


WRITTEN BY S. NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 14 JULY 2019
British Summer Time uploaded in London –5-25 AM
Post No. 6626
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
அற்புத ஆலயங்கள்
ஆச்சரியமூட்டும் சூரிய பூஜை ஸ்தலங்கள்!
ச.நாகராஜன்
ஹிந்து பண்பாட்டின் சிகரமாக விளங்குபவை நமது ஆலயங்கள். அற்புதமான அமைப்பைக் கொண்டிருக்கும் ஆலயங்களில் ஒரு அதிசயமாக விளங்குபவை சூரிய பூஜை ஸ்தலங்கள்.
சிவன் கோவில்களில் சூரியனுக்குத் தனி இடம் ஒன்று உண்டு. சிவ பூஜையில் சூரிய பூஜைக்குத் தனியான இடம் உண்டு.
சூரியனுக்கென்றே தனியாகக் கோவில்களும் உண்டு; சில சிவன் கோவில்களில் தனி இடமும் உண்டு.


சூரியனைத் தொழுவதால் பாவம் தொலையும்; புண்ணியம் சேரும்; ஆக இது இனி வரும் பிறவிகளுக்கான நல்ல ஒரு அஸ்திவாரமாக அமையும்.
சூரிய வழிபாடு உடல் நலத்தை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கச் செய்து பூரண ஆயுளை நல்கும். சூரிய நமஸ்காரம் நல்ல பல உடற்பயிற்சிகளை முறையாகத் தொகுத்து நம்மை மேம்பட வைக்கும் ஒரு யோகா பயிற்சி.
அடுத்து சூரிய வழிபாடு எதிரிகளை அழிக்கும். புற எதிரிகளையும் அழிக்கும், அகத்திலே தோன்றுகின்ற காம, க்ரோதம் போன்றவற்றையும் அகற்றும்.
அது ஜயத்தைத் தரக் கூடியதும் கூட. இராமரே அகஸ்தியரால் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கப்பட்ட பின்னரே இராவணனை அழிக்கிறார்.
பரம மங்களகரமானது. ஐஸ்வர்யத்தையும், பல சித்திகளையும் நல்க வல்லது.
ஒரிஸாவில் புவனேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ள கொனார்க் சூரிய கோவில் கற்களினால் அமைந்தது. அற்புத சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது.
குஜராத்தில் உள்ள மெசேனா மாவட்டத்தில் புஷ்பவதி நதி தீரத்தில் மொதிராவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சூரியன் கோவில் ஒரு உலக அதிசயம்.
இரவும் பகலும் சம கால நேரங்களாக வரும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் (Spring and Autumnal Equinoxes) சூரிய ஒளி நேராக மூலக் கோயிலில் விழுகிறது. அதாவது சூரிய பூஜை நிகழ்கிறது.
இப்படி சூரிய ஒளி நேராக கர்பக்ருஹத்தில் விழுந்து சூரியன் இறைவனை பூஜிக்கும் ஸ்தலங்கள் பாரதம் நெடுக ஏராளம் உண்டு.
தொகுப்பின் ஒரு பெரிய கலைக்களஞ்சியமாகி விடும்.
சூரியன் பூஜித்த தலங்கள் 12.
1.கேதாரம்
2. திருக்கோலக்கா – சூரிய புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
3. திருவெண்காடு – சூரிய புட்கரிணி; ஆவணி ஞாயிறு விசேஷம்
4. சாயாவனம் – ஆதித்ய புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
5. கருங்குயில்நாதபுரம் – மித்திர புட்கரிணி; காவேரியில் கார்த்திகை ஞாயிறு விசேஷம்
6. திருத்துருத்தி – ரவி தீர்த்தம்; கார்த்திகை ஞாயிறு காவேரியில் விசேஷம்
7. ஸ்ரீ வாஞ்சியம் – பூஷண தீர்த்தம்; குப்த கங்கை; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
8.திருநாகேஸ்வரம் – சக்தி தீர்த்தம், கார்த்திகை ஞாயிறு விசேஷம்

