
Written by S Nagarajan
Date: 13 DECEMBER 2018
GMT Time uploaded in London –6- 49 am
Post No. 5774
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதி இயல்
ச.நாகராஜன்
இனி பாஞ்சாலி சபதம் மற்றும் குயில் பாட்டு ஆகிய கவிதைச் சிகரங்களில் பாரதி கூறிய வானவியல் பற்றிய பாடல்களைக் காண்போம்:
பாஞ்சாலி சபதம்
‘பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ!கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தொன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவதே முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி நவப்பையெலாம் சேரக் காண்பாய். 148
‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149
‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150
அமைதியடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே
உரைத்திடுவோம்,”பல்லாண்டு வாழ்க!”என்றே. 151
வேறு
‘பார்;சுடர்ப்பிரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன?ஓகோ!
என்னடி!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்,
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்!’ 152
*

பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாட்டு 148-7,8அடிகளுக்கு பாரதியின் விளக்கம்:-
சீரடியார் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ் சோதி – சீர்களும் அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேத ரிஷிகள் போற்றிய ஞாயிறு
இங்கு சூர்யாஸ்தமய வர்ணனை கூறப்படுகிறது. இப்பாடல்களின் கருத்து நன்கு விளங்கும் பொருட்டு நமது ‘கர்மயோகிப்’ பத்திரிகையிலே இவ்விஷயத்தைப் பற்றி எழுதியுள்ள உபந்யாஸமொன்றை இங்கு தருகின்றோம்.
ஸூர்யாஸ்தமயம்
உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதெற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசியங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போவதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணம் இருந்த தோற்றம் அடுத்த க்ஷணம் இருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும் அது சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே நாம் பொருட்செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்கு கூடக் காணாது. வாணவேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவ்னது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதையே பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள். ஸஹோதரா! ஸூர்யாஸ்தமயத்தின் விநோதங்களைச் சென்று பார். ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்ற குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.
நமது நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்தமெய்தியவர்களாய்ப் பல அதிசியமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாஸன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலே தான் இந்த துரதிர்ஷ்ட நிலை கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லோரும் கவிகளென்று சொல்லி வெளி வருகிறார்கள்.
ஸூர்யாஸ்தமயத்தின் அற்புத சௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை. (நேரிலே கொண்டு காட்டினாலும் பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவது தான் அர்த்தமாகுமேயல்லாமல் விஷயம் தெரியாது.) ஸஹோதரா! நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு தான் உனக்கு அந்தத் தெய்வக் காட்சி சிறிது சிறிதாக விளங்கும். ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமயத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்று இருந்தது போல இன்றைக்கு இராது. இன்று இருப்பது போல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புக்கள். வெவ்வேறு உலகங்கள். வெவ்வேறு மஹிமைகள். வெவ்வேறு கனவுகள். வெவ்வேறு ஆனந்தங்கள். வெவ்வேறு அநிர்வசனீயங்கள்.
சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதில் நான் கண்ட அதிசியங்களை ஒருவாறு இங்குக் குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் ஸூர்ய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலே தான் கண்கூசும். சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய் விடும். இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழே இருப்பது சுத்தமான மின்வட்டம். மேலே இருப்பது மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை.
பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கு மின் தகட்டை முழுவதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக் கிரணங்கள் கண்மீது பாயும்.
பார்! ஸுர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புக்கள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சியிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!

நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை விதக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக்கரைப் போட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள்! மிதக்கும் செங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம்.போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது.
*
குயில் பாட்டு
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். … 30
தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி … 35
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி … 40
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
நான் முகனே! … 75
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்? … 80
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் … 85
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
*
இதுவரை கூறிய பாடல் பகுதிகளால் பாரதியார் வானக் காட்சிகள் மீது கொண்ட மோகத்தைப் பார்க்கிறோம்.
வானக் காட்சிகளைத் தமிழர் கவனிப்பது கிடையாது என்று அவர் அங்கலாய்க்கிறார்.
சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், தாரகைக் கூட்டம், அண்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் வியப்புடன் பார்க்கிறார்; அதன் உண்மை தெளிகிறார்; நமக்குப் புலப்படுத்துகிறார்.
இன்னும் வசன கவிதையிலும் உரை நடைப் பகுதிகளிலும் அவர் ஞாயிறு, நட்சத்திரம், நிலா ஆகியவை பற்றிக் கூறியவை ஏராளம் உள்ளன.
அவற்றையும் சேர்த்துப் படித்தால் வானவியல் கவிஞன் பாரதி என்று ஒரு புதிய பரிமாணத்தை மஹாகவி பாரதியாரில் நாம் காண முடியும்.
பாரதியைக் கற்றால் வானவியலையும் கற்றது போலத் தான் என்று கூறி இந்தக் குறுந்தொடரை முடிக்கிறேன்.
வாழ்க பாரதி நாமம்; வாழ்க அறிவியல்!
****