காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள் (Post No..6414)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 20 May 2019

British Summer Time uploaded in London – 6-51 am

Post No. 6414

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மே,2019 ஞான ஆலயம் இதழில் வெளியாகியுள்ள இரண்டாவது கட்டுரை!

பாரதீய விஞ்ஞானத்தின் பன்முகப் பரிமாணங்கள்! – இங்கு இல்லாதது எங்கும் இல்லை!

காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள்!

ச.நாகராஜன்

புற ஆராய்ச்சிகளால் மேலை நாட்டினர் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உள்ளுணர்வால் ரிஷிகளின்  அகத்தில் தோன்றும் பாரதீய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.

ஒரு கண்டுபிடிப்பை இன்னொரு கண்டுபிடிப்பு நிராகரிப்பது மேலை நாட்டு விஞ்ஞானம். ஆனால் சத்தியத்தின் அடிப்படையில் நித்தியமாக என்றும் உள்ள உண்மைகளைக் கண்டுபிடிப்பது பாரதீய விஞ்ஞானம்.

சுமார் நான்கு லட்சம் சம்ஸ்கிருத சுவடிகளும் ஏராளமான தமிழ்ச் சுவடிகளும் திறக்கப்படாமல் அப்படியே உள்ளன.

ஆனால் ஆங்காங்கே மிக அரிதாக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தும் போது அவர்கள் தரும் அற்புதமான தகவல்களை அறிந்து வியக்கிறோம்.

எடுத்துக்காட்டாக இரண்டே இரண்டு ஆய்வுகளை மற்றும் இங்கே குறிப்பிடலாம்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான திருமதி கா.சத்தியபாமா தமிழ்ச்சுவடிகளை ஆராய்ந்து மாயச்சதுரம் அமைக்கும் முறைகளைச் சுவடிகள் கூறுவதைக் கண்டு வியந்து அதை விளக்கியுள்ளார்.

சம்ஸ்கிருத நூலான பீஜ பல்லவா என்பது கிருஷ்ண தைவக்ஞரால் இயற்றப்பட்டது. இது அல்ஜீப்ரா பற்றிய அழகான நூல். இதை ஆய்வு செய்து டாக்டர் சீதா சுந்தர் ராம், “பீஜபல்லவா ஆஃப் க்ருஷ்ண தைவக்ஞா – அல்ஜீப்ரா இன் ஸிக்ஸ்டீந்த் செஞ்சுரி இந்தியா – எ க்ரிடிகல் ஸ்டடி!”(Bijapallava of Krsna Daivajna – Algebra In Sixteenth Century India – A Critical Study by Dr Sita Sundar Ram) என்ற நூலை எழுதியுள்ளார்.

(287 பக்கம் உள்ள இந்த நூலை 2012ஆம் ஆண்டு ‘தி குப்புசாமி சாஸ்திரி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’,மைலாப்பூர், சென்னை – 600004 வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ 400/).

எண்ணி எண்ணி வியக்கிறோம் – எப்படி பழைய காலத்திலேயே இப்படி அரிதான விஷயங்களை பாரதீய விஞ்ஞானிகள் அல்லது ரிஷிகள் அல்லது அறிஞர்கள் எழுதியுள்ளனர் என்று! (ஏற்கனவே இது பற்றிக் கட்டுரைகளை எழுதி விட்டதால் இவர்களைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை)

இந்த வகையில் நம் கவனத்தைக் கவர்பவர் மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய சாஸ்திரி. இவரது வாழ்க்கை வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று. இவரது அறிவோ நம்மைத் திகைக்க வைக்கிறது.

இளம் வயதில் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தவர் ஸ்ரீ சாஸ்திரிகள். ஒரு விதமான தோல் பற்றிய நோய் அவரைத் தாக்கவே அவர் கடும் துன்பமடைந்தார். ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் தாகம் அதிகரிக்கவே நீர் அருந்த ஒரு குளத்திற்குச் சென்றவர் அதில் வீழ்ந்து விட்டார். அப்போது தான் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஒரு குகையில் தான் இருப்பதை அவர் கண்டார். அங்கு ஒரு மகான் அவர் மீது கருணை மிகக் கொண்டு அவரது நோயைத் தீர்த்து வைத்தார்.

அத்துடன் பல சாஸ்திரங்களை அவருக்கு உபதேசித்தார். அற்புதமான அந்த ஆற்றலைப் பெற்ற சாஸ்திரி அதை மக்களுக்கு விளக்க ஆரம்பித்தார். பரத்வாஜ ரிஷி அருளிய விமான சாஸ்திரம், சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய கிரணங்களின் ஆற்றலை விளக்கும் அம்சுபோதினி உள்ளிட்டவற்றை பெங்களூரில் உள்ள வெங்கடாசல சர்மாவிடம் கூற அவர் அதை எழுதிக் கொண்டு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய சாஸ்திரிகளைப் பற்றி பிரபல ஜோதிடர் திரு பி.வி.ராமனின் பாட்டனாரான. பி.சூரியநாராயண ராவ் (1856-1937) அவருடனான தனது சுவையான பிரமிக்க வைக்கும் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஸ்ரீ சுப்பராய சாஸ்திரிகள் விளக்கியுள்ள சாஸ்திரங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டும் இங்கே பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இதில் அகர முதலான எழுத்துக்கள், எண்கள், இலக்கணங்கள், மொழியின் வடிவம், அடையாளங்கள், குறியீடுகள் உள்ளிட்டவை – 14 லோகங்களிலும் உள்ளவை -விளக்கப்பட்டுள்ளன.

