தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி! (Post No.6316)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 27 April 2019


British Summer Time uploaded in London – 12-19

Post No. 6316

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

ச.நாகராஜன்

மஹா புருஷர்கள் மஹா புருஷர்கள் தான்! உயர்ந்த மனிதர்கள் உயர்ந்த மனிதர்கள் தான்!

இதை விளக்கும் ஒரு சம்பவம் பாரதத்தின் முதலாவது ராஷ்டிரபதி பாபு ராஜேந்திரபிரசாத் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அவர் கண்ட மஹா புருஷர்  ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்  ஆவார்.

1954ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம். சிருங்கேரிக்கு மஹாஸ்வாமிகளை தரிசிக்க சிருங்கேரி வந்தார் பாபு ராஜேந்திர பிரசாத்.

அவருக்காக பலத்த வரவேற்பு ஏற்பாடாகி இருந்தது.

மஹாஸ்வாமிகளின் அந்தரங்க காரியதரிசியாக இருந்த ஸ்ரீ  ஜி.எஸ்.நரசிம்மய்யா ராஷ்டிரபதியின் வருகையையொட்டி அவர் வருவதற்கு முதல் நாள் பிற்பகலில் மடத்தில் இருந்த வெள்ளிப் பல்லக்கை எடுத்து வெளியில் வைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆசார்யர் சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருந்தார். விரதத்திற்காக அவர் சந்திரமௌலி தொட்டி என்ற கட்டிடத்தில் தங்கி இருந்தார். வெள்ளிப் பல்லக்கு சுத்தப்படுத்தப்படும் போது அந்தக் கட்டிடத்தில் உள்ள இரு கூடங்களை இணைக்கும் பாதை வழியாக ஆசார்யர் வந்தார். சுவர் வழியே இருந்த ஜன்னல் வழியாக வெள்ளிப் பல்லக்கு சுத்தம் செய்யப்படுவதைக் கண்டு நரசிம்மய்யாவிடம் விஷயம் என்ன என்று விசாரித்தார்.

பல்லக்கு ராஷ்டிரபதிக்காகத் தயார் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்ட அவர் ராஜேந்திர பிரசாத்தைப் பற்றி விசாரித்தார்.

அவரது உயர் குணங்கள் அவரை ஈர்த்தன.தேசத்திற்காக அவர் செய்த தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நரசிம்மய்யா ஒரு சில நிமிடங்களில் விவரித்து விட்டார். உடனே ஆசார்யர், ‘அவர் அப்படிப்பட்டவர் என்றால் அவரைத் தங்கப் பல்லக்கிலேயே அழைத்து வரலாமே’ என்றார்.

ஆசார்யரின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொண்ட நரசிம்மய்யா உடனே தங்கப் பல்லக்கை ஏற்பாடு செய்து விட்டார்.

ராஷ்டிரபதி தனது காரில் வந்து இறங்கினார்.

அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உள்ளூர்ப் பிரமுகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் தங்கப் பல்லக்கு காரின் அருகில் கொண்டு வரப்பட்டது.

அதில் ஏறி அமருமாறு ராஜேந்திர பிரசாத் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பல்லக்கைப் பார்த்த ராஜேந்திர பிரசாத் தயங்கினார். அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

அது ஜகத்குரு மட்டுமே பவனி வரும் பல்லக்கு என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

தன்னைச் சுட்டிக் காட்டி, “அது அப்படி இருக்கும் போது என்னை அதில் ஏறச் சொல்கிறீர்களே” என்று கூறி பல்லக்கில் ஏற மறுத்து விட்டார்.

காரிலேயே சென்றார். பல்லக்கு எனக்கு முன்னால் போகட்டும் என்றார் அவர்.

அவர் தங்குமிடம் சந்திரமௌலி தொட்டியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“இங்கு யார் தங்குவது வழக்கம்?” என்றார் ராஜேந்திர பிரசாத்.

சாதுர்மாஸ்ய விரதத்திற்காக ஜகத்குரு அவர்களே இங்கு வந்து பின்னால் உள்ள ஒரு அறையில் தங்கி இருக்கிறார் என்று பதில் வந்தது.

இதைக் கேட்டுத் திகைத்துப் போனார் அவர்.

ஜகத்குரு தங்குமிடத்தில் தன்னைப் போன்ற “சாமானியன்” தங்கலாமா என எண்ணினார் போலும்!

“இந்தப் புனிதமான கட்டிடத்தில் நான் எப்படி சாப்பிடவோ தூங்கவோ முடியும், அது பெரும் அபசாரம் அல்லவா, என்னால் முடியாது” என்று பரபரப்புடன் சொல்லி விட்டார் அவர்.

அவரை அனைவரும் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.

அவர் அங்கு தங்குவது தான் ஜகத்குருவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று முத்தாய்ப்பாக அவர்கள் கூறியவுடன் அதை ஏற்று அங்கேயே தங்கினார் அவர்.

விசேஷ அர்ச்சனை நடந்தது. இரு முறை இரு ஜகத்குருக்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் அவருக்குக் கிடைத்தது.

பெரும் மகிழ்ச்சியுற்றார் அவர்.

நான் முன்பே இங்கு வந்திருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார் அவர்.

