
Written by S.NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 25 May 2019
British Summer Time uploaded in London – 6-41 AM
Post No. 6439
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
மே 2019 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா?
மூலம் : Mark Hyman தமிழாக்கம் : ச.நாகராஜன்
ஏன் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள் அல்லது பருமனாக இருக்கிறீர்கள், காரணம் தெரியுமா?
உங்களின் ஜீரண மண்டல உள் குழாயில் (inner tube) ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது, அதனால் தான் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள், பருமனாக ஆகி விடுகிறீர்கள்!
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக் கூட நீங்கள் உணராமலேயே இருக்கலாம். ஆனால் உடல் பருமன் அல்லது சில ஆரோக்கியப் பிரச்சினைகள் என உங்களுக்கு ஏற்பட்டால் அது உங்கள் உள் குழாய் சரியில்லை, அதுவே அடிப்ப்டைக் காரணம் என்பதாக இருக்கலாம் அதாவது உங்கள் ஜீரண அமைப்பு சரியில்லை என்பதே காரணம். ஏதோ ஒரு ஜீரணக் கோளாறு – இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome), வயிற்று உப்புசம், மலச்சிக்கல், டயரியா, மார்பு எரிச்சல், வாயுக் கோளாறு, reflux எனப்படும் பின்னொழுக்கு, இன்னும் சொல்ல முடியாத சில பிரச்சினைகள் போன்றவற்றுள் ஒன்றால் நீங்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி பேர்கள் ஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் அதிக விற்பனையாகும் ‘டாப் டென்’ மருந்துகளில் இரண்டு ஜீரணக் கோளாறைப் போக்குவதற்கான மருந்துகளே ஆகும். பற்பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றை மக்கள் வாங்குகிறார்கள்! சுமார் 200 மருந்துகள் ஜீரணக் கோளாறைப் போக்க விற்பனையாகின்றன; ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவற்றில் பலவற்றைச் சாப்பிடுவதால் கோளாறு அதிகமாகிறதே தவிர நிவாரணம் கிடைப்பதில்லை! குடல் கோளாறுகளுக்காக மக்கள், மருத்துவர்களை நாடுவது மிகவும் அதிகமாகி வருகிறது.
ஜீரணக் கோளாறுகள் ஒவ்வாமையை உருவாக்குகிறது, மூட்டுவாதத்தை ஏற்படுத்துகிறது, auto immune disease எனப்படும் தன் எதிர்ப்பு நோயை உருவாக்குகிறது, நிலை தடுமாற்றம், கான்ஸர், தொடர்ந்து இருக்கும் சோர்வு, உடம்பில் தடிப்புகள், முகப்பருக்கள் என இப்படி உடலில் பல வியாதிகளை இது ஏற்படுத்துகிறது. ஆகவே ஜீரண அமைப்பானது உங்கள் உடலில் ஏற்படும் அனைத்துடனும் தொடர்பு கொண்ட ஒன்று.
இப்போது நாம் குடல் நாளத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை எப்படி அறிவது என்று பார்க்கலாம். நல்ல உடல் நலத்தை உறுதி செய்ய உள்ள முக்கியமான ஏழு காரணங்களில் ஜீரணம் என்பது நான்காவது முக்கியமான காரணம் ஆகும்.
Intestinal Health அல்லது குடல்நாள ஆரோக்யம் என்பது சீரான ஜீரணம், உட்கொள்ளுதல், தன்மயமாக்கல் என வரையறுக்கப்படுகிறது.
முதலாவதாக, மழைக்காடுகளில் உள்ளச் சுற்றுப்புறச் சூழலில் பல்வேறுபட்ட ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாக பல அமைப்புகள் உள்ளன. அதே போல குடல் நாளத்தில் 500 உயிரினங்களும் 3 பவுண்டு பாடீரியாவும் உள்ளன. குடல் நாளம் ஒரு பெரிய கெமிக்கல் ஃபாக்டரியாக இயங்கி நீங்கள் சாப்பிட்ட உணவுப் பொருள்களை ஜீரணிக்க வைத்து, ஹார்மோன்களைச் சீராக்கி, விஷப்பொருளளைப் பிரித்தெடுத்து, விடமின்களையும் இதர முக்கிய உடல்நலத்தைப் பேணிக்காக்கும் கூட்டுபொருள்களையும் உருவாக்கி உங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த நட்பான பாக்டீரியாக்கள் சீராக இருப்பது அவசியமாகிறது. ஒட்டுண்ணிகளும், நுரைமங்களும் (Parasites and yeasts) போன்ற தப்பான பாக்டீரியாக்கள் நல்லவை அல்ல.
