அழகிகளைக் கொன்ற ரேடியம் (Post No.5806)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 December 2018
GMT Time uploaded in London – 11-15 am
Post No. 5806


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வீடு கட்ட செங்கற்கள் தேவை. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க மூலகங்கள் தேவை. நாம் இது வரை கண்டறிந்த மூலகங்கள் 118. அவற்றில் ப்ளுட்டோனியம், தோரியம் முதலிய கதிரியக்க மூலகங்களின் கதைகளை சொன்னேன். இன்று நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி க்யூரியையும், நமக்கு ரேடியம் (Radium) டயல் (Dial) கொண்ட ஒளிவீசும் கடிகரங்களை செய்து கொடுத்த  அழகிகளையும் கொன்ற ரேடியத்தின் கதையைச் சொல்வேன்.

1898-ம் ஆண்டில், மேரி க்யூரியும் மற்றொரு விஞ்ஞானியும் கணவருமான பியர் க்யூரியும் (Marie Curie, Pierre Curie) ரேடியத்தைக் கண்டுபிடித்தனர்.

உலகில் முதலில்  நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி–மேரி க்யூரி

உலகில் இரு முறை நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி– மேரி க்யூரி

உலகில கணவருடன் நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி—   மேரி க்யூரி

ரேடியம், கதிரியக்கம் உள்ள வெள்ளி நிற உலோகம். யுரேனியமும், தோரியமும் இயற்கையில்  தேய்ந்து  போகும் போது ரேடியம் உருவாகிறது. பூமியே ஒரு கதிரியக்கம் உள்ள கிரஹம்தான். அதற்குக் காரணம் இந்த ரேடியமும்தான்.

அந்தக் காலத்தில் ரேடியத்தின் ஒளிவீசும் தன்மையக்   கண்டோர் இதை கடிகாரத்தின் நேரம் காட்டும் டயலில் பூசினர். அது இரவில் ஒளி வீசி மணியைக் காட்டியது. இதன் ஆபத்தை அறியாதோர் புற்று நோயில் இறந்தனர். இளம் பெண்களே பெரும்பாலும் இந்தக் கடிகாரத் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கடிகார டயலில் ரேடிய உப்புக் கலவையைப் பூசுகையில் நல்ல கூர்மையாக வர்ணம் பூசுவதற்காக அவ்வப்பொழுது தூரிகையை– பிரஷை–நாக்கில் தடவிகொண்டு வர்ணம் பூசினர். அவர்கள் அனைவரும் பிற்காலத்தில் புற்று நோய் முதலிய நோய்களால் இறந்தனர்.

1900-முதல் 1930 வரை மருத்துவ உலகில் ஒரே பரபரப்பு. ரேடியம் தான் சகல நோக நிவாரணி என்று பிரச்சாரம். பல வகைப் புதிய கருவிகள் மார்க்கெட்டுக்கு வந்தன. உண்மையில் புற்று நோயைக் குணப்படுத்தவும் ரேடியம் ஊசிகள் பயன்படுதப்பட்டன. ஆனால  அதைச் செய்தோருக்குப்  புற்று நோய் வந்து இறந்தனர்!

ரேடியம் வாங்கக் காசு பணம் இல்லையா? இதோ எங்கள் பிளாஸ்கை (Flask) வாங்குங்கள்; அதில் இரவு முழுதும் தண்ணீரை ஊற்றி வைத்து அதைக் காலையில் பருகுங்கள்! அடடா என்ன சுகம், என்ன சுகம்! என்றெல்லாம் விளம்பரம்! அப்படிக் குடித்து வந்த சில ஆண்டுகளில் அவர்கள் அனைவரும் மேல் உலகம் சென்றனர். மூட்டு வலியா, மணக்  கோளாறா? இதோ ரேடியம் சிகிச்சை என்றெல்லாம்   போலி மருத்துவர்களின்  விளம்பரங்கள் வேறு!

இவ்வாறு தண்ணீர் குடித்து வந்த ஒரு தொழிலதிபர், அமெரிக்காவில் நாலே  ஆண்டுகளில் இறந்தவுடன், அது பெரிய செய்தியாகி ரேடிய சிகிச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

ஒளி வீசிய பெண்கள்!

ரேடியம் தொழிற்சாலைகளில் வேலை செய்ததால், புற்று நோய் கண்ட பெண்மணிகள் ‘யு.எஸ். ரேடியம்’ என்ற கம்பெனி மீது வழக்குப் போட்டனர். அவர்களை உலகம் ரேடியம் பெண்கள் Radium Girls என்று அழைத்தன. ஆனால், அந்தக் கம்பெனியும், ( இந்தியாவின் போபால் விஷ வாயு வழக்கு போல), அந்த வழக்கையே தடுக்க பல விஷமத்தனங்களை செய்தது. இறுதியில் கோர்ட்டுக்கு வெளியே ஆளுக்கு 10,000 டாலர் கொடுத்து வழக்கையே இல்லாமற் செய்தனர். ஏமாந்து பணம் வாங்கிய அழகிகள் அனைவரும் சில ஆண்டுகளுக்குள் புற்று நோயால் செத்து மடிந்தனர்.

பெரிய    கம்பெனிகளுக்குத் தெரியும்; வழக்கைத் தாக்காட்டினால்,வழக்குப் போட்டவர்கள் அனைவரும் சில ஆண்டுகளில் செத்துப் போய் வழக்கே பிசுபிசுத்துவிடும் என்று.

ரேடியம் பெண்மணிகளின் முகம், கை, தலை முடியெல்லாம் இரவு நேரத்தில் ஒளியை உமிழ்ந்தன. அந்த அளவுக்கு அவர்களுடைய உடம்பில் கதிரியக்கம் ஏறி விட்டது!

இப்படிப் பல நூறு மனிதர்களின் உயிரைப் பலி வாங்கிய ரேடியம் 1930-க்குப் பின்னர் பாதுகாப்போடு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இன்றும் ஒளி வீசும் ரேடியம் பெயிண்டுகள், கடிகார டயல்கள் உண்டு. ஆனாலவை எல்லாம் ஆபத்தானவை அல்ல. அதைச் செய்வோரும் பாதுகாப்பு அறையில் செய்வர்   .அதை அணிவோருக்கும் கதிரியக்கம் வராதபடி கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும். மருத்துவத் துறை, பெயிண்ட் துறை ஒளிரும் பொருள்களைச் (Luminous)  செய்யும் துறைகளில் ரேடியம் பயன்படுத்தப் படுகிறது.

இரசாயன குணங்கள்

ரேடியத்தின் குறியீடு – Ra ஆர் ஏ

அணு எண் -88

கொதி நிலை—1400 C

உருகு நிலை—700 C

ரேடிய ஆராய்ச்சியில் இறங்கிய மேரி க்யூரியும் ரேடிய அதிசயம், பற்றி விளம்பியுள்ளார்

“இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நாங்கள்  அனைவரும் சோதனைச் சாலைக்குள் நுழைந்து இரவில் இருட்டில் எங்கள் குடுவைகளை நோக்குவோம். அப்பொழுது அவை நீல நிற ஒளியைக் கசிந்து இருப்பது எங்களுக்கு அதிசயமாக இருக்கும். அதை நாங்கள் இரவு நேர தேவதைகள் போலக் காண்போம். அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது”.

இந்த இரவு நேர தேவதைதான் பின்னர் அனைவரையும் சொர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது!

TAGS– மேரி க்யூரி, ரேடியம்,நோபல்  பரிசு, ஒளி வீசிய பெண்கள்!

–subham–

Leave a comment

Leave a comment