மகத்தான ஆசார்யர்களை உயர்ந்த மனிதர்கள் சந்திக்கும் போது ஏற்படும் வெளிப்பாடுகள் பார்ப்பவரைப் பரவசமாக்குகின்றன!

***

ஆதாரம் : ஸ்ரீ  ஜி.எஸ்.நரசிம்மய்யா எழுதியுள்ள கட்டுரை-

இடம் பெற்ற நூல் :- 

ஸ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம், 333 பக்கங்கள், விலை ரூ 150/ வெளியிட்டோர் : ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட். கிடைக்குமிடம் : ஸ்ரீ சிருங்கேரி மடம், சிருங்கேரி.

***

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    பாபு ராஜேந்த்ர பிரசாத் தங்கமான மனிதர். அவரது உயர்ந்த குணங்கள் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். ஒரு சமயம் காந்திஜியின் சொற்படி பிரசாத், ஜம்னாலால் பஜாஜ் ஆகியோர் ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு வந்தனர். அங்கு தங்கியிருந்த நாட்களில் பிரசாத் அவர்கள் ரமணர் சன்னிதியில் வாயே திறக்கவில்லை! பஜாஜ்தான் ‘தேசத்திற்காகப் பாடுபடும் இத்தகையவர் ஏன் ஆஸ்துமா போன்ற வியாதியால் துன்பப்படுகிறார் ” என தன் ஆதங்கத்தை வெளியிட்டார். பகவான் ரமணர் வழக்கம்போல மவுனம் காத்து அருள் அலையை வழங்கினார்.
    அவர் ஜனாதிபதியாக இருந்தபோது சோமநாத் கோவில் புதுப்பிக்கப்பட்டு விசேஷ வைபவங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொள்ள அவர் வருவதாக இருந்தது. ஒரு செக்யூலர் அரசின் ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளக் கூடாது என பிரதமர் நேரு ஆக்ஷேபித்தார். அதைப் புறக்கணித்து பிரசாத் விழாவில் கலந்துகொண்டார். ஹிந்துமத விஷயங்களில் நேரு அரசு குறுக்கிடுவது பிரசாதிற்குச் சம்மதமில்லை. இது பற்றி பிராசாத்-நேருவிடையே கடிதப் பரிவர்த்தனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் ஜனாதிபதி வெறும் பெயரளவில்தானா, அல்லது அப்பதவிக்கு உண்மையிலேயே அதிகாரங்கள் இருக்கின்றனவா என்பதை அரசியல் சட்ட வல்லுனர்கள் ஆராயவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இது நேருவுக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரத்திற்குப்பின் சர்தார் படேலுடனும் , பாபு ராஜேந்திரப் பிரசாதுடனும் நேருவின் உறவு சுமுகமாக இருந்ததில்லை.

    ஒரு சமயம் சென்னையிலிருந்து மாதர் சங்கக் குழு ஒன்று ஜனாதிபதியைச் சந்திக்க டெல்லி சென்றது. அவர்கள் ஜனாதிபதி பிரசாதை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அவருக்கு நமஸ்காரம் செய்ய முற்பட்டனர். ஆனால் பிரசாத் அவர்கள் உடன்படவில்லை. “உங்களில் பலர் பிராமணர்கள். வயதானவர்கள். நான் பிராமணன் இல்லை. நீங்கள் எனக்கு தரையில் விழுந்து நமஸ்காரம் செய்வது சரியில்லை” என்று சொல்லிவிட்டார்.! இதை அந்தக் குழுவில் சென்ற ஒருவரே பின்னர் “கலைமகள்’ பத்திரிகையில் எழுதினார்.

    பிரசாத் தங்கப் பல்லக்கில் ஏறாவிட்டால் என்ன! அவர் ஜனாதிபதியாக இருந்தகாலமே பொற்காலம்தான்! பதவிக்காலம் முடிந்தபின் அமைதியாக அவர் பொதுவாழ்வில் ஈடுபடத்தொடங்கிய போது பணிசெய்த “சதாகத்” ஆசிரமத்திற்கே திரும்பிச்சென்றார். இத்தகைய உயர்ந்த மனிதர்களை இனிப் பொதுவாழ்வில் காண்போமா என்று இருக்கிறது.

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  April 28, 2019

    பல அரிய விஷயங்கள்!! அருமை! பதிவிற்கு நன்றி! சோமநாதர் ஆலயத்தை எப்படி சர்தார் படே ல் புதுப்பித்தார். அங்கு கடலில் மண்ணை இரைத்து இதைப் புதுப்பிப்பேன் என சபதம் செய்தார். நேரு அரசின் சார்பில் செய்யக் கூடாது என பலத்த ஆட்சேபம் தெரிவித்தார். உடனே சொந்தப் பொறுப்பில் அதைச் செய்தார் படேல். முன்ஷி, படேல் ஆகியோரது கடிதங்கள், வரலாறு முழுதுமாக வெளிவரவில்லை அல்லது வந்திருந்தாலும் பிரபலமாகவில்லை. பல விஷயங்கள் பாக்கி இருக்கின்றன – எழுதுவதற்கு. விடாது தொடர்வோம் நம் பணியை.
    மீண்டும் நன்றி அன்பன் ச.நாகராஜன்

Leave a comment