ஒரு முக்கியமான விஷயம், குடல் நாள் ஆரோக்கியம் என்பது உடல் நல ஆரோக்கியம் என்பதாகும். எக்ஸிமா, சொரியாஸிஸ், மூட்டுவாதம் போன்றவைக்கும் ஜீரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அவை ஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகின்றன.

இரண்டாவதாக குடல்நாளத்தில் நோய் எதிர்ப்பு (Gut immune system) அமைப்பு உள்ளது. உங்களின் முழு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் குடல் நாளத்தால் பாதுகாக்கப்படும் ஒன்றாகும். குடல் நாளத்தில் ஒரே ஒரு செல்லின் கனமே (One cell-thick layer) விஷப்பொருள்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இந்த எல்லை பாதிக்கப்பட்டால் சாதாரணமாக ஜீரணமாகும் பொருள்களே ஒவ்வாமைப் பொருள்களாக மாறி உங்களை நோய்வாய்ப்படுத்தும். கெட்ட மாலிக்யூல்களை அகற்றி நல்லனவற்றை வடிகட்டி எடுத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பது குடல் நாளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத ஒன்றாகும்.
மூன்றாவதாக இரண்டாவது மூளை எனப்படும் குடல் நாள நரம்பு மண்டல அமைப்பானது மூளையில் உள்ள ந்யூரோ டிரான்ஸ்மிட்டர்களை விட அதிகமான அளவு அதைக் கொண்டுள்ளது என்பது வியப்பூட்டும் ஒரு செய்தி. உண்மையில் குடல் நாளம் தனக்கெனவே ஒரு மூளையைக் கொண்டுள்ளது. அதை “enteric nervous system” என்று அழைக்கின்றனர். அது உடலியலில் மூளையுடன் நுண்ணியமான வழிகளில் தொடர்பைக் கொண்டுள்ள ஒரு அதி நவீன அமைப்பாகும்.
குடல் நாள மூளைக்கும் தலையில் உள்ள மூளைக்கும் தகவல்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டு வருகின்றன. அந்தத் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு நேரிடும்.
நான்காவதாக, வளர்சிதை மாற்றத்தினால் துணைப் பொருள்களாக உருவாக்கப்படும் விஷங்களை உங்கள் குடல் நாளம் அகற்ற வேண்டும். அவற்றை கல்லீரல் பித்தப்பையில் தள்ளுகிறது. மலச்சிக்கல் ஏற்படும் போது உங்கள் உடலில் விஷங்கள் பாதிப்பு ஏற்பட அதனால் நோய் உருவாகிறது.
இறுதியாக உங்கள் குடல் நாளமானது நீங்கள் உட்கொண்ட உணவை சிறு துகள்களாக ஆக்கி அதில் உள்ள விடமின்கள், தாதுப் பொருள்கள் ஆகியவற்றை ஒரு திசு கனமுள்ள அடுக்கில் அனுப்பி, அதை இரத்த ஓட்டத்தில் சேர்த்து உங்கள் உடலையும் மூளையையும் சத்துள்ளதாக ஆக்க வேண்டும்.
உங்கள் குடல் நாளம் நிறைய விஷயங்களை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கச்சிதமான உலகில் கூட அனைத்தையும் சீராக வைப்பது என்பது கடினமான காரியமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த அதி நவீன உலகில் ஜீரண அமைப்பை சீராக வைத்துக் கொள்வது என்பது இன்னும் அதிக கஷ்டமான காரியம். ஏனெனில் ஜீரண அமைப்பை அதல பாதாளத்தில் தள்ளி விடும் அளவில் ஏராளமான சிக்கல்களை நவீன உலகம் ஏற்படுத்துகிறது!
உங்கள் குடல் நாளம் சீராக இல்லை என்பதை எப்படி உணர்வது?
அதை அடுத்துக் காண்போம்.
– தொடரும்
