந்தோம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லுவதால் எல்லைச் சாவடி, சுங்கச் சாவடி தடைகள் இருக்குமோ என்று நினைத்த எனக்கு ஒரு தடையும் மின்றி வீட்டுக்குள் நுழைவது போல நுழைய அனுமதித்தது வியப்பாக இருந்தது.
அந்த ஊரின் பெயர் டங்கனான். அதன் மேயர் அவருக்கே உரித்தான டவாலி, சேனம் முதலியவற்றைப் போட்டுக்கொண்டு, எங்களை வரவேற்றார்.
ஏன்?
இந்தியா என்று சொன்னவுடன் அவ்வளவு மதிப்பு ( அடுத்த பக்கமுள்ளஅயரலாந்தின் தற்போதைய பிரதமர் இந்திய வம்சாவளியினர் என்பதும் நினைவுகூறத் தக்கதே.)

சகோதரி பிறந்த அகத்தைப் பார்க்க வந்தோம் என்று சொன்னவுடன் உதவியாளரை அழைத்து இவர்களை அனைத்து இடங்களையும் சுற்றிக் காண்பியுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டார். அவரும் எங்களை அழைத்துச் சென்றார்.
நாங்கள் சந்தித்த டங்கனான் நகர மேயரின் பெயர் ஸ்யான் மக்பீக். (Sean McPake, Mayor of Dungannon) அவர் தனது வீரப் பிரதாபங்களையும் அவிழ்த்துவிட்டார். அரசியல்வாதிதானே! நகரின் பெருமையை எடுத்துரைத்தார்.
ஆயினும் ஸிஸ்டர் நிவேதிதா பிறந்த இடத்துக்குப் போனபோது பெரிய மருந்துக் கடைதான் அந்த இடத்தை ஆக்ரமித்து இருந்தது. போர்டு கூட அவர் வசித்த ‘வீதி’ என்றே சொன்னது. சிறிது ஏமாற்றமே.
( நம்மூர் அரசியல்வாதிகள் போல இடத்தை ‘ஆட்டை’யைப் போட்டுவிட்டார்களோ என்ற ஸம்ஸயம்! )
அந்த இடத்தின் கதை பற்றி சொல்லுகையில் ராமகிருஷ்ணா மடத்துச் சாமியார்ஒருவர் வந்து அதைத் திறந்து வைத்ததாகவும் அந்த இடத்தைப் புதுக்குவதில அவர்களுக்கு ஆர்வமுளதுஎன்பதையும் அறிந்தோம்.

அதெல்லாம் சரி. யார் அந்த ஸிஸ்டர் நிவேதிதா என்று வினவும் அப்’பாவி’களுக்கு விக்கி பீடியாவில் நிறைய தகவல் உள்ளது என்று விடை தருவேன்.
சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிஸபெத் நோபிள்.
அவர் பிறந்த தேதி- 28 அக்டோபர் 1867
சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யை
அவர் இறந்த தேதி – 13 அக்டோபர் 1911
இறந்த இடம்- டார்ஜீலிங்
25 மார்ச் 1898-ல் அவருக்கு சகோதரி நிவேதிதா என்ற பெயரை, விவேகாநந்தர் நாமகரணம் செய்தார்.
மெத்தப் படித்த அவருக்கு, ஆன்மீக தாகம் எடுத்தது. கிறிஸ்தவ மதத்தில்விடை கிடைக்கவில்லை புத்தசமய நூல்களில் மூழ்கித் திளைத்தார். அவ்வமயம், அமெரிக்காவில்இந்து மதக் கொடியைப் பறக்கவிட்டு புகழ் எய்திய சுவாமி விவேகாநந்தர் லண்டனில் மூன்றுமாதம் தங்கிச் சொற்பொழிவு ஆற்றினார். மார்கரெட் நோபிள் கேட்ட சந்தேகங்களுக்கு விடைபகர்ந்தார். சூரியனைக் கண்ட பனி போல அவர் ஐயம் அகன்று தெளிந்தார். இந்தியாவுக்கு வந்தவுடனஅவருக்கு பிரம்மசர்ய விரதம் அளித்து நிவேதிதா என்ற பெயரை சுவாமிஜி அளித்தார்.


இந்தியாவில் பெண்களுக்கு கல்வி புகட்டி அவர்களை முன்னேற்றுங்கள்என்று சுவாமிஜி இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு செவ்வனே பணியாற்றினார். ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் துணைவியார் அன்னை சாரதா தேவிக்கு நெருக்கமானவர்.
சிறந்த பேச்சாளர்; பெரிய எழுத்தாளர்; பல நூல்களின் படைப்பாளி; சிறந்த சமூக சேவகி. கல்கத்தாவில் பிளேக் நோய்கண்டவர்களுக்கு அச்சமின்றி உதவி செய்தார். காந்திஜி, பாரதியார் போன்றோர் நிவேதியைச் சந்தித்து அளவளாவினர். தேசபக்தக் கனல்பறக்கும் உரையாற்றி இந்திய சுதந்திரப் பயிரில் நீர் பாய்ச்சினார். அவர் கல்வியாளர் என்பதால் பல பள்ளிகளை நிறுவினார். பெண் உரிமைக்குப் போராடியதால் பாரதியார் போன்றோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அந்தப் புனித மாது பிறந்த இடத்தில் நடந்தது நீங்காத நினைவாக நிலைத்து நிற்கும்.
கட்டுரை எழுதிய சந்தானம் சீனிவாசன் சென்னைக்குத் திரும்பிவிட்டார்.
–சுபம்–