லிகித சாஸ்திரம் : எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவதென்று விளக்கும் சாஸ்திரம் இது.

கணித சாஸ்திரம் : அனைத்து லோகங்களிலும் இன்று நிலவி வரும் கணிதத்தின் பல்வேறு விஷயங்களைத் தரும் இந்த சாஸ்திரத்தில் 18 சாஸ்திரங்கள் உள்ளன.

ஜோதிட சாஸ்திரம் : 64 விதமான ஜோதிட மற்றும் வானவியல் இரகசியங்களை விளக்கும் அபூர்வ சாஸ்திரம் இது.

நிருக்த சாஸ்திரம் : வேத வியாக்யானங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு வகை சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரங்களும் இதில் அடக்கம்.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்கள் அடங்கியுள்ளன. பூர்வ பக்ஷம், வேதாந்தம் ஆகியவற்றை விமரிசித்து விவாதித்து முடிவான முடிவைத் தருபவை இவை.

பட்ட சாஸ்திரம் : இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒத்திருப்பவை.

பிரபாகர சாஸ்திரம் :  மூன்று பிரபாகர சித்தாந்தங்கள் விளக்கப்படும் இதில் நியாய சாஸ்திரங்களும் உள்ளன.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. கதாதரரின் ஐந்து வேதங்கள், வைகானஸ தர்க்கத்தின் 42 வேதங்கள், கௌட தர்க்கத்தின் 60 வேதங்கள் இதில் விளக்கப்படுகின்றன.

வியாகரண சாஸ்திரம் : ஒன்பது வகை இலக்கணங்கள் விளக்கப்படுகின்றன இதில்.பாணிணீயம்,  மஹாவியாகரணம், ஐந்திரம்,சாந்திரம், சகதவாணம், ஸ்போட்டயாணம் முதலியவை பற்றி இதில் காணலாம்.

சப்த சாஸ்திரம் : ஒலியின் நுட்பம் பற்றிய விஞ்ஞானம் இது. ஆறு சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : தர்க்க விஞ்ஞானம். இதில் உள்ள எட்டு சாஸ்திரங்கள்  84 (லாஜிக் எனப்படும்) தர்க்க விவாதங்களை அலசி ஆராய்கின்றன.

மீமாம்ஸ சாஸ்திரம் :  கர்மா எனப்படும் செயல் பற்றியது இது. அதாதோ தர்ம ஜிக்ஞாஸா என ஆரம்பிக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதை இயற்றியவ்ர் ஜைமினி ரிஷி. ஜைமினி மீமாம்ஸை தத்வ தர்ம பிரகரணம், தர்மாபேத அபேதம்,சேஷசேஷீ பாவம், ப்ரயோஜக, ப்ரயோஜிக பாவம், கர்மா, அதிகாரி நிரூபணம்,சமன்யாதிதேசம், விசேபாதிதேசம், ஊஹா,பாதா, தந்திரம், ப்ரஸங்கம் ஆகிய 12 விஷயங்களை விளக்குகிறது. இப்போது புழக்கத்தில் உள்ளது இது தான்.

ஆனால் இது தவிர இன்னும் மூன்று சாஸ்திரங்கள் பிரமிக்க வைக்கும் பல இரகசியங்களை விளக்குபவை.

சந்தஸ் சாஸ்திரம் : கவிதை பற்றியது இது. யதி, (அதாவது எழுத்துக்கள் ஒத்திருக்க வேண்டும், இடையில் நிறுத்தங்கள் சரியானபடி அமைய வேண்டும்) கனம் (அதாவது அளவுடனான சீர்கள் பற்றிய கவிதா இலக்கணம்) மற்றும் பல்வேறு வகை கவிதா வடிவங்கள் பற்றியது இது. இதில் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : அணிகள், மொழியின் அலங்காரங்கள் பற்றியது.உவமான, உவமேயம் உள்ளிட்டவை இதில் விளக்கப்படுகின்றன. இதில் 9 சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம் : இதில் 32 இதிஹாஸங்கள் உள்ளன.

புராணம் : புராணங்கள் 18-இன் ரகசியங்க்ள் விளக்கப்படுகின்றன.

சில்ப சாஸ்திரம் : -சிற்பம், கட்டிடக்கலை பற்றியது இது. 32 சாஸ்திரங்கள் இதில் உள்ளன. 364  வகையான சிற்பங்கள் இதில் விளக்கப்படுகின்றன.