8.திருநாகேஸ்வரம் – சக்தி தீர்த்தம், கார்த்திகை ஞாயிறு விசேஷம்
9.குடந்தைக் கீழ்க்கோட்டம் – காவேரியில் மரீசி தீர்த்தம்; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
10. தேர்தகையூர் (தேதியூர்) – அர்க்க புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
11.மீயச்சூர் – ரத ஸப்தமி
12. திருவாவடுதுறை – ரத ஸப்தமி ; மீயச்சூரிலும் திருவாவடுதுறையிலும் திதி விசேஷம். இந்த திதியில் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்தால் மஹா யோகம்.
இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள இடங்கள் – மீயச்சூர், திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் ஆகியவை.
சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்களில் குறிப்பிடத்தகுந்தவை – இன்னம்பர் ( இனன் என்றால் சூரியன்), திருவையாறு, திருத்தானமுடையார் கோயில், திருக்கழுக்குன்றம், பருத்திநியமம், ஆடானை
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலக் கோயிலில் விழும் கோயில்கள் பல. மாதவாரியாக அப்படி அதிசய நிகழ்வு ஏற்படும் ஸ்தலங்களின் பட்டியல் வருமாறு :



சித்திரை
1,2,3 தேதி கூடலை ஆற்றூர்
1 முதல் 7 தேதி புறவார் பனங்காட்டூர்
5,6,7 தேதி ஆடுதுறை
7 முதல் 18 முடிய 12 நாட்கள் செம்பொன்பள்ளி
11,12,13 தேதி குடந்தைக் கீழ்க்கோட்டம் – நாகேஸ்வர ஸ்வாமி
புரட்டாசி
7,8,9 தேதி பைஞ்ஞீலி
19,20,21 தேதி புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
19,20,21 கடவூர் (மாலையில்)
ஐப்பசி
9 முதல் 15 முடிய (7 நாட்கள்) எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
14ஆம் தேய்பிறை நாள் முதல் 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
மாசி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
13,14,15 கண்டியூர் (மாலையில்)
17 முதல் 21 முடிய 5 நாட்கள் குன்றத்தூர் (சேக்கிழார்)
18 முதல் 24 முடிய 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
19,20,21 புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
21 முதல் 25 முடிய 5 நாட்கள் பூந்தமல்லி வைத்தியநாதர்
23,24,25 அழுந்தூர்
பங்குனி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் மாயூரம் வள்ளலார் கோவில் (மாலையில்)
7,8,9 பைஞ்ஞீலி
12,13,14 சித்தூர் மாவட்டம் நாகலாபுரம்
13 முதல் 22 முடிய 10 நாட்கள் தெளிச்சேரி (மாலையில்)
13,14,15 வேதிகுடி, திருத்தணி ஆறுமுகசாமி
23 முதல் 27 முடிய 5 நாட்கள் நாவலூர்
25 முதல் 29 முடிய 5 நாட்கள் மாயூர வட்டம் பொன்னூர்
மேற்குறித்த தேதிகளுக்கு ஆதாரமாக இருப்பவை சிவத்தல மஞ்சரியும் பஞ்சாங்கங்களும் ஆகும்.
இன்னும் மதுரை, லால்குடி, காவிரி தென்கரையில் உள்ள கண்ணம்பாடி அருகில் உள்ள இடத்துறை என்பன போன்ற இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
திருப்பனந்தாளில் சூரிய தீர்த்தம் புழுதிகுடி மடத்திற்குப் பின்னால் உள்ளது.இங்கு பைரவர் காவலாக இருக்கிறார். சூரியன் பூஜித்தது பாஸ்கர லிங்கம்.
மதுரை மாரியம்மன் கோவிலின் அருகில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய, செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய சூரிய ஒளிகிரணம் மூலவர் மீது விழுகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த நாட்களில் கூடுவது வழக்கமாகி விட்டது!
இன்னும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சூரியனார் கோவில்
உள்ளிட்ட புகழ் பெற்ற தலங்களின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது. சூரிய என்சைக்ளோபீடியா தான் தயாரிக்க வேண்டும்!
இப்படிப்பட்ட கோவில்களின் சிற்ப அமைப்பை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.
சூரியனின் ஒளிக்கிரணங்கள் நேராக மூலவர் மேல் விழும்படி எப்படி சிற்பிகள் கோவிலை நிர்மாணித்தனர், கிழக்கு நோக்கிய கோவில்களில் காலையிலும் மேற்கு நோக்கிய கோவில்களில் மாலையிலும் காலம் காலமாக இன்று வரை சூரிய கிரணங்கள் எப்படி விழுகின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் பாரதத்தின் சிற்பக் கலையின் மேன்மையையும், நமது பக்தியின் உச்ச நிலையையும் உணர்ந்து மகிழலாம்.
இப்படி சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு அந்த நாட்களில் அந்த வேளையில் சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.
இந்த நாட்கள் பெரும்பாலான இடங்களில் சௌரமான கணக்குப்படி அமைந்திருப்பதும் ஒரு அதிசயமே.
சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் சென்று நாமும் வணங்கி வழிபட்டு மேன்மை அடையலாம்!
****