சுப சாஸ்திரம் : உணவு வகைகளைச் சமைக்கும் சமையல் சாஸ்திரம். 116 வகையான உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை இது விளக்குகிறது.

மாலினி சாஸ்திரம் : இரகசியமாக காதல் சங்கேதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்களில் எழுதுவது எப்படி, மாலைகள், பூங்கொத்துகள் வாயிலாக காதல் செய்திகளைப் பரிமாறுவது எப்படி என்பதை இது விளக்குகிறது. இதில் எழுதுவதற்கு விசேஷ தொழில்நுட்பம் தேவை. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.

ஜரிஹர சாஸ்திரம் : போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தயாரிக்கப்படும் அனைத்து உலோகங்கள் பற்றியது இது. வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள்,பீரங்கிகள், வில் அம்புகள் உள்ளிட்ட போர் சாதனங்களை விளக்கும் இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன. நூறாயிரம் விதமாக சுடும் போர்முறைகள் இதில் விளக்கப்படுகின்றன.

பிரளய சாஸ்திரம்: இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் இருக்கும் ஓவ்வொரு உயிரினத்தின் ஆயுள் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது விளக்குகிறது. எப்படி உருமாற்றம் ஏற்படுகிறது, எப்படி இறுதி பிரளயம் ஏற்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் : பொருள்கள் அனைத்தும் எந்தக் காலத்தில் உருவாகின்றன, எப்போது அழிக்கப்படுகின்றன என்பது பற்றிய கால சாஸ்திரம் இது. அறுவடைகள், விதைப்பது எப்படி, வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் கால சாஸ்திரம் விளக்குகிறது.

மாயா வாத சாஸ்திரம் : 20 வகை மாஜிக் கலைகளை விளக்கும் சாஸ்திரம் இது. மாயமாக மறைவது, திருப்பி வருவது உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் வித்தைகள் இதில் விளக்கப்படுகின்றன.

இது தவிர மருத்துவ சாஸ்திரம் உள்ளிட்ட ஏராளமான சாஸ்திரங்களின் உள்ளார்ந்த இரகசியங்கள் பாரதீய விஞ்ஞானத்தில் உள்ளன.

அனைத்தையும் விளக்க ஒரு தனி நூலே தேவை.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை நவீன விஞ்ஞானிகள் உருவாக்கியது பாரத தேசத்தின் புராதன நூல்களை வைத்தே தான் என்பதும் நியூமரலாஜி நிபுணரான சீரோ தஞ்சாவூரில் தான் இதைக் கற்றார் என்பதும் நவீன கால புத்தகங்கள் ஆதாரங்களுடன் விளக்க ஆரம்பித்துள்ளன என்பது தான்.

பண்டைய பாரதத்தின் மேன்மையை ஆராய்ந்து பல ஆய்வாளர்கள் இப்போது அதை வெளி உலகிற்கு கொண்டு வருவது ஒரு நல்ல சகுனம்!

வல்லரசாக பாரதம் மிளிரும் தருணம் வந்து விட்டது!

–subham–
Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    அரிய பழைய நூல்களை ஆராய்ந்து வெளியுலகிற்கு அறிமுகப் படுத்துவது அவசியம் தான். ஆனால் இங்கு மிகுந்த எச்சரிக்கை தேவை.
    இன்று சம்ஸ்க்ருதம் இந்தியாவில் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது, இளைய தலைமுறையினர் அதிகம் படிப்பதில்லை. ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் மிகவும் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருத மூலத்தை நாடாமல் மொழிபெயர்ப்புகளையே நம்பி இருக்கிறோம். இந்த மொழிபெயர்ப்பாளர்களின் தகுதி, திறமை என்ன, அவர்கள் நோக்கம் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.
    ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிஞர்கள் சம்ஸ்க்ருதத்தை தீவிரமாகக் கற்றுவருகின்றனர். ஒரு சாரார், அதை வைத்தே விஷயங்களைத் திரித்து எழுதி வருகின்றனர். ( eg. Wendy Doniger, Sheldon Pollock, Michael Witzel) இவர்கள் பலகலைக் கழகங்களுடன் சம்பந்தப்படிருப்பதால் இவர்கள் எழுதுவது உடனடியாக உலகம் முழுதும் பரவிவிடுகிறது. Their ideas/opinions occupy default position and Hindus are forced to be defensive! This is a vulgar tactic.

    இனி,இரண்டாவது வகையினர் . இவர்கள் நம் கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவற்றை உருமாற்றம் செய்து புதிய மேலை நாட்டு கண்டுபிடிப்புக்கள் போல் உலவச் செய்கின்றனர். Ken Wilber இத்தகையோருள் ஒருவர்.
    நம்மவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  May 20, 2019

    correct. From Max Muller to the present day scholars – to this day it is the same story. So why should not we or our Government could take steps to publish all of these manuscripts. Sanskrit Academy mylapore chennai, Saraswathi mahal , Tanjore, Bhandarkar institute Pune – these institutions should be encouraged with enormous funds. Then only we will get the correct books and correct technology of our own.
    thanks for the cautious note.

Leave a comment